சுதேச மருத்துவ ஊக்குவிப்பு, கிராமிய மற்றும் ஆயுர்வேத மருத்துவமனைகள் அபிவிருத்தி மற்றும் சமூக சுகாதார அமைச்சருடன் தூதுவர் புனித பீட்டர்ஸ்பேர்க்கிற்கு விஜயம்

 சுதேச மருத்துவ ஊக்குவிப்பு, கிராமிய மற்றும் ஆயுர்வேத மருத்துவமனைகள் அபிவிருத்தி மற்றும் சமூக சுகாதார அமைச்சருடன் தூதுவர் புனித பீட்டர்ஸ்பேர்க்கிற்கு விஜயம்

ஆயுர்வேத ஆணையாளர் வைத்தியர் எம்.டி.ஜே. அபேகுணவர்தன மற்றும் இராஜாங்க அமைச்சரின் தனிப்பட்ட செயலாளர் திரு. கயா காஞ்சன ஆகியோரை உள்ளடக்கிய சுதேச மருத்துவ ஊக்குவிப்பு, கிராமிய மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலைகள் அபிவிருத்தி மற்றும் சமூக சுகாதார இராஜாங்க அமைச்சர் கௌரவ சிசிர ஜயக்கொடி தலைமையிலான குழுவினருடன் ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் பேராசிரியர் மாண்புமிகு ஜனிதா ஏ. லியனகே 2021 டிசம்பர் 16-18 வரையான காலப்பகுதியில் புனித பீட்டர்ஸ்பேர்க்கிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.

இந்த விஜயத்தின் நிகழ்ச்சியில் ரஷ்யக் கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சின் புனித பீட்டர்ஸ்பர்க் பிரதிநிதி அலுவலகத்தின் தலைவர் கௌரவ ஜபேவலோவ் உடனான சந்திப்பும் இடம்பெற்றது. இதன்போது, கல்வி, சுகாதாரம், வர்த்தகம் மற்றும் பொருளாதாரம், சுற்றுலா, தேயிலை, புனித பீட்டர்ஸ்பேர்க்கில் இலங்கை வர்த்தக நிலையத்தை திறந்து வைத்தல், புனித பீட்டர்ஸ்பர்க்கில் ஆயுர்வேத ஆரோக்கிய நிலையங்களை திறந்து வைத்தல், புனித பீட்டர்ஸ்பர்க்கில் இருந்து இலங்கைக்கு நேரடி விமானங்களை இயக்குதல் உள்ளிட்ட ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இருதரப்பினரும் கலந்துரையாடினர்.

புனித பீட்டர்ஸ்பர்க் அரசாங்கத்தின் பிரதிநிதிகள், வெளிநாட்டு உறவுகள், வெகுஜன ஊடகங்கள், பொது சுகாதாரம், சுற்றுலா அபிவிருத்தி, கல்வி போன்ற குழுக்களின் தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்கள் உட்பட பிரதிநிதிகளுடன் இந்த தூதுக்குழுவினர் சந்திப்பொன்றில் ஈடுபட்டனர். புனித பீட்டர்ஸ்பேர்க் மற்றும் இலங்கைக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், புனித பீட்டர்ஸ்பேர்க் மற்றும் கொழும்பு நகரங்களுக்கிடையேயான சகோதர உறவுகள், வர்த்தகம், சுற்றுலா, தேயிலை, கல்வி, ஆரோக்கியம், கலாச்சாரம் போன்றவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இலங்கை வர்த்தக நிலையத்தை திறந்து வைத்தல், இலங்கை ஆயுர்வேதம் மற்றும் சுதேச மருத்துவத்தை மேம்படுத்துதல், புனித பீட்டர்ஸ்பர்க்கில் இருந்து நேரடி விமானங்களை இயக்குதல் மற்றும் ஏனைய விடயங்கள் குறித்து இரு தரப்பினரும் இந்த சுமுகமான கலந்துரையாடலின் போது உரையாடினர்.

கௌரவத் தூதுவரின் அலுவலகத்தை சம்பிரதாயபூர்வமாக திறந்துவைத்தமை இந்த விஜயத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றாக அமைந்திருந்தது. இந்த விழாவில் ரஷ்ய நகர அரசாங்கம் மற்றும் வெளியுறவு அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த விஜயத்தின் போது கௌரவ தூதுவர் திரு. வக்ரம் ஜகார்யன் ஒவ்வொரு கட்டத்திலும் தூதுக்குழுவுடன் இணைந்து தூதுக்குழுவிற்கு மிகுந்த ஆதரவை வழங்கினார்.

ஆயுர்வேதம், தேயிலை ஊக்குவிப்பு மற்றும் இறக்குமதி மற்றும் ஏனைய விடயங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக, ரஷ்யா-இலங்கை நட்புறவுச் சங்கத்தின் புனித பீட்டர்ஸ்பேர்க் கிளையின் தலைவர் திருமதி. அன்னா பாய்கோவா மற்றும் ரூபின் வர்த்தக மையம் மற்றும் அருங்காட்சியகத்தின் பொதுப் பணிப்பாளர் திரு. அலெக்சாண்டர் சுடோக் ஆகியோர் பிரதிநிதித்துவப்படுத்திய ரூபின் வர்த்தக மையத்தில் அமைந்துள்ள ரஷ்யா-இலங்கை நட்புறவுச் சங்கத்தின் புனித பீட்டர்ஸ்பேர்க் கிளைக்கு விஜயம் செய்தமை இந் நிகழ்ச்சியின் மற்றுமொரு விஷேட அம்சம் ஆகும்.

விஜயத்தின் நிறைவில், தூதுக்குழுவினர் புனித பீட்டர்ஸ்பர்க் மாவட்டத்தில் உள்ள ஓர்த்தடொக்ஸ் தேவாலயத்தின் தலைமைப் பாதிரியாரை மரியாதை நிமித்தம் சந்தித்து, உடல் மற்றும் மனநலம் குறித்து கலந்துரையாடினர்.

இலங்கைத் தூதரகம்

மொஸ்கோ

 2021 டிசம்பர் 31

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close