வெளிநாட்டு உறவுகள் அமைச்சர்

மாண்புமிகு பேராசிரியர் காமினி லக்ஷ்மன் பீரிஸ்
வெளிநாட்டு உறவுகள் அமைச்சர்

மாண்புமிகு பேராசிரியர் காமினி லக்ஷ்மன் பீரிஸ் 2021 ஆகஸ்ட் 16ஆந் திகதி வெளிநாட்டு அமைச்சராக நியமிக்கப்பட்டார். மாண்புமிகு அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் அரசியல் மற்றும் நிர்வாகத்தில் ஏறக்குறைய மூன்று தசாப்தங்களாக பணியாற்றியதுடன், முன்னதாக உயர்கல்வித் துறையில் சேவையாற்றிய அவர், 1994 முதல் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து வருகின்றார்.

கல்வி அமைச்சர் (15.08.2021 வரை), வெளிவிவகார அமைச்சர், ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர், நீதி மற்றும் அரசியலமைப்பு அலுவல்கள் அமைச்சர், இன விவகாரங்கள் மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர், நிறுவன அபிவிருத்தி, முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் தொழில்துறைக் கொள்கை அமைச்சர் மற்றும் பிரதி நிதி அமைச்சர் உள்ளடங்கலாக மாண்புமிகு ஜீ.எல். பீரிஸ் பல அமைச்சுப் பதவிகளை வகித்துள்ளார். மேலும், அவர் கௌரவ பிரதமரின் சிரேஷ்ட ஆலோசகராகவும், அரசியலமைப்பு சீர்திருத்தங்களுக்கான சர்வ கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவராகவும், 2002 செப்டம்பர் முதல் 2003 மார்ச் வரை தமிழீழ விடுதலைப் புலிகளுடனான 6 சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் அரசாங்கப் பிரதிநிதிகளின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவி வகித்த அமைச்சர் பீரிஸ் உயர்கல்வித் துறையில் 25 வருட கல்வி மற்றும் நிர்வாக அனுபவம் பெற்றவராவார். பேராசிரியர் பீரிஸ் ரோட்ஸ் அறிஞராவதுடன், ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் அனைத்து சோல்ஸ் கல்லூரியின் வருகை தரு உறுப்பினரும், கேம்பிரிட்ஜ், கிறிஸ்ட் கல்லூரியின் முன்னாள் புகழ்பெற்ற வருகை தரு உறுப்பினரும், எஸ்.எம்.யு.டி.எஸ். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொதுநலவாய கற்கைகளின் வருகை தரு உறுப்பினரும் மற்றும் பட்டர்வொர்த் லண்டன் பல்கலைக்கழகத்தின் மேம்பட்ட சட்டக் கல்வி நிறுவனத்தில் வருகை தரு உறுப்பினரும் ஆவார். ஜனசவிய அறக்கட்டளை நிதியின் துணைத் தலைவர், இளைஞர்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினர், பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் உறுப்பினர், இலங்கை சட்ட ஆணைக்குழுவின் ஆணையாளர், இலங்கை தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் பதில் தலைவர் மற்றும் இலங்கை சட்ட ஆணைக்குழுவின் அறிக்கைத்தாளின் பதிப்பாசிரியர் ஆகிய பதவிகளையும் அவர் மேலும் வகித்துள்ளார்.

மாண்புமிகு ஜீ.எல். பீரிஸ், 1987ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று தேசிய மரியாதைப் பட்டியலில் அதிமேதகு ஜனாதிபதியடமிருந்துஉண்மையான ஆராய்ச்சியை உள்ளடக்கிய விதிவிலக்கான அறிவியல் சாதனைகளுக்கான‘ ‘வித்யா ஜோதிஎன்ற பட்டத்தைப் பெற்றார். அமைச்சர் பீரிஸ் 1967இல் இளங்கலை சட்டம் (முதலாம் வகுப்பு, இலங்கை) மற்றும் 1971இல் தத்துவ முனைவர் பட்டம் (ஒக்ஸ்போர்ட்) மற்றும் 1974இல் முனைவர் பட்டம் (இலங்கை) பெற்றார். அவர் கல்கிசை புனித தோமஸ் கல்லூரியின் பழைய மாணவராவார். 1946 ஆகஸ்ட் 13ஆந் திகதி பிறந்த அவர், திருமணமாகி, ஒரு குழந்தைக்கு தந்தையுமாவார்.

 

 

 

Print Friendly, PDF & Email

Close