திருமதி அருணி ரணராஜா வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர்
திருமதி. அருணி ரணராஜா, 1996 இல் இலங்கை வெளிநாட்டுச் சேவையில் இணைந்தார். தனது, இருபத்தெட்டு வருட கால இராஜதந்திர தொழிற்சேவைக்காலத்தில், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு மற்றும் வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களில் பல பதவிகளில் பணியாற்றியுள்ளார்.
அவர் செயலாளராக நியமிக்கப்படுவதற்கு முன்பு, இவ்வமைச்சின் மேலதிகச் செயலாளராகவும், நெறிமுறைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். அவர் நெதர்லாந்து இராச்சியத்திற்கான இலங்கையின் தூதுவராகவும், 2021, ஏப்ரல் முதல் 2024 ஏப்ரல் வரை இரசாயன ஆயுதங்களைத் தடை செய்வதற்கான அமைப்பின் (OPCW) நிரந்தர பிரதிநிதியாகவும் பணியாற்றியுள்ளார். இதற்கு முன்பு அவர் பிலிப்பைன்ஸிற்கான இலங்கையின் தூதுவராக (2015- 2019) பணியாற்றியுள்ளதுடன், இலங்கைக்கும் பிலிப்பைன்ஸிற்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்களிப்பை பாராட்டும் முகமாக, பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியால், அவருக்கு 2029, ஜூன் 18 அன்று தங்கப்பிரிவின் கிராண்ட் கிராஸ் (Datu) தரத்தின், ஆர்டர் ஆஃப் சிகட்டுனா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அவர் ஆற்றிய ஏனைய வெளிநாட்டு பணிகளில் பின்வருவன அடங்கும்: இத்தாலியின் ரோம் இலுள்ள இலங்கைத் தூதரகத்தில் மினிஸ்டர் பதவி (2010- 2013); ரஷ்ய கூட்டமைப்பின் மாஸ்கோவில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் மினிஸ்டர் இன் ஆலோசகர் பதவி (2007); தாய்லாந்தின் பாங்காகிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் ஆலோசகர் பதவி (2004-2007); மற்றும் பெல்ஜியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இலங்கைத் தூதரகத்திற்கானஇரண்டாம் நிலைச் செயலாளர் பதவி (1999-2002) ஆகியவை அவர் வகித்த ஏனைய வெளிநாட்டு பதவிகளாகும்.
கொழும்பில் உள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில், தெற்காசியா மற்றும் சார்க் பிரிவு, ஆபிரிக்கப்பிரிவு, ஐக்கிய நாடுகளுக்கான பலதரப்பு விவகாரங்கள், மனித உரிமைகள் மற்றும் மாநாடுகள் பிரிவு ஆகியவற்றின் பணிப்பாளர் நாயகமாகவும், தூதரக அலுவல்கள் பிரிவு, ஐக்கிய நாடுகளுக்கான பலதரப்பு விவகாரங்கள், மனித உரிமைகள் மற்றும் மாநாடுகள் பிரிவு, கிழக்கு ஆசியா மற்றும் பசுபிக் பிரிவு, மற்றும் ஐரோப்பியப் பிரிவு, பொதுநலவாயத்தின் சுயாதீன நாடுகள் மற்றும் தெற்காசியா மற்றும் சார்க் பிரிவு ஆகியவற்றின் பணிப்பாளராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.
அவரது இராஜதந்திர தொழிற்சேவைக்காலத்தில், அவர் அரசியல் முதல் சமூக மற்றும் பொருளாதாரத் துறைகள் வரை பரந்த அளவிலான பலதரப்பு மற்றும் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் / இராஜதந்திரத்தில் விரிவான அனுபவத்தைக் கொண்டுள்ளார். அவர் பிம்ஸ்டெக், ஆசியக் கூட்டுறவு உரையாடல்கள், குழு 15, அயோரா மற்றும் சார்க் ஆகிய அமைப்புக்களுக்கான பிரதான ஒருங்கிணைப்பு அதிகாரியாகப் பணியாற்றியுள்ளார். 2013 இல், கொழும்பில் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டை (CHOGM) நடத்துவதற்கான முக்கிய குழுவில் அவர் உறுப்பினராகவும் அங்கத்துவம் வகித்துள்ளார்.
திருமதி ரணராஜா உக்ரைன் அரச பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகளில் முதுகலைப் பட்டத்தையும் அதே பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகளில் இளங்கலைப் பட்டத்தையும் பெற்றுள்ளார். கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச கற்கைகளுக்கான மையத்தில் (BCIS) சர்வதேச விவகாரங்களில் முதுகலை டிப்ளோமாவையும் பெற்றுள்ளார்.
அவரது தாய்மொழிக்கு மேலதிகமாக, அவர் ஆங்கிலம் மற்றும் ரஷ்ய மொழிகளில் தேர்ச்சியையும் மற்றும் ஜப்பானிய மொழியில் மட்டத்திலான திறனையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.