தூதுவர் பேராசிரியர் ஜனித அபேவிக்ரம லியனகே மோல்டோவா ஜனாதிபதி மையா  சண்டுவிடம் தனது நற்சான்றிதழ்களை கையளிப்பு

 தூதுவர் பேராசிரியர் ஜனித அபேவிக்ரம லியனகே மோல்டோவா ஜனாதிபதி மையா  சண்டுவிடம் தனது நற்சான்றிதழ்களை கையளிப்பு

மோல்டோவா குடியரசிற்கும் ஒரே நேரத்தில் அங்கீகாரம் பெற்ற இலங்கைத் தூதுவர் பேராசிரியர் ஜனித அபேவிக்ரம லியனகே, 2021 டிசம்பர் 22ஆந் திகதி சிசினோவில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற சம்பிரதாயபூர்வமான விழாவில் வைத்து மோல்டோவா குடியரசின் ஜனாதிபதி மையா சாண்டுவிடம் தனது நற்சான்றிதழ் கடிதங்களை கையளித்தார்.

ஜனாதிபதி சண்டுவுடனான சந்திப்பின் போது,இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அன்பான வாழ்த்துக்களையும், இலங்கைக்கும் மோல்டோவாவிற்கும் இடையிலான பரஸ்பர நலன்கள் சார்ந்த பல துறைகளில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான விருப்பத்தையும் தூதுவர் லியனகே தெரிவித்தார். மோல்டோவாவின் ஜனாதிபதி தனது கருத்துக்களில், இலங்கை ஒரு  புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக இருப்பதை நினைவுகூர்ந்ததுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் மோல்டோவா ஆர்வமாக இருப்பதாகத் தெரிவித்தார்.

நற்சான்றிதழ்களை சம்பிரதாயமாக சமர்ப்பிப்பதற்கு முன்னர், தூதுவர் லியனகே, மோல்டோவா  குடியரசின் அரச இராஜதந்திர உபசரணைத் தலைவர் மிஹைல் பர்புலட்டை தனது நற்சான்றிதழ்களின் திறந்த பிரதிகளை வழங்குவதற்காகச் சந்தித்தார். வெளிநாட்டு அமைச்சின் ஆசிய, ஆபிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் பசுபிக் பிரிவு மற்றும் மோல்டோவா ஐரோப்பிய ஒருங்கிணைப்பு பிரதானி ஈ.எஸ். அனடோல் வான்ஹெலியையும் சந்தித்த தூதுவர் லியனகே, இருதரப்பு அரசியல் உறவுகள், வர்த்தகம், சுற்றுலா, கல்வி மற்றும் கலாச்சாரம் உட்பட பல துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை முன்னெடுப்பதற்கான வழிகள் குறித்து கலந்துரையாடினார்.

மேலும், சுற்றுலா மற்றும் வர்த்தகத்தில் கூட்டு ஒத்துழைப்பு தொடர்பாக மோல்டோவாவின் முதலீடு மற்றும் சுற்றுலா முகவர் நிலையத்தின் பொதுப் பணிப்பாளர் ஸ்டெலியான் மாணிக்குடனும்,  இலங்கைத் தயாரிப்புக்களை ஊக்குவிப்பதற்காக வர்த்தக ஈடுபாடுகளுக்கான வாய்ப்புக்கள் தொடர்பாக மோல்டோவா வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் செர்கெய் ஹரியாவுடனும் தூதுவர் லியனகே ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.

மொஸ்கோவில் உள்ள இலங்கைத் தூதரகம் மோல்டோவா, ஆர்மீனியா, பெலாரஸ்,  கஸகஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு ஒரே நேரத்தில் அங்கீகாரம் பெற்றுள்ளது.

இலங்கைத் தூதரகம்,

மொஸ்கோ

2021 டிசம்பர் 31

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close