State Minister of Foreign Affairs

கௌரவ தாரக்க பாலசூரிய
வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர்

கௌரவ தாரக்க பாலசூரிய வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சராக 2022 செப்டம்பர் 08ஆந் திகதி நியமிக்கப்பட்டார். இரண்டாவது முறை நாடாளுமன்ற உறுப்பினரான இராஜாங்க அமைச்சர், இதற்கு முன்னர் 2020 ஆகஸ்ட் 12 முதல் 2022 மே 09 வரை பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சராக செயற்பட்டதுடன், ஏறக்குறைய ஒரு தசாப்தமாக அரசியலில் ஈடுபட்டு வருகின்றார்.

முதன்முதலில் 2015 இல் பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இராஜாங்க அமைச்சர் பாலசூரிய, 2019 நவம்பரில் புதிய அரசாங்கம் நிறுவப்பட்டதைத் தொடர்ந்து சமூகப் பாதுகாப்புக்கான இராஜாங்க அமைச்சர் பதவியை வகித்ததுடன், மே 2022 வரை பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சராக பணியாற்றினார். முன்னதாக, சப்ரகமுவ மாகாண சபையின் உறுப்பினராக செயற்பட்ட அவர் 2012 இல் அப் பதவிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.

கௌரவ பாலசூரிய, 2012 ஆம் ஆண்டு அரசியலுக்கு வருவதற்கு முன்னர் இலங்கையின் மிகப் பெரிய காப்புறுதி நிறுவனத்தில் கூட்டாண்மை வர்த்தகத் தலைவராக பணியாற்றியதுடன், காப்புறுதி மற்றும் வங்கித் துறைகளில் 15 வருட கூட்டாண்மை அனுபவத்தையும் உடையவராவார்.

அவர் விஸ்கொன்சின் பல்கலைக்கழகத்தில் கணிதம் மற்றும் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளதுடன், கார்டிஃப் மெட்ரோபொலிட்டன் பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். அவர் தனது ஆரம்பக் கல்வியை கொழும்பு சர்வதேசப் பாடசாலையில் பயின்றார்.

1974 ஏப்ரல் 16ஆந் திகதி ஜெர்மனியில் பிறந்த இவர், புகழ்பெற்ற அரசியல்வாதிகளின் குடும்பத்தைச் சேர்ந்தவராவார். இவரது தந்தை கலாநிதி ஜகத் பாலசூரிய முன்னாள் அமைச்சராகவும் வட மத்திய மாகாண ஆளுநராகவும் செயற்பட்டார். இவரது தாயார் குமாரி பாலசூரிய தென் மாகாண ஆளுநராக கடமையாற்றினார். அவரது பாட்டனார் பி.பி. பாலசூரிய பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார். மலிந்த பொலோங்கே என்பவரை மணந்துள்ள கௌரவ இராஜாங்க அமைச்சர், இரண்டு இளம் பெண் பிள்ளைகளின் தந்தையாவார்.

Close