உலகளாவிய காலாந்தர மீளாய்வின் 4வது சுழற்சியின் கீழ் இலங்கை மீளாய்வு செய்யப்படவுள்ளது

உலகளாவிய காலாந்தர மீளாய்வின் 4வது சுழற்சியின் கீழ் இலங்கை மீளாய்வு செய்யப்படவுள்ளது

உலகளாவிய காலாந்தர மீளாய்வின் 4வது சுழற்சியின் கீழான இலங்கையின் தேசிய அறிக்கையானது, ஜெனிவாவில் நடைபெறவுள்ள அதன் 42வது  அமர்வின் போது 2023 பெப்ரவரி 01ஆந் திகதி புதன்கிழமையன்று உலகளாவிய காலாந்தர மீளாய்வுக்கான ஐ.நா. செயற்குழுவினால் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

மனித உரிமைகளை மேம்படுத்தி, தமது மனித உரிமை சார்ந்த கடமைகளை நிறைவேற்றுவதற்காக ஒவ்வொரு அரசும் தேசிய அளவில் முன்னெடுத்த நடவடிக்கைகளை அறிவிப்பதற்கான வாய்ப்பை வழங்கும் வகையில், அரசுகளால் இயக்கப்படும் தன்னார்வமயமான சக மீளாய்வு செயன்முறையாக, 2006ஆம் ஆண்டில் உலகளாவிய காலாந்தர மீளாய்வு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையால் நிறுவப்பட்டது.

உலகளாவிய காலாந்தர மீளாய்வின் போது, குறிப்பிட்ட தெரிவு அல்லது பாகுபாடு இன்றி ஐ.நா.வின் அனைத்து 193 உறுப்பு நாடுகளும் மீளாய்வு செய்யப்படுகின்றன. இது காலாந்தர ரீதியாக, ஒவ்வொரு நான்கரை ஆண்டுகளுக்கும் ஒருமுறை மேற்கொள்ளப்படுகின்றது. ஒவ்வொரு ஆண்டும் 3 அமர்வுகள் நடாத்தப்படுவதுடன், ஒரு அமர்வில் 14 நாடுகள் மீளாய்வு செய்யப்படுகின்றன. ஐ.நா.வின் ஒவ்வொரு உறுப்பு நாடும் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை மீளாய்வு செய்யப்படுகின்றன.

2008 (முதலாவது), 2012 (இரண்டாவது) மற்றும் 2017 (மூன்றாவது) ஆகிய உலகளாவிய காலாந்தர மீளாய்வின் 3 சுழற்சிகளில் இலங்கை உட்பட அனைத்து ஐ.நா. உறுப்பு நாடுகளும் பங்கேற்றுள்ளன.

உலகளாவிய காலாந்தர மீளாய்வின் 4வது சுழற்சி 2022 நவம்பர் மாதத்தில் தொடங்கியதுடன், இலங்கையின் நான்காவது உலகளாவிய காலாந்தர மீளாய்வானது, 2023 பெப்ரவரி 01ஆந் திகதி ஜெனீவாவில் உள்ள உலகளாவிய காலாந்தர மீளாய்வு பணிக்குழுவின் 42வது அமர்வின் போது எடுத்துக்கொள்ளப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 2023 ஜனவரி 23 முதல் பிப்ரவரி 03 வரையிலான காலப்பகுதியில், உலகளாவிய காலாந்தர மீளாய்வின் 4வது சுழற்சியின் கீழ், 42வது பணிக்குழுவில் பின்வரும் நாடுகளும் மீளாய்வு செய்யப்படவுள்ளன: ஆர்ஜென்டினா, பெனின், செக்கியா, காபோன், கானா, குவாத்தமாலா, ஜப்பான், பாகிஸ்தான், பெரு, கொரியக் குடியரசு, சுவிட்சர்லாந்து மற்றும் சம்பியா.

உலகளாவிய காலாந்தர மீளாய்வின் 4வது சுழற்சியின் கீழ் இலங்கையின் தேசிய அறிக்கை 2022 டிசம்பர் 22ஆந் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுடன், கடந்த நவம்பர் 2017 இல் மேற்கொள்ளப்பட்ட உலகளாவிய காலாந்தர மீளாய்வுக்குப் பின்னர், நாங்கள் தானாக முன்வந்து ஏற்றுக்கொண்ட மனித உரிமைக் கடமைகளை நிறைவேற்றுவதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த சுய மதிப்பீட்டை வழங்குகின்றது. தேசிய அறிக்கையைத் தயாரிக்கும் செயன்முறை, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்பட்டது. அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பங்குதாரர்களுடன் விரிவான ஆலோசனைகள் நடாத்தப்பட்டன. இலங்கையின் தேசிய அறிக்கையை https://www.ohchr.org/en/hr-bodies/upr/lk-index இல் பெற்றுக்கொள்ளலாம்.

இந்த ஆண்டு மீளாய்வானது, கலப்பின வடிவத்தில் நடைபெறவுள்ளது. இதே காலகட்டத்தில் 75வது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளதன் காரணமாக, இலங்கையின் பிரதிநிதிகள் குழுவானது வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியின் தலைமையில் முன் பதிவு செய்யப்பட்ட காணொளி அறிக்கையின் மூலம் மீளாய்வில் பங்கேற்கவுள்ளது. ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி ஹிமாலி அருணதிலக்க அவர்களின் தலைமையில், ஜனாதிபதி செயலகம், சட்டமா அதிபர் திணைக்களம், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு மற்றும் ஜெனீவாவிலுள்ள ஐ.நா.விற்கான இலங்கையின் நிரந்தரத் தூதரகம் ஆகியவற்றின் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளடங்கலான தூதுக்குழுவினர் நேரில் பங்கேற்கவுள்ளனர்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,

கொழும்பு

2023 ஜனவரி 31

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close