உலகளாவிய காலாந்தர மீளாய்வின் 4வது சுழற்சியின் கீழ் இலங்கை தனது மீளாய்வை நிறைவு

உலகளாவிய காலாந்தர மீளாய்வின் 4வது சுழற்சியின் கீழ் இலங்கை தனது மீளாய்வை நிறைவு

உலகளாவிய காலாந்தர மீளாய்வின் 4வது சுழற்சியின் கீழ் இலங்கை தனது மீளாய்வை ஜெனீவாவில் இன்று நிறைவு செய்தது.

இலங்கை தூதுக்குழுவின் தலைவர் என்ற வகையில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி முன்பதிவு செய்யப்பட்ட காணொளி அறிக்கையின் மூலம் கருத்துக்களை வெளியிட்டார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,

கொழும்பு

2023 பிப்ரவரி 01

.........................................

கௌரவ வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரினால் முன்பதிவு செய்யப்பட்ட உலகளாவிய காலாந்தர மீளாய்வின் 4வது சுழற்சியின் கீழான இலங்கையின் அறிக்கை

ஜெனீவா, 2023 பிப்ரவரி 01

தலைவர் அவர்களே,

மேன்மை தங்கியவர்களே,

மதிப்பிற்குரிய பிரதிநிதிகளே,

உலகளாவிய காலாந்தர மீளாய்வின் நான்காவது சுழற்சியின் கீழான இலங்கையின் மீளாய்விற்கு உங்கள் அனைவரையும் வரவேற்பதில பெரு மகிழ்சசி அடைகின்றேன்.

உலக மனித உரிமைகள் கட்டமைப்பிற்கான ஒரு மைல்கல்லாக 2023ஆம் ஆண்டு அமைகின்றது. மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தின் 75வது ஆண்டு நிறைவையும், வியன்னா பிரகடனம் மற்றும் செயற்றிட்டத்தின் 30வது ஆண்டு விழாவையும் நாங்கள் கொண்டாடுகின்றோம். உலகளாவிய காலாந்தர மீளாய்வின் பொறிமுறையானது சர்வதேச மனித உரிமைகள் இயந்திரத்தின் நீண்ட மீளாய்வு செயன்முறையின் உச்சக்கட்டத்தைக் குறிக்கின்றது. மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் உள்நாட்டில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை தானாக முன்வந்து பகிர்ந்து கொள்வதற்கு, இந்தப் பொறிமுறையானது அனைத்து ஐ.நா. உறுப்பு நாடுகளுக்கும், பாகுபாடு இன்றி சமமான வாய்ப்பை வழங்குகின்றது என்ற உண்மையை நாங்கள் மதிக்கின்றோம். இந்த சக மீளாய்வு செயன்முறை, மனித உரிமைகளை முன்னேற்றுவதற்கான எமது முயற்சிகளில் குறிப்பாக தேர்ந்தெடுப்பு மற்றும் அரசியல்மயமாக்கலைக் குறைப்பதில் பங்களித்துள்ளது. நமது சர்வதேசப் பங்காளிகள், தேசிய சுதந்திர நிறுவனங்கள், சிவில் சமூகம் மற்றும் ஐ.நா. அமைப்பு ஆகியவற்றுடன் மனித உரிமைகள் தொடர்பான முன்னேற்றங்களில் ஆக்கபூர்வமான ஈடுபாட்டை இது செயற்படுத்துகின்றது.

தலைவர் அவர்களே,

உலகளாவிய காலாந்தர மீளாய்வு செயற்குழுவுடனான ஆக்கபூர்வமான தொடர்புகளுக்காக கடினமான சூழ்நிலையில் இலங்கை விரிவான தயார்படுத்தல்களை மேற்கொண்டுள்ளது. எனது ஆரம்பக் கருத்துகளைத் தொடர்ந்து, ஜெனீவாவில் உள்ள இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி, முக்கிய அரசாங்க நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகளின் ஆதரவுடன் எமது மீளாய்வை வழிநடத்துவார். இன்றைய பரிசீலனைக்கான தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பல அரசாங்கப் பங்குதாரர்கள், தூதுக்குழுவிற்கு ஆதரவாக கொழும்பில் இருந்து மெய்நிகர் ரீதியாக இணைய வழியில் செயன்முறையைப் பின்பற்றுகின்றனர். இந்த பல ஏற்பாடுகள் உலகளாவிய உலகளாவிய காலாந்தர மீளாய்விற்கு நாம் இணைக்கும் முக்கியத்துவத்தையும், இது சம்பந்தமாக இந்த பணிக்குழுவின் ஆலோசனையையும் பிரதிபலிக்கின்றது.

4வது சுழற்சிக்கான இலங்கையின் தேசிய அறிக்கை கடந்த 4½ வருடங்களில் ஏற்பட்ட முன்னேற்றம் மற்றும் முந்தைய சுழற்சியின் போது ஏற்றுக்கொள்ளப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் எதிர்கொண்ட சவால்களை சுட்டிக்காட்டுவதாக அமைந்துள்ளது. அதிகபட்ச வெளிப்படைத்தன்மைக்காக, இந்தப் பரிந்துரைகள் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் பகிரங்கப்படுத்தப்பட்டதுடன், சம்பந்தப்பட்ட துறைசார் செயற்றிட்டங்கள் மூலம் நடைமுறைப்படுத்துவதற்காக சம்பந்தப்பட்ட அரசாங்கப் பங்குதாரர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது. முன்னேற்றத்தின் நிலையை மதிப்பிடுவதற்காக இந்த பங்குதாரர்களுடன் பல சுற்று ஆலோசனைகள் நடாத்தப்பட்டன. இந்த சூழலில், நான் எனது முந்தைய பதவியில் நீதி அமைச்சராக ஈடுபட்டு, தற்போது வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சராக, சிவில் சமூகம் உட்பட இந்த பங்குதாரர்களுடன் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றேன்.

அரசாங்க அமைச்சுக்கள் மற்றும் முகவர் நிலையங்கள், சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளிட்ட உள்ளூர் பங்குதாரர்களுடன் பரந்த ஆலோசனைகளுடன் விரிவான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய செயன்முறையின் மூலம் தேசிய அறிக்கை தயாரிக்கப்பட்டது. இந்த முயற்சிக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

எனது தூதுக்குழுவிற்கு தொழில்நுட்ப ஆதரவை வழங்கியமைக்காக, தலவர் அவர்களுக்கும், உலகளாவிய காலாந்தர மீளாய்வு செயலகத்திற்கு நன்றிகளைத் தெரிவிக்கவும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகின்றேன். மேலும், ட்ரோக்கியா, அல்ஜீரியா, கத்தார் மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகியவற்றின் ஒத்துழைப்பிற்காகவும், இன்று பேசுவதற்கு தயாராகவுள்ள உலகளாவிய காலாந்தர மீளாய்வு பணிக்குழுவின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எமது ஆழ்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

தலைவர் அவர்களே,

16 முக்கிய ஐ.நா. மனித உரிமைகள் ஆவணங்களில் இலங்கை ஒரு அரச தரப்பாவதுடன், ஒப்பந்த அமைப்புக்களின் சம்பந்தப்பட்ட மீளாய்வுகளில் நாங்கள் தீவிரமாக ஒத்துழைத்துள்ளோம். அனைத்து ஐ.நா. விஷேட நடைமுறை ஆணையுடையவர்களுக்கும் நிலையான அழைப்பிதழ்களை நாங்கள் வழங்கியுள்ளதுடன், அவர்கள் நாட்டிற்கு விஜயம் செய்வதற்கான வசதிகளையும் செய்துள்ளோம். இந்த உரிமைகளை பாரபட்சமின்றி உள்நாட்டில் முற்போக்கான முறையில் செயற்படுத்துவதானது, எமது மக்களுக்கு அதிகாரம் அளித்து, பாதிக்கப்படக்கூடிய குழுக்களைப் பாதுகாக்கின்றது. இந்த உரிமைகள் எமது அரசியலமைப்புச் சட்டத்தில் பொறிக்கப்பட்டு, எமது நீதிமன்றங்களில் நியாயப்படுத்தப்பட்டுள்ளன. விழிப்புடன் இருக்கும் இணையவழி மற்றும் இணையவழியற்ற ஊடகம் அரசாங்கத்தின் நடவடிக்கையை ஒரு முக்கியமான கண்காணிப்பை பராமரிப்பதுடன், சமூகம் மற்றும் தேசிய அளவில் அபிவிருத்தி மற்றும் நல்லிணக்க முயற்சிகளுக்கு துடிப்பான மற்றும் வலுவான சிவில் சமூகம் தொடர்ந்தும் பங்களிக்கின்றது. அனைத்து குடிமக்களுக்கும் சுகாதாரம் மற்றும் கல்விக்கான இலவச அணுகல் மற்றும் ஏழைகளுக்கான சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் கொள்கைகளை செயற்படுத்துவது அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்குப் பங்களித்துள்ளது. கடுமையான உள்நாட்டு மற்றும் உலகளாவிய சவால்கள் இருந்தபோதிலும், நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான முயற்சிகளை நாங்கள் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றோம்.

2017ஆம் ஆண்டு முதல் உலகளாவிய காலாந்தர மீளாய்வு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதானது, அதன் பின்னர் இலங்கையில் தாக்கத்தை ஏற்படுத்திய முக்கியமான தேசிய மற்றும் சர்வதேச அபிவிருத்திகளின் பின்னணியில் பார்க்கப்படல் வேண்டும். 2017 முதல் 2022 வரையிலான மீளாய்வுக் காலப்பகுதியில் - 2019 இல் உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதல்கள், கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் கடுமையான பொருளாதார மற்றும் சமூக சவால்களில் உச்சக்கட்டத்தை அடைந்த உக்ரைன் போரின் விளைவுகள் உட்பட இலங்கை முன்னோடியில்லாத சவால்களை எதிர்கொண்டது. ஜெனீவாவில் எனது சமீபத்திய ஈடுபாடுகளின் போது, 2022ஆம் ஆண்டு சமீப காலங்களில் எமக்கு மிகவும் சவாலான காலகட்டமாக இருந்தது என்ற முடிவுக்கு வருவது மிகையாகாது என்பதை நான் எடுத்துரைத்துள்ளேன்.

பரந்த அரசியல், சமூக மற்றும் பொருளாதார முனைகளில் நாம் தெளிவான முன்னேற்றத்தை அடைந்துள்ளோம் என்பதுடன், அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவதில் ஜனநாயக அரசியலமைப்பு செயன்முறைகள் கட்டாயமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகின்ற அதே வேளை, எமது பாராளுமன்றம் மற்றும் பொது நிறுவனங்கள் நெகிழ்ச்சியானதாக அமைந்துள்ளன. சமீபத்திய சமூக அமைதியின்மை மற்றும் மக்கள் வெளிப்படுத்திய அபிலாஷைகளுக்கு இணங்க, அரசியலமைப்பின் 21வது திருத்தம் அரசாங்கத்தின் மீது பொது நம்பிக்கையை அதிகரிக்கவும், பாராளுமன்றத்தை வலுப்படுத்தவும், ஜனநாயக ஆட்சி மற்றும் நிதிப் பொறுப்புணர்வை வலுப்படுத்தவும் மற்றும் ஊழலை எதிர்த்துப் போராடவும் இயைபானதாக இயற்றப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் செயற்பாட்டில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், ஜனநாயக ஆட்சியை வலுப்படுத்தவும், தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் 2023ஆம் ஆண்டின் 03ஆம் இலக்க சட்டத்தை அரசாங்கம் இயற்றியுள்ள அதே நேரத்தில், ஊழல் எதிர்ப்பு மசோதாவை அறிமுகப்படுத்துவதற்கான செயன்முறை மேம்பட்ட கட்டத்தை எட்டியுள்ளது.

பொருளாதார ஸ்திரத்தன்மை குறித்து குறிப்பிடுவதாயின், சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள சில சீர்திருத்தங்களால் மக்கள் சந்திக்கும் இன்னல்கள் குறித்து அரசாங்கம் கவனமாகவும் உணர்திறுடனும் உள்ளது. எவ்வாறாயினும், இவை நீண்டகாலமாக தாமதமாகிவிட்ட அவசியமான கட்டமைப்புச் சீர்திருத்தங்களாகும், மற்றும் நீண்ட காலத்திற்கு பொருளாதாரத்தை நிலையானதாக மாற்றுவதற்கும் மிகவும் அவசியமானதாக விளங்குகின்றன. கடுமையான நிதிக் கட்டுப்பாடு மற்றும் மேற்பார்வை நடவடிக்கைகளை செயற்படுத்துவதன் மூலம் அடிப்படைப் பிரச்சினைகளை முன்னுரிமை அடிப்படையில் அரசாங்கம் தீர்க்கின்றது. மத்திய வங்கியின் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்கும் பலப்படுத்துவதற்குமான ஏற்பாடுகளை உள்ளடக்கிய இலங்கை மத்திய வங்கிச் சட்டமூலமும் இதில் அடங்கும். உரம், எரிபொருள், மருந்து, எரிசக்தி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தொடர்ந்தும் கிடைப்பது பராமரிக்கப்பட்டு வருகின்றது. தொற்றுநோய் மற்றும் சமூக எதிர்ப்புக்கள் காரணமாக நீடித்த இடையூறுகளுக்குப் பின்னர் சாதாரண பொதுமக்கள், குடிமக்கள் மற்றும் நிர்வாக நடைமுறைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. உணவு மற்றும் எரிசக்தி சார்ந்த பாதுகாப்பு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

தற்போதைய சிக்கன நடவடிக்கை மற்றும் பொருளாதார ஸ்திரப்படுத்தல் நடவடிக்கைகள் மக்களுக்கு கடுமையான கஷ்டங்களை கொண்டு வந்துள்ள போதிலும், பாதகமான சமூகப் பொருளாதாரத் தாக்கங்களை நிவர்த்தி செய்வதற்காக அதன் மிக உயர்ந்த முன்னுரிமையை வழங்குவதற்கு அரசாங்கம் பலமுனை நடவடிக்கைகளின் மூலம் உறுதிபூண்டுள்ளது. துல்லியமான தரவுகளின் மூலம் பயனாளிகளை விஷேட இலக்காகக் கொண்டு 2023ஆம் ஆண்டிற்கான விஷேட வரவு செலவுத்திட்ட ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மக்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துதல் மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தல் ஆகியவற்றுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக புதிய சட்டங்கள் இயற்ப்படுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

தலைவர் அவர்களே,

2023ஆம் ஆண்டில் எமது சுதந்திரத்தின் 75வது ஆண்டு நிறைவை நாங்கள் எதிர்நோக்குவதுடன், இது உலகளாவிய பிரகடனம் ஏற்றுக்கொள்ளப்பட்ட 75வது ஆண்டு நிறைவாக, சமூகப் பொருளாதார உறுதிப்படுத்தல், நல்லிணக்கம் மற்றும் மீட்சி நிறைந்த ஆண்டாக அமையும். எமது சவால்களை யதார்த்தமாக மதிப்பிடுவதற்கான ஊக்கியாக இந்த வாய்ப்பைப் பயன்படுத்துவோம். கடந்த காலத்திலிருந்து கற்றுக்கொள்வது முக்கியம் வாய்ந்தது என நாங்கள் நம்புவதுடன், சிறப்பாகவும் வலுவாகவும் கட்டியெழுப்புவதும் சமமாக முக்கியமானது.

இன நல்லிணக்கத்தை வலுப்படுத்தவும், நல்ல பொருளாதார முகாமைத்துவம், மீட்சி மற்றும் எதிர்கால அபிவிருத்திக்கான நிலையான அடித்தளத்தை அமைக்கவும் நாங்கள் உறுதியாக உள்ளோம். இந்த முயற்சியில் எம்முடன் இணையுமாறு வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் உட்பட அனைத்து இலங்கையர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.

தலைவர் அவர்களே,

உலகளாவிய காலாந்தர மீளாய்வு செயன்முறையின் கீழ் அடுத்த சுற்று அர்ப்பணிப்புக்களை மேற்கொள்ள இலங்கை தயாராகி வரும் நிலையில், இந்த வரலாற்றுத் தருணத்தில், தேசிய ஒற்றுமை மற்றும் மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தின் நலன்களுக்காக உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதே எமது தீர்மானமாகும்.

இந்தப் பின்னணியில், உண்மையைக் கண்டறியும் பொறிமுறை மற்றும் சமூக நீதி ஆணைக்குழுவை நிறுவுதல் உள்ளிட்ட பலதரப்பட்ட கொள்கை நடவடிக்கைகள் விரைவாகக் கையாளப்படுவதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளன. பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக புதிய தேசியப் பாதுகாப்புச் சட்டம் இறுதி செய்யப்படுவதற்கான மேம்பட்ட கட்டத்தில் உள்ளது. தேசிய நலன் கருதி வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுடன் பரஸ்பர நன்மை பயக்கும் வகையில், வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கான அலுவலகம் நிறுவப்பட்டு வருகின்றது. இப்பிரதேச மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்துவதற்கும் வடக்கு மற்றும் கிழக்குக்கான விரைவான அபிவிருத்தித் திட்டம் வகுக்கப்பட்டு வருகின்றது. மேலும், அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார். இந்த செயன்முறைகள் திறம்பட முன்னேறுவதை உறுதி செய்வதற்காக, ஜனாதிபதியின் தலைமையில் நல்லிணக்கம் தொடர்பான அமைச்சரவை உபகுழுவொன்று ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளதுடன், காணாமல் போனோர், உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர், காணி மற்றும் இழப்பீடு தொடர்பான பல விடயங்கள் ஏற்கனவே ஆராயப்பட்டுள்ளன.

இந்த முயற்சிகளுக்கு அரசியல் ஆதரவைப் பெறுவதற்கும் ஒருமித்த கருத்தைக் கட்டியெழுப்புவதற்கும், ஜனாதிபதி தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களின் மாநாட்டைக் கூட்டியுள்ளதுடன், இது டிசம்பர் மாதம் முதல் இரண்டு தடவைகள் கூட்டப்பட்டது.

உடனடி முன்னுரிமை அம்சமாக பொருளாதார மீட்சியே விளங்கினாலும், உலகளாவிய காலாந்தர மீளாய்வு செயன்முறைக்கான அரசாங்கத்தின்  அர்ப்பணிப்பு மனித உரிமைகள் முன்னேற்றத்திற்கான எமது அர்ப்பணிப்பைச் சித்தரிக்கின்றது.

தலைவர் அவர்களே,

இந்தப் பின்னணியில், இன்று காலை உலகளாவிய காலாந்தர மீளாய்வு செயற்குழுவுடன் ஆக்கபூர்வமான ஈடுபாட்டை நாங்கள் எதிர்பார்ப்பதுடன்,  எமது அனுபவங்களை நாங்கள் பகிர்ந்து கொள்ள விரும்புவதுடன், இலங்கை வழங்கும் தன்னார்வ உறுதிமொழிகளுக்கு வழிவகுக்கும் உங்கள் ஆலோசனைகளை வரவேற்கின்றோம். இந்த மீளாய்வின் முடிவைத் தொடர்ந்து, அடுத்த சில ஆண்டுகளில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான பொருத்தமான வழிமுறைகளை பரிசீலிக்கும் நோக்கில், அனைத்து தொடர்புடைய உள்நாட்டுப் பங்குதாரர்களுக்கும் செயன்முறையின் விளைவுகளைத் தெரிவிப்பதில் நாங்கள் ஆர்வமாக உள்ளோம்.

தலைவர் அவர்களே, நன்றி.

.....................................

முழுமையான அறிக்கையை https://youtu.be/3HO60-TORZg இல் பார்வையிடலாம்.

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close