அனித்கபீர் சமாதியில் இலங்கைத் தூதுவர் மலர்மாலை அணிவிப்பு

அனித்கபீர் சமாதியில் இலங்கைத் தூதுவர் மலர்மாலை அணிவிப்பு

துருக்கிக் குடியரசின் ஜனாதிபதிக்கு நற்சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வைத் தொடர்ந்து, அண்மையில் அங்காராவிலுள்ள அனித்கபீர் சமாதியில் நடைபெற்ற மலர்வணக்க நிகழ்வில் இலங்கைத் தூதுவர் எஸ். ஹசந்தி உருகோடவத்த திஸாநாயக்க கலந்துகொண்டார்.

தூதுவரின் குடும்பத்தினர், தூதரக ஊழியர்கள் மற்றும் துருக்கியில் வசிக்கும் இலங்கைப் பிரஜைகளும் தூதுவருடன் இவ் விழாவில் கலந்து கொண்டனர்.

அனித்கபீரின் நெறிமுறைத் தலைவர் தூதுவரை வரவேற்றதுடன், சமாதியில் மலர்மாலை அணிவித்தல், ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துதல், 'கௌரவப் புத்தகத்தில்' தூதுவர் கையொப்பமிடுதல் மற்றும் அட்டாடர்க் அருங்காட்சியகம் மற்றும் சுதந்திரப் போர் அருங்காட்சியகத்தைப் பார்வையிடுதல் ஆகியவை இடம்பெற்றன.

துருக்கிக் குடியரசின் தந்தையான முஸ்தபா கெமால் அட்டாடுர்க், மதச்சார்பற்ற, பன்மைத்துவ ஜனநாயக அம்சங்களுடன் தேசத்தை நவீனமயமாக்கியதுடன், 'கெமாலிஸ்ட்' சித்தாந்தத்தின் ஒரு பகுதியான இது, முன்னேற்றத்திற்கு இன்றியமையாத வகையில் பெண்களுக்கு அதிகாரமளிக்க வழிவகுத்தது.

அரசியல், சட்ட, மத, கலாச்சார, சமூக மற்றும் பொருளாதாரக் கொள்கை மாற்றங்களை உள்ளடக்கிய அட்டாடுர்க்கின் சீர்திருத்தங்கள், புதிய துருக்கிக் குடியரசை மதச்சார்பற்ற, நவீன தேசிய அரசாக மாற்றி வடிவமைக்க உதவியதுடன், கெமால் சித்தாந்தத்தின்படி முஸ்தபா கெமால் அட்டடுர்க்கின் தலைமையில் செயற்படுத்தப்பட்டது. அட்டாடுர்க்கின் அபிலாஷைகள் தற்போதைய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகனால் தொழில்மயமாக்கப்பட்டு, விரைவான அபிவிருத்தியைக் கொண்டு வருகின்றன.

'கௌரவப் புத்தகத்தில்' கைச்சாத்திட்ட தூதுவர், 'துருக்கிக் குடியரசின் ஸ்தாபகத் தந்தை, திரு. முஸ்தபா கெமால் அட்டாடுர்க்கின் மரபு உண்மையில் உலகளவில் தனித்துவமானது. அவர் துருக்கியின் நவீனமயமாக்கல் செயன்முறையை வழிநடத்திய அதே நேரத்தில் பன்மைத்துவம், ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மை ஆகியவற்றை ஆதரித்தார்.

எல்லாவற்றிற்கும் மேலாக, பூமியின் ஒரு பெண் குடிமகனாக, சமூகத்தில் பெண்களின் பங்கைப் புரிந்துகொள்வதில் ஒரு தொலைநோக்குப் பார்வையாளராக நான் அவரைப் பார்க்கின்றேன். இது எந்தவொரு மனித சமுதாயத்தின் அபிவிருத்திக்கும் ஒரு முன்நிபந்தனையாகும்' என எழுதினார்.

மேலும் ' சமகால முறையில் கலாச்சாரப் பண்புகளை தக்க வைத்துக் கொண்டு, உறுதியும் பின்னடைவும் எவ்வாறு விரைவான அபிவிருத்தியை அடைய முடியும் என்பதற்கு எனது நாடு போன்ற அபிவிருத்தியடைந்து வரும் அரசுகளுக்கு முஸ்தபா கெமால் அட்டாடுர்க் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாவார்' என அவர் மேலும் எழுதினார்.

 

இலங்கைத் தூதரகம்,

அங்காரா

2023 ஜனவரி 02

Please follow and like us:

Close