பேரழிவு தரும் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து துருக்கியின் நிலைமை குறித்த அறிக்கை

பேரழிவு தரும் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து துருக்கியின் நிலைமை குறித்த அறிக்கை

2023 பெப்ரவரி 06ஆந் திகதி துருக்கியின் தென்கிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்ட பேரழிவுகரமான நிலநடுக்கம் மற்றும் பின் அதிர்வுகளால் ஏற்பட்ட பாரிய உயிர்ச் சேதங்கள், நபர்களுக்கு ஏற்பட்ட காயங்கள் மற்றும் சொத்துக்களுக்கான சேதம் இலங்கை அரசாங்கம் ஆழ்ந்த வருத்தமடைகின்றது.

இந்த துயரச் சம்பவத்தை அடுத்து, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அறிவுறுத்தலின் பேரில், இலங்கை அரசாங்கம் துருக்கி அரசாங்கத்திற்கு அவசரகால மீட்பு உதவிகளை வழங்கியது. இதன்படி, துருக்கியில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக மருத்துவ மற்றும் பொறியியல் பிரிவைச் சேர்ந்த இராணுவ வீரர்களைக் கொண்ட ஒரு குழுவை இலங்கை இராணுவம் தயார் நிலையில் வைத்துள்ளது. அத்தகைய அவசர உதவிக்காக துருக்கி அரசாங்கத்தின் கோரிக்கையின் பேரில் குழு அனுப்பி வைக்கப்படும்.

துருக்கியில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 16 இலங்கையர்கள் வசித்து வருவதாகவும், அவர்களில் 15 பேர் பாதுகாப்பாக உள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அங்காராவில் உள்ள இலங்கைத் தூதுவர் ஹசந்தி உருகொடவத்த திசாநாயக்க உறுதிப்படுத்தினார். அங்காராவில் உள்ள இலங்கைத் தூதரகம் எஞ்சியுள்ள இலங்கைப் பிரஜையின் நிலையைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளது. இலங்கைத் தூதரகத்தின் அவசர தொலைபேசி இலக்கமான +90 534 456 94 98 மூலம் துருக்கியில் வசிக்கும் இலங்கையர்கள் தொடர்பான விசாரணைகளை தொடர்ந்தும் அறிந்து கொள்ள முமுடியும். பாதிக்கப்பட்ட பிராந்தியத்தில் உள்ள இலங்கையர்களின் நிலையை அறிந்து, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, தூதரகம் சம்பந்தப்பட்ட கௌரவ தூதுவர்களின் ஆதரவையும் திரட்டியுள்ளது.

2004 டிசம்பரில் ஏற்பட்ட பேரழிவுகரமான சுனாமியைத் தொடர்ந்து இலங்கைக்கு துருக்கி அரசாங்கம் வழங்கிய மனிதாபிமான உதவிகளை இலங்கை  நன்றியுடன் நினைவு கூர்கின்றது. இந்த துக்கத்தின் போது, பாதிப்படைந்த குடும்பங்கள் உட்பட துருக்கி அரசாங்கத்துடனும் மக்களுடனும் இலங்கை ஐக்கியமாக ஒன்றிணைந்து நிற்கின்றது.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,

கொழும்பு

2023 பிப்ரவரி 07

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close