இலங்கை - வியட்நாம் இடையிலான உறவுகளை புத்துயிரூட்டிய முறைசார் இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்ட 50 ஆம் ஆண்டு நிறைவினைக் குறிக்கும் இணைய மாநாடு

இலங்கை – வியட்நாம் இடையிலான உறவுகளை புத்துயிரூட்டிய முறைசார் இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்ட 50 ஆம் ஆண்டு நிறைவினைக் குறிக்கும் இணைய மாநாடு

இலங்கைக்கும் வியட்நாமிற்கும் இடையிலான 50 வருடகால இராஜதந்திர ஸ்தாபித்தலின் வரலாற்று முக்கியத்துவத்தினைக் குறிக்கும் வண்ணம், “இலங்கை - வியட்நாம் இடையிலான 50 வருடகால உறவுகள்: சாதனைகளும் வாய்ப்புக்களும்” என்ற தலைப்பில் இடம்பெற்ற இணைய மாநாட்டில், இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவுகளில் கவனம் செலுத்தப்படவேண்டியதன் முக்கியத்துவம் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. ஹனோய், வியட்நாமிலுள்ள இலங்கைத் தூதரகம், ஹனோயிலுள்ள இந்தியா மற்றும் தென்மேற்கு ஆசிய கற்கைகள் நிறுவனத்தின் சமூக விஞ்ஞான கல்லூரி, மற்றும் இலங்கை வெளிநாட்டு அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து, சர்வதேச உறவுகள் மற்றும் மூலோபாய கற்கைகளுக்கான லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச நிறுவகத்தினால் இந்த மாநாடு ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. இந்த மாநாடு இரு நாடுகளுக்குமிடையிலான பொருளாதார, இராஜதந்திர மற்றும் கலாச்சார உறவுகளை மேலும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தது.

கொழும்பில் நடைபெற்ற இதன் தொடக்கவிழாவில், பிராந்தியக் கூட்டுறவிற்கான இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய, வெளிநாட்டுச் செயலாளர் ஜயநாத் கொலம்பகே, ‘பாத்ஃபைண்டர்’ நிறுவனத்தின்  தலைவர் தூதுவர் பேர்னாட் குணதிலக்க, முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் ஃபாம் தி பிக் ங்கொக் மற்றும் ஏனைய மேன்மைதங்கிய அழைப்பாளர்களும் கலந்துகொண்டனர். வியட்நாம் தரப்பில், தென்மேற்கு ஆசியக் கற்கைகள் நிறுவனத்தின் சமூக விஞ்ஞானக் கல்லூரியின் துணைத் தலைவர் பேராசிரியர் டாங்க் ங்குயென் அங்ஹ், அந்நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகமான துணைப்பேராசிரியர் ங்குயென் க்ஸுவான் ட்ரங்க், வியட்நாம் இராஜதந்திரக் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர், இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் கலாநிதி டொன் சின் தான் மற்றும்  தென்மேற்கு ஆசியக் கற்கைகள் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர் செல்வி ஞுயென் தி ஒஆன் ஆகியோரை உள்ளடக்கிய குழுவினர் பங்கேற்றனர்.

வெளிநாட்டு அமைச்சின் செயலாளர் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே தனது ஆரம்ப குறிப்புரையின்போது, இலங்கையும் வியட்நாமும் 1970 இல் முறையான இராஜதந்திர உறவுகளை நிறுவிக்கொள்ள முன்னரே பல நூற்றாண்டுகளாக ஆழமானதும் சினேகபூர்வமானதுமான உறவுகளைப் பேணிவருகின்றமை பற்றிக் குறிப்பிட்டார். நவீன வியட்நாமின் ஸ்தாபகரான மறைந்த ஜனாதிபதி ஹோ சி மின் அவர்கள், 1911, 1928 மற்றும் 1946 ஆம் ஆண்டுகளில் ஐரோப்பாவிற்குப் பயணம் செய்யும் வழியில் இலங்கைக்கு விஜயம் செய்தமையை அவர் நினைவுகூர்ந்தார்.

மேலும் அவர், தேசிய பாதுகாப்பு, தேசிய பொருளாதாரம் மற்றும் வெளிநாட்டு உறவுகள் ஆகிய இலங்கை வெளிநாட்டுக்கொள்கையின் மூன்று தூண்கள் பற்றியும் குறிப்பிட்டார். புதிய அத்தியாயமானது, பாரம்பரிய அரசியல் இராஜதந்திரத்திலிருந்து வர்த்தகம் மற்றும் பொருளாதார இணைப்புகளை மேம்படுத்துவதாக மாறும். ‘ஆசியான்’ 2020 இற்குத் தலைமை வகிக்கும் வியட்நாமின் பொருளாதார ஒருங்கிணைப்பு, தொடர்பு மற்றும் உலகளாவிய சமூகத்துடனான ‘ஆசியான்’ இன் ஆழ்ந்த ஈடுபாடு ஆகியவற்றிலான பங்களிப்பினை அவர் புகழ்ந்துரைத்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழ்ந்த, சுமுகமான உறவுகள் பற்றிக் குறிப்பிடுகையில், இரு நாடுகளதும் முழுமையான உறவுகள் அவற்றின் எதிர்காலத் திசையை எளிதாக்கும் என இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் ஃபாம் தி பிக் ங்கொக் தெரிவித்தார். தென்கிழக்கு ஆசியாவில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம் என்ற வகையில், வணிகத் தொடர்புகளை ஆரம்பிப்பதற்கு வியட்நாமில் பொருளாதார சூழல் சாதகமாகவுள்ளதென அவர் மேலும் குறிப்பிட்டார்.

வியட்நாமின் சிறிய மற்றும் நடுத்தர தனியார்துறை வணிகங்கள் சிறந்த இயலாற்றலுடன் இருப்பதாகக் குறிப்பிட்ட தென்மேற்கு ஆசியக் கற்கைகள் நிறுவனத்தின் சமூக விஞ்ஞானக் கல்லூரியின் உப தலைவர் பேராசிரியர் டாங்க் ங்குயென் அங்ஹ், அம்முயற்சிகளில் இலங்கை முதலீடு செய்வதை ஊக்குவித்தார். வர்த்தகம் மற்றும் வியாபாரத் துறையில், குறிப்பாக உட்கட்டுமான அபிவிருத்தி, மீளப்புதுப்பிக்கப்படும் எரிசக்தி, ரப்பர், சீமெந்து, வைரம், ஆடை மற்றும் உணவு ஆகியவற்றிலுள்ள சாத்தியங்கள் தொடர்பாகவும் அவர் கவனம் செலுத்தினார். இயக்கவாற்றல் மிக்க பொருளாதாரத்தைக் கொண்ட வியட்நாம், ஒரு வளர்ந்து வரும் துடிப்பான சந்தை என்றும், வியட்நாமிய சந்தையில் அதன் சாத்தியமான பொருட்கள் மற்றும் சேவைகளுடன் தேவைகளை பூர்த்தி செய்யும் திறன் இலங்கைக்கு உள்ளது என்றும் பேராசிரியர் அங்ஹ் மேலும் குறிப்பிட்டார்.

‘ஆசியான்’ மையப்படுத்திய பொருளாதார குவிமையமான இலங்கை, வியட்நாம் மற்றும் பிற ஆசியான் நாடுகளுடனான எதிர்கால பொருளாதார ஒத்துழைப்பை இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி வலியுறுத்தினார். விநியோகச் சங்கிலியின் பல்வகைப்படுத்தல், சமீபத்திய சமூக - பொருளாதார வளர்ச்சி, வறுமை ஒழிப்பு மற்றும் கல்விக்கொள்கைச் சீர்திருத்தங்கள் ஆகியவற்றில் வியட்நாம் பெற்ற அனுபவத்திலிருந்து இலங்கை கற்றுக்கொள்ளமுடியும் என மேலும் அவர் குறிப்பிட்டார்.

இம்மாநாட்டினை நெறிப்படுத்திய சர்வதேச உறவுகள் மற்றும் மூலோபாய கற்கைகளுக்கான லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச நிறுவகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி கணேஷன் விக்னராஜா தனது முடிவுரையில், இந்நிகழ்வானது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் பொருளாதாரத் தொடர்புகளை மேம்படுத்துவதற்கான சவால்கள் மற்றும் வாய்ப்புக்களை இனங்காண்பதற்கான ஒரு மையமாகச் செயற்பட்டதாகக் குறிப்பிட்டார்.

வியட்நாமிற்கான இலங்கைத் தூதுவர் பிரசன்ன கமகே நன்றி நவில்கையில், கூட்டுறவிற்கென கவனம் செலுத்தப்படும் துறைகளில் சிறந்ததை அறுவடை செய்வதற்கு இரு நாடுகளும் இணைந்து செயற்படவேண்டுமெனக் குறிப்பிட்டார். இம் மாநாட்டில் சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவகங்களுக்கும் நன்றி தெரிவித்த தென்மேற்கு ஆசியக் கற்கைகள் நிறுவனத்தின் சமூக விஞ்ஞானக் கல்லூரியின் வரலாறு மற்றும் கலாச்சாரக் கற்கைகள் துறைத் தலைவர் கலாநிதி. லெ தி ஹாங் ங்கா, தென்மேற்கு ஆசியக் கற்கைகள் நிறுவனத்தின் சமூக விஞ்ஞானக் கல்லூரியானது, எதிர்காலத்தில் இரு  நாடுகளுக்கும் இடையிலான இருதரப்புக் கூட்டுறவு மூலமாக அடையப்போகும் உறுதியான பெறுபேறுகளுக்காக ஒத்துழைப்பினை மேம்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

கொழும்பு, களனி, ருகுண, யாழ்ப்பாணம் மற்றும் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகங்கள் மற்றும் ஏற்றுமதி அபிவிருத்திச்சபை, இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகம், வர்த்தகத் திணைக்களம், கல்வி அமைச்சு மற்றும் இலங்கை கடற்படை போன்ற அரசாங்க நிறுவனங்கள் இலங்கைத் தரப்பில் பங்கேற்றன.

 

 

வெளிநாட்டு அமைச்சு

கொழும்பு

23 செப்டெம்பர் 2020

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close