அணிசேரா இயக்கத்தின் இணைய வழியிலான அமைச்சர்கள் மட்ட கூட்டம் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் கௌரவ வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன அவர்களின் அறிக்கை 09 அக்டோபர் 2020, வெள்ளிக்கிழமை

அணிசேரா இயக்கத்தின் இணைய வழியிலான அமைச்சர்கள் மட்ட கூட்டம் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் கௌரவ வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன அவர்களின் அறிக்கை 09 அக்டோபர் 2020, வெள்ளிக்கிழமை

 

 

கௌரவ தலைவர் அவர்களே,

மேன்மை தங்கியவர்களே,

மரியாதைக்குரிய பிரதிநிதிகள்,

கனவான்களே மற்றும் சீமாட்டிகளே,

 

இன்று நடைபெறும் இந்தக் கூட்டத்தில் இலங்கை பங்கேற்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். அணிசேரா இயக்கத்தை தோற்றுவித்த வரலாற்றுச் சிறப்பு மிக்க பண்டுங் மாநாட்டின் 65வது ஆண்டு நிறைவை 2020ஆம் ஆண்டு குறித்து நிற்கின்றது. அணிசேரா இயக்கத்தின் ஸ்தாபக உறுப்பினர் என்ற வகையில், இயக்கத்தின் வளர்ச்சி மற்றும் பல ஆண்டுகளாக அதன் விவாதங்களில் பங்கேற்கின்றமை தொடர்பில் இலங்கை கௌரவமடைகின்றது.

அணிசேரா இயக்கத்தின் அடித்தளமாக விளங்கும் பொதுவான சவால்களையும் குறிக்கோள்களையும் பிரதிபலிக்கும் பண்டுங் மாநாட்டின் பத்து அடிப்படைக் கொள்கைகளுக்கு இலங்கை தனது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகின்றது.

கௌரவ தலைவர் அவர்களே,

காலனித்துவத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், வெளிநாட்டுத் தலையீடு, தாக்குதல், வெளிநாட்டு ஆக்கிரமிப்பு, ஆதிக்கம் மற்றும் இறையாண்மை ஆகியவற்றையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் எதிர்ப்பதற்கும், பெரிய மற்றும் சிறிய இரு நாடுகளின் சமத்துவத்தை அங்கீகரிப்பதற்கும் இந்தக் கொள்கைகளின் மூலம் வெளிவந்த பண்டுங் மாநாடு மற்றும் அதனைத் தொடர்ந்த அடுத்தடுத்த முன்னேற்றங்கள் எமது நாடுகளை ஒன்றிணைத்தன.

இன்று, ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளில் மூன்றில் இரண்டு பங்கை அணிசேரா இயக்க நாடுகள் கொண்டுள்ளதுடன், உலக சனத்தொகையில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் பன்முகத்தன்மைக் கொள்கைகளை உறுதி செய்வதிலும், பாதுகாப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கும் மிகப்பெரிய அரசுகளின் குழுவாக உள்ளனர்.

இறையாண்மை, சுதந்திரம், பாதுகாப்பு, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் அரசுகளின் விவகாரங்களில் தலையிடாமை போன்ற கொள்கைகளை ஆதரிப்பதானது இன்று அமைதியான உலக ஒழுங்கிற்கான இன்றியமையாத கூறுகளாகும். எனவே, இந்த இயக்கத்தின் அடித்தளத்தை நாம் பாதுகாத்து, ஒற்றுமையுடன் ஒருவருக்கொருவர் தொடர்ந்தும் உதவுதல் வேண்டும்.

கௌரவ தலைவர் அவர்களே,

தற்போது, பன்முகத்தன்மைக்கான சவால்களை மேலும் அதிகரிப்பதற்கு வழிவகுக்கும் கோவிட்-19 தொற்றுநோய் நிலைமையின் காரணமாக, நவீன வரலாற்றில் மிகப்பெரிய நெருக்கடி நிலைமையை உலகம் கடந்து செல்கின்றது. ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் பல்தரப்பு ஒத்துழைப்புக்கு புத்துயிர் அளித்தல் ஆகியன காலத்தின் தேவையாகும். எமது பிரதிபலிப்பின் அளவு இந்த நெருக்கடியின் அளவிற்கு பொருந்துவதாக அமைதல் வேண்டும்.

இந்தத் தொற்றுநோய் நிலைமையின் போது உறுப்பினர்களின் தேவையை நிவர்த்தி செய்வதற்காக அணிசேரா இயக்கத்தின் ஒரு பணிக்குழுவை நிறுவுவதானது, இயக்கத்தின் மிகவும் தேவையான ஒத்துழைப்புத் தலைமைத்துவத்துக்கு முக்கியத்துவம் அளித்துள்ளது. இத்தகைய முயற்சிகளில் இலங்கை தனது ஒத்துழைப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றது.

பல செயற்றிறன் மிக்க நடவடிக்கைகளுடன் வைரஸின் பரவலை இலங்கை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியுள்ளது என்பதை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். இலங்கையின் 90மூ க்கும் அதிகமான மீட்பு விகிதமானது, உலகளாவிய அனுபவத்தை விடவும் அதிகமாக உள்ளது. நாங்கள் எமது அனுபவத்தை சர்வதேச சமூகத்துடன் பகிர்ந்து கொள்கின்றோம்.

கோவிட்-19 க்கான நிலையானதொரு சிகிச்சைத் தீர்வை நோக்கி உலகம் முன்னேறும்போது,இந்த வைரஸுக்கு பிரதிபலிக்கத் தேவையான அனைத்து முக்கிய மருத்துவ வளங்களையும் பெற்றுக் கொள்வதில் அனைத்து நாடுகளுக்கும் கட்டுப்பாடற்ற அணுகல் இருப்பதையும், இந்த இயக்கத்தின் கொள்கைகளுக்கானதும், 2030 நிலையான அபிவிருத்தி இலக்குகளுக்கானதுமான எமது கூட்டு உறுதிப்பாட்டைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் அரசியல் நோக்கங்கள் அத்தகைய அணுகலைத் தடுக்காதிருப்பதையும் இயக்கம் வலியுறுத்த வேண்டும்.

கௌரவ தலைவர் அவர்களே,

பெருகிவரும் கடன் நெருக்கடியின் விளைவாக தொற்றுநோயிலிருந்து பொருளாதார வீழ்ச்சி ஏற்படுகின்றமையின் காரணமாக அது குறித்தும் இலங்கை கவலை கொண்டுள்ளது. நெருக்கடியான இந்த நேரத்தில், அதிகரித்த சர்வதேச நிதியுதவி மற்றும் கடன் செலுத்துவதற்கான இடைநிறுத்தம் ஆகியன அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு வழங்கப்படல் வேண்டும்.

அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள், நிலத்தால் சூழப்பட்ட அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் மற்றும் அபிவிருத்தியடைந்து வரும் சிறிய தீவு நாடுகள் போன்ற மிகவும் பாதிக்கப்படக்கூடிய அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு உதவுவதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டுள்ள நிலையில், மத்திய வருமான நாடுகளின் தேவைகள் அறியப்படாமல் இருப்பது மிகவும் வருந்தத்தக்கது. மத்திய வருமான நாடுகள் மற்றும் உலகளாவிய தெற்கு நாடுகளுக்கு நிதி உதவிகளை வழங்குவதற்காக சிறப்பான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு இலங்கை அழைப்பு விடுத்துள்ளது.

உலக அமைதியைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளுக்கு இடையில், ஆயுத மோதல்கள், ஆக்கிரமிப்பு விரிவாக்கக் கொள்கைகள், பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதம் மற்றும் உலகம் முழுவதுமான வன்முறைத் தீவிரவாதம் ஆகியவற்றால் மில்லியன் கணக்கான மக்கள் தொடர்ந்தும் பாதிக்கப்படுவதானது கவலையளிக்கின்றது. மூன்று தசாப்தங்களாக பிரிவினைவாதத்தையும் பயங்கரவாதத்தையும் அனுபவித்த இலங்கை, பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும், வெளிப்பாடுகளிலும், மிகக் கடுமையான சொற்களில், எப்போதும், யார் இதுபோன்ற செயல்களை மேற்கொண்ட போதிலும் அதனைக் கண்டிக்கின்றது. பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல், தடுத்தல் மற்றும் போராடுதல் ஆகியவற்றை அடக்குவதற்கு மேம்பட்ட ஒத்துழைப்பு மற்றும் அணிசேரா இயக்கத்தின் ஒற்றுமையின் முக்கியத்துவத்தை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகின்றோம்.

பலஸ்தீனத்தில் மோசமடைந்து வரும் நிலைமை மற்றும் கியூபா, ஈரான், வெனிசுவேலா மற்றும் ஏனைய நாடுகளின் பொருளாதார முற்றுகை குறித்தும் இலங்கை கவலை கொண்டுள்ளது.

அணிசேரா இயக்கத்தின் கொள்கைகளுக்கு ஏற்ப, அரசுகளுக்கிடையேயான மோதல்கள் பற்றிய கேள்விக்கு, பலவந்தமான நடவடிக்கைகளைப் பயன்படுத்துவதையோ அல்லது சக்தியைப் பயன்படுத்துவதையோ விட, சிக்கல்களைத் தீர்ப்பதற்கும் ஒருமித்த கருத்தை அடைவதற்கும் உரையாடல் மிகவும் பயனுள்ள வழிமுறையாகும் என்பதை இலங்கை வலியுறுத்துகின்றது.

கௌரவ தலைவர் அவர்களே,

நிதி மற்றும் பொருளாதார நெருக்கடிகள், சமத்துவமற்ற விநியோகம் மற்றும் வரையறுக்கப்பட்ட வளங்கள் மற்றும் சர்வதேச அமைப்பினுள் மூழ்கியிருக்கும் ஒத்துழைப்பின்மை ஆகியவற்றால் அமைதியான, வளமான, சமமான மற்றும் நியாயமான உலக ஒழுங்கை நிறுவுவதற்கான இந்த இயக்கத்தின் கூட்டு எதிர்பார்ப்புக்கள் சவாலுக்குட்படுத்தப்படுகின்றன. அவற்றில் சில தொழில்நுட்பத்தின் அதிகரித்த பயன்பாடு மற்றும் அணிசேரா இயக்கத்தை அறிவதன் மூலம் தீர்க்கப்படலாம்.

உலகளாவிய நெருக்கடிகளுக்கு உலகளாவியத் தீர்வுகள் மற்றும் நிலையான சர்வதேச ஒற்றுமை அவசியமாகும். எனவே, உலகளாவிய காலநிலை மாற்றத்தில் ஏராளமான சமூகப் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு சார்ந்த சவால்களுக்கும், சமமான முக்கிய எல்லைகளுக்கும் பதிலளிப்பதில் பன்முகத்தன்மை மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்த நாம் எம்மை மீள் பரிசீலனை செய்தல் வேண்டும்.

தலைவரால் தொடங்கப்பட்ட கோவிட்-19 தொற்றுநோய்க்கு பிரதிபலிக்கும் வகையிலான ஐக்கிய நாடுகள் சபையின் 31வது சிறப்பு அமர்வைக் கூட்டுவது தொடர்பில் இலங்கை மகிழ்ச்சியடைவதுடன், அதன் கலந்துரையாடல்களில் இலங்கையும் பங்கேற்கும்.

இறுதியாக, தலைவர் அவர்களே, அணிசேரா இயக்கத்தின் தலைவர் என்ற வகையில், இந்த முன்னோடியில்லாத சவால்களின் மூலம் இயக்கத்தை வழிநடத்தியமைக்காகவும், இந்தக் கூட்டத்தை கூட்டியமைக்காகவும் அசர்பைஜான் குடியரசிற்கு எனது பிரதிநிதிகள் சார்பில் நன்றிகளைத் தெரிவிக்க விரும்புகின்றேன்.

ஆயூபோவன்.

நன்றி.

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close