ஐக்கிய நாடுகளின் 75 ஆவது ஆண்டு நிறைவு மற்றும் கொழும்பில் ஐக்கிய நாடுகளின் 65 ஆவது ஆண்டு நிறைவு குறித்து, 23 அக்டோபர் 2020 அன்று இடம்பெற்ற, ‘ஒன்றிணைந்து எமது எதிர்காலத்தை வடிவமைப்போம்’ எனும் மெய்நிகர் நிகழ்வில் கௌரவ விருந்தினராக கலந்துகொண்ட வெளிநாட்டமைச்சர் கௌரவ தினேஷ் குணவர்த்தன அவர்கள் ஆற்றிய உரை

ஐக்கிய நாடுகளின் 75 ஆவது ஆண்டு நிறைவு மற்றும் கொழும்பில் ஐக்கிய நாடுகளின் 65 ஆவது ஆண்டு நிறைவு குறித்து, 23 அக்டோபர் 2020 அன்று இடம்பெற்ற, ‘ஒன்றிணைந்து எமது எதிர்காலத்தை வடிவமைப்போம்’ எனும் மெய்நிகர் நிகழ்வில் கௌரவ விருந்தினராக கலந்துகொண்ட வெளிநாட்டமைச்சர் கௌரவ தினேஷ் குணவர்த்தன அவர்கள் ஆற்றிய உரை

கௌரவ பிரதம மந்திரி அவர்களே,
கௌரவ இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் அவர்களே,
ஐக்கிய நாடுகளுக்கான இலங்கை வதிவிட இணைப்பாளர், மேதகு அம்மையார் அவர்களே,
இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் குழு அலுவலர்களே,
மேதகையோரே,
கனவாட்டிகளே, கனவான்களே

ஐக்கிய நாடுகளின் 75 ஆவது ஆண்டு நிறைவு மற்றும் கொழும்பில் ஐக்கிய நாடுகளின் 65 ஆவது ஆண்டு நிறைவு குறித்தான இந்த வரலாற்று நிகழ்வில், இன்று நான் உங்கள் முன் உரையாற்றுவதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்.

ஐக்கிய நாடுகள் ஸ்தாபனமானது தனது எழுபத்தைந்தாவது ஆண்டு நிறைவினை எட்டுவதானது, இந்த நிறுவனத்தின் நீடித்து நிலைக்கும் தன்மையை மட்டுமன்றி, அனைத்து நாடுகளதும் இறையாண்மைச் சமத்துவத்தின் மையக் கொள்கைகளின் அடிப்படையிலான பல்தரப்புசார் கோட்பாடு, அவற்றின் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு மதிப்பளித்தல் மற்றும் அவர்களின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாமை ஆகியவற்றையும் மெய்ப்பித்துக்காட்டுகின்றது. இந்தக் கொள்கைகளின் அடிப்படையில் உறுப்பு நாடுகளுக்கும் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்திற்கும் இடையிலான கூட்டுப்பங்குடைமை, சிறப்புடன் பேணப்படுகிறது.

இந்த ஆண்டில், ஐக்கியநாடுகள் ஸ்தாபனத்துடன் இலங்கை உறுப்புரிமை பெற்ற 65 ஆவது ஆண்டு நிறைவினைக் கொண்டாடும் வேளையில், ஐ.நா தனது சிறப்புத்துறை முகவரமைப்புக்களுக்கான அமைதிப்படைத் தொழிற்பாடுகளை நிறைவேற்றுவதில் குறிப்பிடத்தக்களவு பங்களித்துள்ளமையை இட்டு இலங்கை மகிழ்ச்சியடைகிறது. இந்நிறுவனத்தின் பல்வேறு பொறுப்புக்களில் இலங்கையர்கள் சிறப்பாகச் சேவைபுரிந்து வருகின்றனர்.

வரலாற்று ரீதியாக இலங்கை, ஐ.நாவின் பல முக்கியமான பேருரைகளில் நெருக்கமாகத் தொடர்புபட்டு வந்திருக்கிறது.  1960 இல் இலங்கை, ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் கழகத்தின் நிரந்தரமற்ற உறுப்பினராகச் சேவையாற்றியதுடன், 1976 இல் ஐ.நா பொதுச்சபைக்கும் தலைமை தாங்கியது.

அணிசேரா இயக்கத்தின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவராகவும் 77 குழுவின் முக்கிய உறுப்பினராகவுமுள்ள இலங்கை, குறிப்பாக உலகளாவிய தெற்கின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி, ஐக்கிய நாடுகளின் பல்தரப்பு விவாதங்களில் தொடர்ந்தும் குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றியுள்ளது. ஐ.நா முறைமையில் இலங்கையின் சிறப்பான பங்களிப்புக்களில் சில:

-         கடல் சார் சட்டம் தொடர்பிலான ஐ.நா சாசனத்தின் (UNCLOS) பேச்சுவார்த்தைகளுக்கு தலைமை வகித்து, சமுத்திரங்களுக்கான 30 வருடங்களுக்கு மேற்பட்ட விதிகளை அடிப்படையாகக்கொண்ட கட்டளைக்கு அடித்தளம் இட்டமை.

-         ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் தீர்மானத்தை முன்னெடுத்தமை மூலமாக, புத்த நாட்காட்டியில் மிகவும் புனித நாளான வெசாக் தினத்தை, ஐக்கிய நாடுகளின் அனுசரிப்பு தினமாக ஒருமுகமாக அறிவிக்கச்செய்தமை.

-         இந்நிறுவனத்தின் ஆயுதக்குறைப்பு விவகாரங்களுக்கான கீழ்நிலைச் செயலாளர் நாயகம் மற்றும்  வர்த்தகம் மற்றும் அபிவிருத்திக்கான ஐக்கிய நாடுகள் மாநாட்டின் (UNCTAD) செயலாளர் நாயகம் ஆகிய உயர்மட்ட தொழிற்றிறன் பதவிகளில் சேவையாற்றியமை

1960 களிலிருந்தே இலங்கை ஐக்கிய நாடுகள் அமைதிப்பணி முயற்சிகளுக்குப் பங்காற்றி வருகின்றது. அதன்படி, கொங்கோ மத்திய ஆபிரிக்க குடியரசு, கோட் டிவொய்ரெ, ஹெய்ட்டி, லெபனான், லைபீரியா, மாலி, தெற்கு சூடான், தீமோர் மற்றும் மேற்கு சகாரா ஆகிய நாடுகளில் பணியாற்றி, உலகளாவிய சமாதானம் மற்றும் பாதுகாப்பிற்கான எமது அர்ப்பணிப்பினை இலங்கை மெய்ப்பித்துக்காட்டியது. கிட்டத்தட்ட மூன்று சகாப்தங்களாக உள்நாட்டுப் பிரிவினைவாதத்துடன் போராடி அதனை முடிவுக்குக் கொண்டுவந்தமை காரணமாகப் பெற்ற பல்திறன்கள் மூலமாக, இலங்கைப் படையினர் நாட்டுக்குப் பெருமை சேர்த்ததுடன், ஐ.நா மூலமாக சர்வதேச ரீதியிலும் இனங்காணப்பட்டுள்ளனர்.   இத்தருணத்தில், இலங்கை அமைதிப்படையினர், உலகின் மிகவும் மோசமான பிரச்சனைகளைக் கொண்ட பிராந்தியங்களில் சேவையாற்றி வருகின்றனர். கிட்டத்தட்ட ஆறு தசாப்தங்களாக நாட்டுக்குப் பங்களித்துவரும் இராணுவம் என்ற வகையில் அதிகரித்த பாதுகாப்பும் சமாதானமும் நிறைந்த ஒரு உலகத்தை ஸ்தாபிப்பதில் எமது பங்கினை விரிவாக்குவதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம்.

இந்த நினைவுநாளின் கருப்பொருளான “ஓன்றிணைந்து எமது எதிர்காலத்தை வடிவமைப்போம்” என்பது, எதிர்காலத்தை அடிப்படையாகக்கொண்டு அமைந்திருப்பதுடன், நாம் விரும்பும் எதிர்காலத்திற்கான ஒன்றிணைந்த செயாற்பாட்டின் முக்கியத்துவத்தினையும் மீளவலியுறுத்துகிறது. இளைஞர்களின் பங்களிப்பு, ஐ.நா 75 பேச்சுவார்த்தைகளின் மையப்பொருளாக இனங்காணப்பட்டுள்ளதுடன் இச்சூழலில் அவர்கள் எதிர்காலத்தை நோக்கும் விதமும் முக்கியமானதாகவுள்ளது. 2014 இல் இலங்கை தலைமை தாங்கி; வேலைவாய்ப்பு, நேர்மையான தொழில் மற்றும் தொழில் முனைவோருக்கான திறன்களை எதிர்நோக்கும் இளைஞர்களைத் தயார்ப்படுத்துவதன் மூலோபாய முக்கியத்துவத்தினைக் கொண்டாடும் வண்ணம், 15 ஜூலை ஐ, உலக இளைஞர் திறன் தினமாக அறிவித்தமையை நான் நினைவுகொள்கிறேன். இத்தினமானது; இலங்கை மற்றும் போர்த்துக்கல் நாடுகள், யுனெஸ்கோ, சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் மற்றும் ஐ.நா செயலாளர் நாயகத்தின் இளைஞர் தூதுவரின் அலுவலகம் ஆகியவற்றுடன் இணைந்து ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் வருடாந்தம் நினைவுகூரப்படுகின்றது. நிலையான அபிவிருத்திக்கான 2030 நிகழ்ச்சி நிரலை இலங்கை வழிமொழிந்துள்ளது. மக்களை மையமாகக்கொண்ட தேசிய கொள்கை ஒன்றை எமது அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளதுடன், விவசாயத்தை அடிப்படையாகக்கொண்ட உற்பத்திப் பொருளாதாரம் மூலமாக வறுமையை ஒழித்தல் எமது முக்கிய குறிக்கோள்களில் ஒன்றாகவுள்ளது. இந்த தேசிய நலன்கள் மற்றும் முந்துரிமைகளைக் கவனத்தில் கொள்வதற்காக நிலையான அபிவிருத்திக் குறிக்கோள்களை நடைமுறைப்படுத்துவதில் ஐக்கிய நாடுகள் மற்றும் ஐ.நா முகவரமைப்புக்களின் தொடர்ந்த கூட்டுறவு மற்றும் உதவிகளை நாம் பாராட்டுகிறோம்.

75 ஆவது ஆண்டு நிறைவினைக் கொண்டாடுவதற்கான ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் உயர்மட்டக் கூட்டத்தில் உரையாற்றிய மேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் குறிப்பிட்டது போல, நாம் விரும்பும் எதிர்காலத்தை உறுதி செய்வதற்காக, இந்த மாபெரும் நிறுவனத்தை வலுப்படுத்தும் முயற்சிகளில், ஐக்கிய நாடுகளாக நாம் எம்மை அர்ப்பணிப்போம் என இலங்கை நம்புகின்றது

மேதகையோரே,

ஐக்கிய நாடுகள் குடும்பத்தினரின், குறிப்பாக கொழும்பிலுள்ள ஐ.நா. ஊழியர்களின் கடமையுணர்ச்சி மற்றும் அர்ப்பணிப்புடனான பணிகளுக்காக, நான் இச்சந்தர்ப்பத்தில் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

நன்றி

Video link at: https://youtu.be/EC4ahBkefGk

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close