தென்னிந்தியாவில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்களை நாட்டிற்கு மீளத் திருப்பி அனுப்புவதற்கு இந்திய அரசாங்கம் உதவி

தென்னிந்தியாவில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்களை நாட்டிற்கு மீளத் திருப்பி அனுப்புவதற்கு இந்திய அரசாங்கம் உதவி

வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே அவர்களை 2020 டிசம்பர் 07 ஆந் திகதி வெளிநாட்டு அமைச்சில் வைத்து சந்தித்தனர். முக்கியமாக பாக்கு நீரிணை சார்ந்த மீன்பிடிப் பிரச்சினை மற்றும் சாத்தியமான கோவிட்-19 பரஸ்பர ஒத்துழைப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தி, இரு அமைச்சர்களும் பரஸ்பர நலன் சார்ந்த விடயங்கள் குறித்து இந்திய உயர் ஸ்தானிகருடன் கலந்துரையாடினர்.

அமைச்சர்கள் மட்டத்திலான இந்திய - இலங்கை மீன்பிடி தொடர்பான செயற்குழு உட்பட, நிறுவப்பட்ட இருதரப்பு வழிமுறைகள் மூலமாக தற்போதுள்ள மீன்வள விவகாரங்களுக்குத் தீர்வு காண்பதற்கு ஒப்புக் கொள்ளப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் திட்டமிடப்பட்டிருந்த மீன்வளத்துக்கான இருதரப்பு செயற்குழுவின் நான்காவது கூட்டம் கோவிட்-19 தொற்று நிலைமை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. செயற்குழுக் கூட்டத்தை விரைவாகக் கூட்டுவதற்கு இரு தரப்பினரும் உடன்பட்ட அதே நேரத்தில், நடுக்கடல் சார்ந்த எதிர்ப்பு ரீதியான நிலைமைகளைக் கையாள்வதில் நிலையான நடைமுறைகளை பராமரிப்பதற்கும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

தற்போதைய அபிவிருத்தி உதவிகள் மற்றும் கோவிட்-19 தொற்றுக்கான கூட்டு நடவடிக்கைகள் ஆகியன உள்ளடங்கலான, இருதரப்பு ஒத்துழைப்பில் உள்ள பகுதிகளின் முழுமையான வரம்புகள் குறித்தும் இரு தரப்பினரும் தமது திருப்தியினைத் தெரிவித்தனர். பயணக் கட்டுப்பாடுகளின் காரணமாக தென்னிந்தியாவில் இன்னும் சிக்கித் தவிக்கும் இலங்கையர்களை நாட்டிற்கு மீளத் திருப்பி அனுப்புவதற்கு முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கான உத்தரவாதம் இந்தியத் தரப்பினரால் அளிக்கப்பட்டது. கூட்டு ஒத்துழைப்பின் மூலமாக, விரைவில் செயற்படும் என எதிர்பார்க்கப்படும் யாழ்ப்பாண கலாச்சார மையத்தை நிர்மாணிப்பதற்காக இந்தியா வழங்கிய உதவிகளுக்கு இரு அமைச்சர்களும் தமது நன்றிகளைத் தெரிவித்தனர். நெருக்கமான உரையாடலைத் தொடர்வதற்கும் இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.

வெளிநாட்டு அமைச்சு

கொழும்பு

 

08 டிசம்பர் 2020

 

 

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close