இராஜதந்திர உறவுகளின் 43வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், 300,000 அமெரிக்க டொலர் பெறுமதியான கோவிட்-19 எதிர்ப்பு பரிசோதனைக் கருவித்தொகுதி கொரியக் குடியரசினால் அன்பளிப்பு

 இராஜதந்திர உறவுகளின் 43வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், 300,000 அமெரிக்க டொலர் பெறுமதியான கோவிட்-19 எதிர்ப்பு பரிசோதனைக் கருவித்தொகுதி கொரியக் குடியரசினால் அன்பளிப்பு

2020 டிசம்பர் 08ஆந் திகதியாகிய இன்று வெளிநாட்டு அமைச்சில் நடைபெற்ற நிகழ்வின் போது, இலங்கைக்கும் கொரியக் குடியரசிற்கும் இடையே இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்ட 43வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 300,000 அமெரிக்க டொலர் பெறுமதியான ரியல் டைம் பி.சி.ஆர். பரிசோதனைக் கருவித்தொகுதிகளை வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன அவர்களிடம் கொரியக் குடியரசின் தூதுவர் வூன்ஜின் ஜியோங் நன்கொடையாகக் கையளித்தார்.

நன்கொடைகளைக் கையளிக்கும் இந்த நிகழ்வில் உரையாற்றிய வெளிநாட்டு அமைச்சர் குணவர்தன, இலங்கை அரசாங்கத்தின் கோவிட்-19 கட்டுப்பாட்டு முயற்சிகளுக்கு தாராளமாக பங்களித்தமைக்காக கொரியக் குடியரசிற்கு தனது நன்றிகளைத் தெரிவித்ததோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான பாரம்பரிய நட்பானது, முக்கியமானதொரு தூணாக பொருளாதார ஒத்துழைப்புதுடன் காலப்போக்கில் பன்முகக் கூட்டாண்மைடன் அபிவிருத்தியடைந்துள்ளது என்பதை எடுத்துரைத்தார். கடந்த தசாப்தங்களில் கொரியக் குடியரசு அடைந்த அதிவேக அபிவிருத்தியை ஒப்புக் கொண்ட வெளிநாட்டு அமைச்சர் குணவர்தன, விமானப் போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து, சுகாதாரம், விவசாயம், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் சிறப்பான கவனம் செலுத்தும் வகையிலான கொரியக் குடியரசின் நிபுணத்துவத்தையும், மற்றும் இலங்கையில் கிராமப்புறப் பொருளாதாரங்கள் மற்றும் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதற்கான ஆதரவுகளையும் கோரினார்.

'வலுவாக இருப்போம்' பிரச்சாரத்தின் கீழ், கொரியாவும் இலங்கையும் ஒருவருக்கொருவர் கோவிட் எதிர்ப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தியுள்ளன என தூதுவர் வூன்ஜின் ஜியோங் தனது கருத்துக்களில் தெரிவித்தார். இலங்கை மற்றும் தென் கொரியாவிற்கு இடையே நடைபெற்று வரும் அபிவிருத்திக் கூட்டாண்மை குறித்து திருப்தி தெரிவித்த அதே வேளையில், திரவமாக்கப்பட்ட இயற்கை வாயு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, உட்கட்டமைப்பு மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் இலங்கையில் காணப்படும் அதிகமான வாய்ப்புக்களை கோவிட்-19 சார்ந்த பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டவுடன் ஆராய்வதற்காக கொரிய முதலீட்டாளர்களுக்கு தூதுவர் அழைப்பு விடுத்தார்.

பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய, வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே, வெளிநாட்டு அமைச்சு மற்றும் கொழும்பிலுள்ள கொரியக் குடியரசின் தூதரகம் ஆகியவற்றின் சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோர் இந் நிகழ்வின் போது கலந்து கொண்டனர்.

இலங்கை மற்றும் கொரியக் குடியரசு ஆகியன 1977 நவம்பர் 14ஆந் திகதி இராஜதந்திர உறவுகளை ஸ்தாபித்தன.

 

வெளிநாட்டு அமைச்சு
கொழும்பு

2020 டிசம்பர் 08

.............................................

 

இலங்கைக்கும் கொரிய குடியரசிற்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்ட 43 ஆவது ஆண்டு நிறைவினைக் குறிக்கும் வண்ணம், கொரிய குடியரசினால் இலங்கைக்கு பி.சி.ஆர் உபகரணங்களை  நன்கொடையாக வழங்கும் நிகழ்வில் இலங்கை வெளிநாட்டமைச்சர் கௌரவ தினேஷ் குணவர்த்தன அவர்கள் நிகழ்த்திய உரை

 

பிராந்திய கூட்டுறவிற்கான இராஜாங்க அமைச்சர் கௌரவ தாரக பாலசூரிய அவர்களே,

கொரிய குடியரசு தூதுவர் கௌரவ வூஞ்ஜின் ஜியொங்க் மற்றும் இராஜதந்திர படையைச் சேர்ந்த உறுப்பினர்களே

செயலாளர் ஜயநாத் கொலம்பகே அவர்களே

கௌரவ விருந்தினர்களே, கனவாட்டிகளே, கனவான்களே

வணக்கம்!

ஆயுபோவன்!

அனியொன்கசேயோ!

இலங்கைக்கும் கொரிய குடியரசிற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்ட 43 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வினை வெளிநாட்டமைச்சு ஏற்று நடாத்துவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

கலாச்சார ரீதியில் எமது இரு நாடுகளும் பல நூற்றாண்டுகளாக மிக நெருங்கிய உறவுகளைக் கொண்டுள்ளதுடன், பௌத்தம் என்ற ஒரு பொதுக்கருத்தினாலும் இணைக்கப்பட்டுள்ளன. எமது பாரம்பரிய இணைப்புகளான நம்பிக்கை மற்றும் பரஸ்பர புரிந்துணர்வு ஆகியவற்றின் அடிப்படையில் 1977 இல் முறையான இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த 43 வருடங்களாக இலங்கையும் கொரிய குடியரசும் மரியாதையானதும் ஆரோக்கியமானதுமான இருதரப்பு உறவினைப் பேணி வந்துள்ளன.

கொரிய ஜனாதிபதி, மேதகு மூன் ஜே இன் அவர்களுக்கும் கொரிய அரசாங்கத்திற்கும் அந்நாட்டு மக்களுக்கும் இலங்கை தனது இனிய வாழ்த்துக்களையும் உயர்ந்த மரியாதையையும் தெரிவிக்கின்றது.

கொரிய குடியரசு எமது முன்னணி அபிவிருத்தி பங்காளியாகும். பொருளாதார அபிவிருத்திக் கூட்டுறவு நிதியம் மற்றும் கொரியா சர்வதேச கூட்டுறவு முகவரமைப்பு ஆகியவற்றினால் வழங்கப்படும் உத்தியோகபூர்வ அபிவிருத்தி உதவியானது, இலங்கையின் சமூக பொருளாதார அபிவிருத்திக்கு, குறிப்பாக உட்கட்டமைப்பு, போக்குவரத்து, வேலைவாய்ப்பு, தொழிற்பயிற்சி, நீர்ப்பாசனம், கழிவகற்றல் போன்ற துறைகளில் பெரும் பங்களிப்பினைச் செய்துள்ளது.

பல்துறைகளில் கொரிய குடியரசின் நிபுணத்துவத்தினைக் கருத்தில்கொண்டு, விமானசேவை, கப்பல்சேவை, சுகாதாரம், விவசாயம், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய பிற துறைகளிலும் எமது உறவுகளை மேலும் விரிவாக்குவதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம். அத்துடன், இரு நாடுகளதும் பாராளுமன்ற மற்றும் மாகாண மட்டத்திலான கூட்டுறவினை விரிவாக்குவதன் மூலம், மக்களுடன் மக்களுக்கான பரிமாற்றத்தினையும் ஊக்கப்படுத்தமுடியுமென நாம் நம்புகின்றோம்.

கடந்த மூன்று நான்கு தசாப்தங்களாக கொரிய குடியரசில் ஏற்பட்டுவரும் அதி சிறந்த மாற்றங்களை நாம் பார்த்துவருகின்றோம்.  கொரிய குடியரசின் ஒப்புயர்வற்ற இந்த பொருளாதார வளர்ச்சியானது, உலகிற்கு மிகச்சிறப்பான நன்மைகளைக் கொண்டுவந்துள்ளதுடன் ஆசிய பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கான புதிய குழுமுயற்சிகளையும் உருவாக்கியுள்ளது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

‘செழிப்பு மற்றும் மேன்மையின் காட்சி’ என்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தேசிய கொள்கைக் கட்டமைப்பின் கீழ், இலங்கை இப்போது சமூக பொருளாதார அபிவிருத்தி என்ற ஒரு புதிய அத்தியாயத்தை ஆரம்பித்துள்ளது. நாடெங்கிலுமுள்ள மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு அதிக முக்கியத்துவமளித்து, இறக்குமதி சார்ந்த பொருளாதாரத்தினை ஏற்றுமதியை மையமாகக் கொண்ட பொருளாதாரமாக மாற்றுவதற்கு நாம் உத்தேசித்துள்ளோம்.

கனவாட்டிகளே கனவான்களே,

கொரிய குடியரசு கொவிட்-19 நோய்ப்பரவலை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியதை அறிந்து நான் குறிப்பாக மகிழ்ச்சியடைகிறேன். கொரிய குடியரசு, நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன்,  கடுமையான நடவடிக்கைகளைச் செயன்முறைப்படுத்துவதன் மூலம் இந்நோய்ப்பரவலை விரைவாக கட்டுப்படுத்தியதை நாம் பார்த்தோம்.

எமது மிகக்கடினமான தருணங்களில் கொரிய குடியரசின் அரசாங்கமும் அதன் மக்களும் எமக்கு உதவியாக எமக்குப் பக்கபலமாக நின்றன. 300,000 அமெரிக்க டொலர்கள் பெறுமதியான பி.சி.ஆர் உபகரணங்களை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியமை மூலமாக, எமது மதிப்புமிக்க உறவு மீண்டுமொரு தடவை நிரூபிக்கப்பட்டுள்ளது. எமது நாட்டில் நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் அமைத்த 10 திட்டங்களின் முக்கிய அங்கமாகவுள்ள, தற்போதுள்ள பரிசோதனையின் இயலளவு இந்த உபகரணங்களால் மேம்படுத்தப்படும்.

இச்சந்தர்ப்பத்தில், எனது நாட்டில் கொவிட்-19 பதில்வினை முயற்சிகளுக்காகத் தமது கனிவான பங்களிப்பினை வழங்கியமைக்காக நான் மீண்டுமொருமுறை கொரிய குடியரசின் நட்புறவுடனுள்ள மக்களுக்கு நன்றிகூறிக்கொள்கிறேன். மேதகையோரே, இந்த நல்லெண்ண குறிப்புணர்த்தலானது சந்தேகமின்றி இலங்கை மக்களால் என்றென்றும் நினைவுகூரப்பட்டு, போற்றப்படும்.

கனவாட்டிகளே கனவான்களே,

முடிவாக, கொரிய குடியரசின் அரசாங்கத்திற்கும் அந்நாட்டு மக்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்து, அவர்களின் தொடர்ந்த உதவிகளையும் தாராளத்தையும் ஏற்றுக்கொள்ளும் அதேநேரம், எமது இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டுப்பங்குடைமையை மேலும் வலுப்படுத்துவதை நாம் எதிர்நோக்கியுள்ளதுடன்,  சவாலானதும் வெகுமதியளிப்பதுமான தேசத்தைக் கட்டியெழுப்பும் எமது பயணத்தில் கொரிய குடியரசு எம்முடன் இணைந்து பயணிக்குமெனவும் நம்புகிறோம்.

நன்றி!

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close