வொஷிங்டன் டி.சி.யில் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஆண்டனி பிளிங்கனுடன் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி சந்திப்பு

வொஷிங்டன் டி.சி.யில் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஆண்டனி பிளிங்கனுடன் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி சந்திப்பு

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் எம்.யு.எம். அலி சப்ரி 2022 நவம்பர் 30 முதல் டிசம்பர் 02 வரை வொஷிங்டன் டி.சி.க்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்தார். அவர் அமெரிக்கத் தலைநகரில் இராஜாங்க செயலாளர் ஆண்டனி ஜே. பிளிங்கனைச் சந்தித்தார். 2023ஆம் ஆண்டு கொண்டாடப்படவுள்ள இராஜதந்திர உறவுகளின் 75வது ஆண்டு நிறைவு உட்பட பல்வேறு துறைகளில் இலங்கை - அமெரிக்க உறவுகளை மேலும் மேம்படுத்துவது குறித்து அவர்கள் 02ஆந் திகதி, வெள்ளிக்கிழமை இராஜாங்க திணைக்களத்தில் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர்.

செயலாளர் பிளிங்கனுடனான சந்திப்பிற்கு மேலதிகமாக, பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் ஆகிய இரு முக்கிய கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தலைவர்கள் மற்றும் இராஜாங்கத் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் உட்பட முக்கிய அமெரிக்கப் பிரமுகர்களுடனான சந்திப்புக்களையும் அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதரகம் இந்த விஜயத்தின் போது மேலும் பல தொடர்புகளை எளிதாக்கியது.

சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிலையத்தின் (யுஎஸ்எயிட்) நிர்வாகி சமந்தா பவரையும் சந்தித்து உரையாடிய அமைச்சர், யுஎஸ்எயிட் இலங்கைக்கு தாராளமாக ஆதரவளித்து வருவதைப் பாராட்டினார். அவர் குடிமைப் பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான துணைச் செயலாளர் உஸ்ரா சேயாவையும் சந்தித்ததுடன், அவருடன் இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகத்தின் துணைச் செயலாளர் அஃப்ரீன் அக்தர் இணைந்திருந்தார்.

இந்த சந்திப்புக்களில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருடன் அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் மஹிந்த சமரசிங்க மற்றும் இலங்கைத் தூதரகத்தின் இராஜதந்திர அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

 

இலங்கைத் தூதரகம்,

வொஷிங்டன் டி.சி.

 

2022 டிசம்பர் 03

Please follow and like us:

Close