பிம்ஸ்டெக்கின் 25வது ஆண்டு நிறைவை இலங்கை கொண்டாட்டம்

பிம்ஸ்டெக்கின் 25வது ஆண்டு நிறைவை இலங்கை கொண்டாட்டம்

வங்காள விரிகுடா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான முன்முயற்சியின் (பிம்ஸ்டெக்) 25வது ஆண்டு நினைவாக லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவனத்துடன் இணைந்து வெளிநாட்டு அமைச்சு 2022 அக்டோபர் 04ஆந் திகதி நிகழ்வொன்றை லக்ஷ்மன்

கதிர்காமர் நிறுவனத்தில் ஏற்பாடு செய்தது. இந்த நிகழ்வுக்கு தெற்காசிய பொருளாதார மாதிரியாக்க வலையமைப்பு மற்றும் இன்ரீச் குளோபல் ஆகியன ஆதரவளித்தன.

இந்நிகழ்ச்சியில் முக்கிய பேச்சாளராக கலந்து கொண்ட வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, இந்த ஆண்டு மார்ச் மாதம் இலங்கையில் நடைபெற்ற  5வது பிம்ஸ்டெக் உச்சிமாநாடு தொடங்கி, ஏறக்குறைய ஆறு மாதங்களுக்குப் பிறகு, இந்த நிகழ்வை இலங்கை நடாத்துவது குறிப்பிடத்தக்க மற்றும் முக்கியமான தருணம் எனக் குறிப்பிட்டார். ஒரு அமைப்பாக பிம்ஸ்டெக் கடந்த காலத்தில் அளித்த பங்களிப்பின் அம்சங்கள் மற்றும் இன்றைய பிம்ஸ்டெக்கின் பொருத்தம் மற்றும் முக்கியத்துவம் குறித்ததாக அமைச்சரின் முக்கிய உரை அமைந்திருந்தது.

தென்கிழக்கு ஆசிய பிராந்தியமானது உலகில் வேகமாக அபிவிருத்தியடைந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இருப்பதாகவும், பொது கலாச்சாரம், பொதுவான மத நடைமுறைகள், வளமான வரலாறு மற்றும் ஆவணப்படுத்தப்பட்ட நாகரீகத் தொடர்புகள் ஆகியவற்றை பிம்ஸ்டெக் கொண்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தனது உரையில் தெரிவித்தார். எந்தவொரு பிராந்திய முகாமின் வெற்றியும் அதன் உறுப்பு நாடுகளின் மக்களின் நல்வாழ்வுக்கான பங்களிப்பின் அடிப்படையில் அமையும் என மீண்டும் வலியுறுத்திய இராஜாங்க அமைச்சர், பிம்ஸ்டெக்கின் வரவிருக்கும் வேலை நிகழ்ச்சி நிரல்களின் மூலம் இந்த நோக்கத்தை அடைய முடியும் என்றும், உறுப்பு நாடுகளின் மக்களுக்கு சேவையை விரிவுபடுத்தும் உன்னதப் பொறுப்பை நோக்கி நிறுவனத்தை வழிநடத்த முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் பேராசிரியர் சஜ் யூ. மென்டிஸ் நிகழ்வின் ஆரம்ப உரையை நிகழ்த்தினார். வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பணிப்பாளர் நாயகம் திருமதி. மனோரி மல்லிகாராட்சி மற்றும் முன்னணி பொருளாதார நிபுணர் கலாநிதி நிஹால் பிடிகல ஆகியோரால் நடாத்தப்பட்ட இரண்டு குழு கலந்துரையாடல்களும் இந் நிகழ்வில் இடம்பெற்றன. முன்னாள் வெளிவிவகார செயலாளர் திரு. ரவிநாத ஆரியசிங்க பிம்ஸ்டெக்கின் முன்னாள் செயலாளர் நாயகம் திரு. சுமித் நாகந்தல, லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி லக்சிறி மெண்டிஸ், சிரேஷ்ட பேராசிரியர் ஹேமந்தி ரணசிங்க மற்றும் பாதுகாப்பு அமைச்சு, இலங்கை வர்த்தக சபை மற்றும் தனியார் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பிரபல குழு உறுப்பினர்களும் இந் நிகழ்வில் பங்கேற்றனர். கடந்த 25 ஆண்டுகளில் பிம்ஸ்டெக்கின் முன்னேற்றம் மற்றும் அதன் இன்றைய பொருத்தம் குறித்து குழு உறுப்பினர்கள் கலந்துரையாடினர். இந்நிகழ்வில் இராஜதந்திரிகள், கல்வியியலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

2022 அக்டோபர் 04

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close