மறைந்த பிரியந்த குமாரவின் குடும்பத்தின் நிதிப் பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் தொடர்பில் இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவருடன் வெளிநாட்டு அமைச்சர் கலந்துரையாடல்

மறைந்த பிரியந்த குமாரவின் குடும்பத்தின் நிதிப் பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் தொடர்பில் இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவருடன் வெளிநாட்டு அமைச்சர் கலந்துரையாடல்

பாகிஸ்தானின் சியால்கோட் பகுதியில் கடந்த வாரம் கலகக் கும்பலால் கொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் குடும்பத்தின் நிதிப் பாதுகாப்பு அல்லது இழப்பீடு தொடர்பான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இன்று கொழும்பில் உள்ள பதில் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் தன்வீர் அஹமட்டை சந்தித்துக் கலந்துரையாடினார்.

பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவையும் நம்பிக்கையையும் எடுத்துரைத்த அமைச்சர், மறைந்த பிரியந்த குமாரவின் குடும்பத்திற்கு நீதி கிடைப்பதற்காக பாகிஸ்தான் அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

சனிக்கிழமையன்று பாகிஸ்தான் வெளிநாட்டு அமைச்சர் கௌரவ ஷா மஹ்மூத் குரேஷியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டதை நினைவுகூர்ந்த அமைச்சர், அவர் தனது இரங்கலைத் தெரிவித்ததாகவும், விசாரணையின் அனைத்து தகவல்களையும் விரைவில் இலங்கைக்கு வழங்குவதாக உறுதியளித்ததாகவும் தெரிவித்தார்.

இந்த விசாரணையை தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்று, சம்பவம் குறித்து உடனடியாக விசாரணைகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ள பாகிஸ்தான் பிரதமரின் தலையீட்டை வெளிநாட்டு அமைச்சர் பாராட்டினார். சியால்கோட்டில் உள்ள வர்த்தக சமூகம் நல்கிய 100,000 அமெரிக்க டொலர் நன்கொடை மற்றும் பிரியந்த குமாரவின் மாத சம்பளத்தை அவரது விதவை மனைவிக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளமையை அவர் வரவேற்றார்.

காலஞ்சென்ற பிரியந்த குமாரவின் இரு பிள்ளைகளின் எதிர்காலம் குறித்தும், உரிய நேரத்தில் கொடுப்பனவுகளை பெற்றுக் கொடுப்பதன் முக்கியத்துவம் குறித்தும் இலங்கை அரசாங்கம் கரிசனை கொண்டுள்ளதாக அமைச்சர் பீரிஸ் சுட்டிக்காட்டினார். எந்தவொரு இடையூறும் இல்லாமல் ஒவ்வொரு மாதமும் அவரது சம்பளம் குடும்பத்திற்குக் கிடைப்பதை உறுதி செய்வதற்கான வழிமுறையை ஏற்பாடு செய்யுமாறு பாகிஸ்தான் தூதுவரிடம் அவர் கேட்டுக்கொண்டார்.

இச்சம்பவத்திற்கு தனது மனமார்ந்த மன்னிப்புக்களைத் தெரிவித்துக் கொண்ட பதில் உயர்ஸ்தானிகர், முழுமையான விசாரணைகளுக்குத் தேவையான நடவடிக்கைகளை பாகிஸ்தான் அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாகவும், குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவதை உறுதி செய்வதாகவும் உறுதியளித்தார். பாகிஸ்தானில் வாழும் ஏனைய அனைத்து இலங்கையர்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பாகிஸ்தானில் உள்ள சட்ட நடைமுறைப்படுத்தல் முகவர் நிலையங்கள் செயற்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

வெளிநாட்டு அமைச்சு,

கொழும்பு

2021 டிசம்பர் 09

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close