கௌரவ வெளிநாட்டு அமைச்சரின் உரை (தூதுக்குழுவின் தலைவர்) 2021 சியோல் ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் அமைச்சரவை மட்ட அமர்வு 2021 டிசம்பர்7-8 அமர்வு I: அமைதியை நிலைநிறுத்துதல்

கௌரவ வெளிநாட்டு அமைச்சரின் உரை (தூதுக்குழுவின் தலைவர்) 2021 சியோல் ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் அமைச்சரவை மட்ட அமர்வு 2021 டிசம்பர்7-8 அமர்வு I: அமைதியை நிலைநிறுத்துதல்

கொரியக் குடியரசின் வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் மாண்புமிகு சுங் ஈயு-யோங் அவர்களே,
மேன்மை தங்கியவர்களே,
பிரியமான சக ஊழியர்களே,

ஆரம்பத்தில், 2021 சியோல் ஐ.நா. அமைதி காக்கும் அமைச்சரவை மட்ட அமர்வை மெய்நிகர் ரீதியாக நடாத்துவதற்காக குறுகிய கால அறிவிப்பில் திறமையான ஏற்பாடுகளைச் செய்தமைக்காக, வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் மாண்புமிகு சுங் ஈயு-யோங் மற்றும் கொரியக் குடியரசின் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவிக்க விரும்புகின்றேன். 12 உறுப்பு நாடுகளின் இணைத் தலைவர்கள்,[1] அமைதி செயற்பாட்டுத் திணைக்களம் மற்றும் செயற்பாட்டு ஆதரவுத் திணைக்களம் உள்ளிட்ட ஐ.நா. செயலகம் ஆகியன 2021 ஐ.நா. அமைதி காக்கும் அமைச்சரவை மட்ட செயன்முறைக்கு வழங்கிய பெறுமதிமிக்க பங்களிப்புக்ளையும் நாங்கள் அங்கீகரிக்கின்றோம்.

2014ஆம் ஆண்டு முதல் அமைதி காக்கும் உச்சி மாநாட்டிலிருந்து, ஐ.நா. அமைதி காக்கும் அமைச்சரவை மட்ட செயன்முறையானது, சீருடை அணிந்த பணியாளர்களின் உறுதியான உறுதிமொழிகள், நிதி ஆதாரங்கள் மற்றும் அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்கான திறன் அபிவிருத்தி ஆகியவற்றின் மூலம் ஐ.நா. அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்கு முக்கிய பங்களிப்பைச் செய்துள்ளது. 2021 அமைச்சரவை மட்ட செயன்முறையானது, பெறுமதிமிக்க கருத்துப் பரிமாற்றம் மற்றும் தற்போதைய மற்றும் எதிர்கால ஐ.நா. அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்குப் பயனளிக்கும் உறுதிமொழிகளை அறிவிக்கும் என்பது எனது நம்பிக்கை.

அமைதியை நிலைநிறுத்துதல், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் உலகின் பல பகுதிகளில் அரசியல் செயன்முறைகளை ஆதரிப்பதில் ஐ.நா. அமைதி காக்கும் படையினர் 1948ஆம் ஆண்டு ஐ.நா. அமைதி காக்கும் பணியின் தொடக்கத்தில் இருந்து முக்கிய பங்கு வகித்துள்ளனர். அமைதியைக் காப்பதன் மூலம், ஐக்கிய நாடுகள் சபை உலகளாவிய விவகாரங்களிலும், உறுப்பு நாடுகளுக்கிடையேயான கூட்டாண்மைகளை வலுப்படுத்துவதிலும் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது.

அதன் நீண்ட வரலாறு முழுவதும், ஐ.நா. அமைதி காத்தல் பல சவால்களை எதிர்கொண்டு பரிணமித்துள்ளது. இன்றைய அமைதி காக்கும் படையினர் கொந்தளிப்பான மற்றும் சிக்கலான செயற்பாட்டு சூழல்களில் செயற்படுகின்றனர். இத்தகைய சவால்களுக்குப் பதிலளிப்பதற்காக, அமைதி காக்கும் நடவடிக்கைகளில் பரஸ்பர அரசியல் அர்ப்பணிப்பைப் புதுப்பிப்பதற்காக, 'அமைதி காக்கும் முயற்சிக்கான நடவடிக்கை' (A4P) ஐ 2018ஆம் ஆண்டில் பொதுச் செயலாளர் தொடங்கினார். அமைதி காக்கும் நடவடிக்கைக்கான செயற்பாட்டுடன் அமைதி காக்கும் நடவடிக்கைகளில் 'பகிரப்பட்ட அர்ப்பணிப்புப் பிரகடனத்தை' ஆதரிக்கும் நாடுகளுடன் இலங்கை இணைந்திருப்பதில் மகிழ்ச்சி அடைகின்றது.

2021ஆம் ஆண்டுக்கான சியோல் ஐ.நா. அமைதி காக்கும் அமைச்சரவை மட்ட அமர்வின் நோக்கமானது, 2021-23க்கான முன்னுரிமைகளில் கவனம் செலுத்தும் 'அமைதி காக்கும் பிளஸ் முயற்சி' (A4P+) க்கு இணங்க ஐ.நா. அமைதி காக்கும் நடவடிக்கைகளின் செயற்றிறன் மற்றும் தாக்கத்தை மேம்படுத்துதல் உட்பட ஐ.நா. அமைதி காக்கும் பணியை வலுப்படுத்துவதாகும். இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் மருத்துவத் திறன் அபிவிருத்தி மற்றும் தொழில்நுட்பம் ஆகியன கருப்பொருளாக இருக்கும் என்பதும் பொருத்தமானது. அமைதி காக்கும் பணியை நவீனமயமாக்குவதற்கும், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் வளங்களுடன் பணிகளைச் சித்தப்படுத்துவதற்குமான அனைத்து முயற்சிகளுக்கும் இலங்கை ஆதரவளிக்கின்றது. இத்தகைய நடவடிக்கைகள், அதிக ஆபத்துள்ள சூழல்களுக்கு நீடித்த நிலைநிறுத்தங்கள் மற்றும் கோவிட்-19 தொற்றுநோயின் தொடக்கம் உள்ளிட்ட அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில், அமைதி காக்கும் படையினரின் செயற்பாட்டுத் திறனை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் மையமாக உள்ளன. கொரியக் குடியரசின் வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் தனது உரையில் 'அமைதி காக்கும் பணியில் தொழிநுட்பம் மற்றும் மருத்துவத் திறனைக் கட்டியெழுப்புவதற்கான சியோல் முன்முயற்சியை' அறிவித்ததை இலங்கை மகிழ்ச்சியுடன் குறிப்பிடுகின்றது. இந்த முன்முயற்சியில் கொரியக் குடியரசுடன் இணைந்து ஈடுபடுவதற்கு நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் பணியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை பங்களித்துள்ளது. ஐ.நா. அமைப்புடன் இலங்கை ஈடுபடுவதிலும் அனைத்து நாடுகளுடனும் நல்லுறவைப் பேணுவதிலும் இது ஒரு முக்கிய அங்கமாகும். இந்த அமைச்சர்கள் சந்திப்பில் சமர்ப்பிக்கப்பட்ட உறுதிமொழிகளுக்கு இணங்க, ஐ.நா. அமைதி காக்கும் பணியில் எமது பங்களிப்பை மேம்படுத்துவதற்கு இலங்கை எதிர்பார்க்கின்றது.

இன்று, மத்திய ஆபிரிக்கா, தென் சூடான் மற்றும் மாலி உட்பட மிகவும் தேவையுடைய சில இடங்களுக்கு இலங்கையின் அமைதி காக்கும் படையினர் அனுப்பப்பட்டுள்ளனர். அவர்கள் தமது தொழின்முறை மற்றும் மறுக்கமுடியாத திறமைக்காக ஐ.நா. வின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளனர். எமது அமைதி காக்கும் பங்களிப்புக்களின் வரலாற்றில் 11 இலங்கைப் படையினர் தமது இன்னுயிர்களைத் தியாகம் செய்துள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் பணியில் உச்சக்கட்ட தியாகத்தைச் செய்துள்ள அனைத்து ஐ.நா. அமைதி காக்கும் வீரர்களுக்கும் நாம் அஞ்சலி செலுத்துகின்றோம்.

மோதலால் தாக்கமடைந்துள்ள நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் அமைதியை நிலைநாட்டுவதில் நீடித்த தாக்கத்தை இந்த அமைச்சர்கள் சந்திப்பில் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்கள் மற்றும் உறுதிமொழிகள் ஏற்படுத்தும் என்ற உண்மையான நம்பிக்கையுடன் நிறைவு செய்ய விரும்புகின்றேன்.

[1] பங்களாதேஷ், கனடா, எத்தியோப்பியா, இந்தோனேசியா, ஜப்பான், நெதர்லாந்து, பாகிஸ்தான், கொரியக் குடியரசு, ருவாண்டா, ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா மற்றும் உருகுவே

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close