'இலங்கைத் தயாரிப்புக்கள் - வளரும் நட்பு' கண்காட்சி - 2021 மற்றும் தேயிலைப் பங்குதாரர்கள் தெஹ்ரானில் ஒன்றுகூடல்

 ‘இலங்கைத் தயாரிப்புக்கள் – வளரும் நட்பு’ கண்காட்சி – 2021 மற்றும் தேயிலைப் பங்குதாரர்கள் தெஹ்ரானில் ஒன்றுகூடல்

இலங்கைத் தேயிலை சபையுடன் இணைந்து ஈரானில் உள்ள இலங்கைத் தூதரகம், 2021 டிசம்பர் 06ஆந் திகதி சான்சரி  வளாகத்தில் தேயிலைப் பங்குதாரர்களின் ஒன்றுகூடலுடன் இணைந்து 'இலங்கைத் தயாரிப்புக்கள் - வளரும் நட்பு' விவசாய ஏற்றுமதிக் கண்காட்சி - 2021 ஒன்றை ஏற்பாடு செய்தது. தேயிலை சங்கங்கள், முன்னணி இறக்குமதியாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், பிரபல வர்த்தகர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். ஈரானில் இலங்கைத் தேயிலை மற்றும் ஏனைய விவசாய ஏற்றுமதிப் பொருட்களை ஊக்குவிப்பதும், சம்பந்தப்பட்ட பங்குதாரர்களுடன் தொடர்புகொள்வதும் இந்த நிகழ்வின் நோக்கங்களாகும்.

தனது வரவேற்பு உரையில், தெஹ்ரானில் தேயிலைப் பங்குதாரர்கள் இணைந்து இந்த முதல் விவசாய ஏற்றுமதிக் கண்காட்சியின்  முக்கியத்துவத்தை எடுத்துரைத்த தூதுவர் விபுலதேஜ விஸ்வநாத் அபோன்சு, சிலோன் தேயிலை, இதர உணவு மற்றும் பானத் தயாரிப்புக்களின் தனித்துவமான குணாதிசயங்களை பல ஆரோக்கிய நன்மைகளுடன் வலியுறுத்தினார். ஈரானில் இலங்கையின் விவசாய ஏற்றுமதிப் பொருட்களை ஊக்குவிப்பதில் பங்கேற்பாளர்கள் அனைவரும் தமது ஆதரவை வழங்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

தலைமை உரையை ஆற்றிய இலங்கைத் தேயிலை சபையின் தலைவர் ஜயம்பதி மொல்லிகொட, இலங்கையின் தேயிலை தொழில்துறை, தேயிலை உற்பத்திகளின் கடுமையான தரக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், இலங்கைத் தேயிலை ஏற்றுமதி சந்தையின் தற்போதைய  நிலை மற்றும் ஈரானில் சிலோன் தேயிலையை ஊக்குவிப்பதில் எதிர்காலத் திட்டங்கள், இலக்குகள் மற்றும் உத்திகள் பற்றிய ஒட்டுமொத்த பார்வையை வழங்கினார். உலகத் தேயிலை சந்தையை விளக்கிய தலைவர், உலக சந்தையில் அதிகளவு தேயிலையைக் கொள்வனவு செய்யும் ஏழு நாடுகளுள் ஈரான் இலங்கைக்கு ஒரு முக்கியமான சந்தையாகும் எனக் குறிப்பிட்டார்.

ஈரானிய தேயிலை இறக்குமதியாளர்கள் இலங்கைத் தேயிலை சபை அதிகாரிகளுடன் நேரடியாக தமது பிரச்சினைகள், தடைகள் மற்றும் சவால்களை தீர்த்துக்கொள்வதற்கானதொரு தளத்தை இந் நிகழ்வின் ஊடாடும் அமர்வு உருவாக்கியது. இக்கண்காட்சியானது ஈரான்  தேயிலை சங்கத்தின் தலைவர் ஹமித்ரேசா மொவாஸ்ஸாகி அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், இலங்கைத் தேயிலை மற்றும் தென்னை, இனங்கள், உலர் பழங்கள் மற்றும் மூலிகைச் செடிகள் உட்பட ஏனைய விவசாய ஏற்றுமதிப் பொருட்களை காட்சிப்படுத்தியது.

தலைவர் ஹமித்ரேசா மொவாஸ்ஸாகி தனது சுருக்கமான கருத்துக்களில், தனக்கு விடுக்கப்பட்ட அழைப்பிற்காக இலங்கைத் தூதுவர்  மற்றும் அவரது ஊழியர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்ததோடு, கண்காட்சி மற்றும் ஒன்றுகூடல் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கு பாராட்டுக்களையும் தெரிவித்தார். சிலோன் தேயிலையை ஈரானில் ஊக்குவிப்பதற்காக தனது சங்கத்தின் பூரணமான ஆதரவை வழங்குவதாக உறுதியளித்த அவர், ஈரானியத் தரத்திற்கு இணங்க நல்ல தரமான தேயிலை ஏற்றுமதியை தொடருமாறு இலங்கை அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.

ஆதித்ய ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்தியர் சரத் குணவர்தனவினால் வழங்கப்பட்ட இலங்கையில் 'ஆயுர்வேத' தயாரிப்புக்களின் நன்மைகள் குறித்த விளக்கக்காட்சியில் பங்கேற்பாளர்கள் அதிக ஆர்வம் காட்டினர். சிலோன் தேயிலை பற்றிய ஆவணப்படமும்  திரையிடப்பட்டது.

பங்கேற்பாளர்களுக்கு தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உயர் ரகத் தேநீர் வழங்கப்பட்டது. அனைத்து விருந்தினர்களுக்கும்  இலங்கைத் தேயிலை மற்றும் அன்பளிப்புக்கள் அடங்கிய பரிசுப் பொதி வழங்கப்பட்டது.

இலங்கைத் தூதரகம்,

தெஹ்ரான்

2021 டிசம்பர் 0​9

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close