லாவோ மக்கள் ஜனநாயகக் குடியரசின் ஜனாதிபதி தோங்லோன் சிசோலித்திடம் வியன்டியானில் வைத்து தூதுவர் சி.ஏ. சமிந்த ஐ. கொலொன்ன தனது நற்சான்றிதழ் கடிதங்களை கையளிப்பு

லாவோ மக்கள் ஜனநாயகக் குடியரசின் ஜனாதிபதி தோங்லோன் சிசோலித்திடம் வியன்டியானில் வைத்து தூதுவர் சி.ஏ. சமிந்த ஐ. கொலொன்ன தனது நற்சான்றிதழ் கடிதங்களை கையளிப்பு

தாய்லாந்து இராச்சியத்திற்கான இலங்கைத் தூதுவர் மற்றும் ஐக்கிய நாடுகளின் ஆசிய மற்றும் பசுபிக் பொருளாதார சமூக ஆணைக்குழுவின் (யுனெஸ்கெப்) நிரந்தரப் பிரதிநிதி சி.ஏ. சமிந்த ஐ. கொலொன்ன, லாவோ மக்கள் ஜனநாயகக் குடியரசிற்கான இலங்கையின் அசாதாரண மற்றும் முழுமையான அதிகாரமுடைய தூதுவராக தன்னை நியமனம் செய்யும் நற்சான்றிதழ் கடிதங்களை, லாவோ மக்கள் ஜனநாயகக் குடியரசின் ஜனாதிபதி தோங்லோன் சிசோலித் அவர்களிடம் வியன்டியானில் உள்ள தேசியச் சபையில் வைத்து 2022 நவம்பர் 10ஆந் திகதி கையளித்தார்.

தூதுவர் சமிந்தா கொலொன்னவுடன், மெக்சிகோ, கத்தார், இத்தாலி, அல்ஜீரியா, இஸ்ரேல், நோர்வே, மாலைதீவு, ஸ்பெயின், ஈரான், லக்சம்பர்க், பஹ்ரைன், பெல்ஜியம், வெனிசுலா, ஒஸ்ட்ரியா ஆகிய நாடுகளில் இருந்து புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பேங்கொக் அல்லது ஹனோயில் இருந்து செயலாற்றுவதற்கு ஒரே நேரத்தில் அங்கீகாரம் பெற்ற பதினான்கு தூதுவர்களும் தமது நற்சான்றிதழ் கடிதங்களை ஜனாதிபதி சிசோலித்திடம் கையளித்தனர்.

புதிதாக நியமிக்கப்பட்ட தூதுவர்களை அன்புடன் வரவேற்று வாழ்த்திய பின்னர், லாவோ மக்கள் ஜனநாயகக் குடியரசுக்கு அளிக்கப்பட்ட அனைத்து ஆதரவுக்கும் நன்றிகளைத் தெரிவித்த ஜனாதிபதி சிசோலித் அனைத்து நாட்டுத் தலைவர்களுக்கும் அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்த அதே வேளை, நிலையான அபிவிருத்தி இலக்குகளில் தனது நாட்டின் சாதனைகளை சுட்டிக் காட்டி, புதிதாக நியமிக்கப்பட்ட தூதுவர்கள் லாவோவுடனான உறவுகள், நட்பு மற்றும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.

தூதுவர் கொலொன்ன, இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அன்பான வாழ்த்துக்களை ஜனாதிபதி சிசோலித் அவர்களுக்கு தெரிவித்ததுடன், பௌத்த மத விழுமியங்களின் அடிப்படையில் லாவோ மக்கள் ஜனநாயகக் குடியரசுடனான உறவுகளை பலப்படுத்துவதாக உறுதியளித்தார். இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதி சிசோலித்துக்கு அவர் அழைப்பு விடுத்தார். ஜனாதிபதி சிசோலித், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், கடந்த காலத்தில் அவர் மேற்கொண்ட இலங்கை விஜயத்தையும் நினைவு கூர்ந்தார்.

அரசியல், சமூகக் கலாச்சார, வர்த்தகம், பொருளாதாரம், முதலீடு, சுற்றுலா போன்ற துறைகளில் இரு நாடுகளுக்கிடையிலான உறவுகள் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துதல் மற்றும் மக்களுடனான தொடர்புகளை மேம்படுத்துதல் தொடர்பாக வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ஃபோக்ஸே கைகாம்பிதௌன், கைத்தொழில் மற்றும் வர்த்தகத் துணை அமைச்சர் மனோதோங் வோங்சே மற்றும் தகவல், கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துணை அமைச்சர் ஃபோசி கியோமணிவோங் ஆகியோருடன் தூதுவர் கொலொன்ன பயனுள்ள இருதரப்புக் கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.

லாவோ மக்கள் ஜனநாயகக் குடியரசின் வெளியுறவு அமைச்சின் உபசரணைப் பணிப்பாளர் நாயகம் ஆம்பே கிண்டவோங் மற்றும் ஆசியா பசிபிக் மற்றும் ஆபிரிக்கா திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் விரோத் சுந்தரா ஆகியோரையும் மரியாதை நிமித்தம் சந்தித்த தூதுவர், லாவோ தேசிய வர்த்தக சபை மற்றும் தொழிற்துறையின் தலைவர் சைபந்தித் ராஸ்போன், தேசிய அபிவிருத்திக்கான லாவோ முன்னணியின் பணிப்பாளர் நாயகம் பவுண்டவி ஃபோனெதசைன் மற்றும் லாவோ பயண முகவரின் தலைவருடன் கலந்துரையாடினார். லாவோ மக்கள் ஜனநாயகக் குடியரசில் உள்ள இலங்கையின் கௌரவத் தூதுவர் மனிலே திபலன்சி அவர்கள் வியன்டியானில் தங்கியிருந்த காலத்தில் தூதுவருக்கு உதவி செய்தார்.

தூதுவர் கொலொன்ன, மத்திய பௌத்த நட்புறவு அமைப்பின் தலைவர் அதி வணக்கத்திற்குரிய மஹா பவுன்மா சிம்மாபோம், சிசாகெட் விகாரையின் தலைமை மதகுரு மகாவெட் மசெனாய், மத்திய பௌத்த நட்புறவு அமைப்பின் துணைத் தலைவர் மற்றும் லாவோவின் ஓங்டு விகாரையின் பிரதம பௌத்த மதகுரு ஆகியோருக்கு மரியாதை செலுத்தினார். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தூதுவருக்கு தங்களது உயர்ந்த ஆசீர்வாதங்களைத் தெரிவித்த அவர்கள், இலங்கை - லாவோ பௌத்த மற்றும் மத உறவுகளை பலப்படுத்துவதற்கான தமது அர்ப்பணிப்பை உறுதியளித்தனர். லாவோ மக்கள் ஜனநாயகக் குடியரசில் வசிக்கும் மற்றும் பணிபுரியும் இலங்கை சமூகத்தின் உறுப்பினர்களையும் தூதுவர் வியன்டியானில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகத்தில் வைத்து சந்தித்தார்.

இலங்கைத் தூதரகம் மற்றும் நிரந்தரப் பணிமனை,

பேங்கொக்

2022 நவம்பர் 15

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close