பொதுமக்கள் அவையின் சபாநாயகருடன் வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் சந்திப்பு

பொதுமக்கள் அவையின் சபாநாயகருடன் வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் சந்திப்பு

பொதுமக்கள் அவையின் சபாநாயகர் சேர் லிண்ட்சே ஹொய்ல் அவர்களை வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் 2021 ஒக்டோபர் 26ஆந் திகதி சந்தித்தார்.

வெஸ்ட்மினிஸ்டர் பாராளுமன்றத்தின் பிரதியமைப்பாக இலங்கைப் பாராளுமன்றம் உருவானமையை நினைவுகூர்ந்த அமைச்சர் பேராசிரியர் பீரிஸ், இரண்டு சட்டவாக்க சபைகளுக்கும் இடையிலான பிணைப்புக்களை வலுப்படுத்துவதில் இலங்கை ஆர்வமாக இருப்பதாகத் தெரிவித்தார். தனது சட்டவாக்க நிறுவனங்களில் சீர்திருத்தங்களை மேற்கொள்வது குறித்து இலங்கை பரிசீலனை செய்து வருவதாகவும், 1972ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்த இரு அவை கொண்ட சட்டவாக்க முறைமையை மீள நிறுவுதல் தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் 35 வயதிற்குட்பட்ட ஆற்றல் மிகுந்த, சுறுசுறுப்பான நாடாளுமன்ற உறுப்பினர்களாவர் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

குழுக்களை வலுப்படுத்துதல் மற்றும் அவற்றிற்கு அதிகமான பொறுப்புக்கள் வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் வலியுறுத்தினார். பொதுநலவாய சூழலிலான ஒத்துழைப்பு குறித்து குறிப்பிடுகையில், பொதுநலவாயம் பன்முகத்தன்மையைக் கொண்டாடுவதாகவும், பயனுள்ள பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டார். பரஸ்பரம் வசதியான நேரத்தில் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் சேர் லிண்ட்சே ஹொய்ல் அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

பாராளுமன்றக் குழுக்களை வலுப்படுத்துவதும், அவற்றிற்கு அதிகாரமளிப்பதும் அரசாங்கத்தின் பணிகளை முறையாக மேற்கொள்வதற்கு வழி வகுக்கும் என சேர் லிண்ட்சே ஒப்புக்கொண்டார். ஒரு சட்டமன்றத்தின் இரண்டாவது அவையைப் பொறுத்தவரை, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் அவையின் மேலாதிக்கம் முக்கியமானது என்றும், இரண்டாவது அவை மிகையானதாக இருக்கக்கூடாது என்றும் அவர் கருத்துத் தெரிவித்தார். பொதுநலவாயம் என்பது ஒரு குடும்பம் என்றும், அது ஒருவருக்கு ஒருவர் உதவிகளை நல்குவதாகவும் என்றும் அவர் ஒப்புக்கொண்டார். பௌதீக ரீதியில் சாத்தியமானவரை விரைவில் இலங்கைக்கு நேரில் விஜயம் செய்வதற்கான அழைப்பை சேர் லின்ட்சே ஏற்றுக்கொண்டார்.

வெளிநாட்டு அமைச்சு,

கொழும்பு

2021 அக்டோபர் 28

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close