பிரித்தானிய இலங்கை சமூகத்தின் பங்கேற்புடன் லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தீபாவளிக் கொண்டாட்டம்

பிரித்தானிய இலங்கை சமூகத்தின் பங்கேற்புடன் லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தீபாவளிக் கொண்டாட்டம்

 லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தனது வருடாந்த தீபாவளிக் கொண்டாட்டங்களை பிரித்தானிய இலங்கை சமூகம், நாடாளுமன்ற உறுப்பினர்கள், இங்கிலாந்து அரசாங்கப் பிரதிநிதிகள் மற்றும் ஏனைய முக்கியஸ்தர்களின் பங்கேற்புடன் 2021 நவம்பர் 19ஆந் திகதி உயர்ஸ்தானிகராலய வளாகத்தில் நடாத்தியது.

வெட்போர்ட் வேல் முருகன் கோவிலின் சிவஸ்ரீ இலட்சுமி தியாகராஜ குருக்களின் தலைமையில் இந்து சமய வழிபாடுகளுடன் விழாக்கள் ஆரம்பமாகியதுடன், அவர் நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கும் இலங்கை மற்றும் அதன் மக்களுக்கும் ஆசிகளை வேண்டிக்கொண்டார்.

பொதுநலவாயம் 2.6 பில்லியன் மக்களைக் கொண்டது என்றும் அதில் 60% ஆனோர் 30 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், எனவே இலங்கையின் இளைஞர்கள் தமது இசை மற்றும் கலாச்சாரத்தால் பார்வையாளர்களை மகிழ்விப்பதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் கொண்டாட்டங்களில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட பொதுநலவாய அமைப்பின் பொதுச் செயலாளர் கௌரவ பட்ரிசியா ஸ்கொட்லேன்ட் தெரிவித்தார்.

வீடியோ செய்தியை வெளியிட்ட வெளியுறவு, பொதுநலவாயம் மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் தெற்காசியா, ஐக்கிய நாடுகள் மற்றும் பொதுநலவாய அமைச்சரான விம்பிள்டன் பிரபு தாரிக் அஹ்மத், இந்த நிகழ்வில் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். இலங்கைக்கும் ஐக்கிய இராச்சியத்துக்கும் இடையிலான தொடர்பை வலுப்படுத்துவதற்கு பிரித்தானிய இலங்கைப் புலம்பெயர்ந்தோரின் அளப்பரிய பங்களிப்பை அவர் பாராட்டினார்.

கூட்டத்தில் உரையாற்றிய உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேன, இருளுக்கு எதிரான ஒளியின் ஆன்மீக வெற்றியைக் குறிக்கும் ஒளியின் திருவிழாவான தீபாவளியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். தீபாவளி, 'விளக்குகளின் வரிசை' இருளை அகற்றுவது போல், உலகம் தொற்றுநோயின் இருளில் இருந்து மெதுவாக வெளியே வருவதுடன், அதனால் இந்தக் கொண்டாட்டங்களில் எம்மால் பௌதீக ரீதியாக பங்கேற்க முடிந்ததாகக் குறிப்பிட்டார். இந்தக் கொண்டாட்டங்களில் பிரித்தானிய இலங்கையர்களின் பன்முகத்தன்மைவாய்ந்த காட்சி மகிழ்ச்சியளிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கலாசாகர யூ.கே. வின் பணிப்பாளர் உஷா ராகவனின் மாணவர்களின் அழகிய பரதநாட்டிய நிகழ்ச்சிகளும், சிவதாரிணி சகாதேவன் மற்றும் ஸ்ரீ எம். பாலசந்தர் ஆகியோரின் வீணை மற்றும் மிருதங்க இசை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. உயர்ஸ்தானிகராலயத்தின் ஊழியர்களின் பிள்ளைகள் மற்றும் பிரித்தானிய இலங்கை சமூகத்தின் பல உறுப்பினர்களால் பஜனை நிகழ்த்தப்பட்டது.

உத்தியோகபூர்வ நிகழ்ச்சியின் நிறைவில், பங்கேற்பாளர்களுக்கு ஐக்கிய இராச்சியத்தில் உள்ள லீஃப் ஹோட்டல் குழுமத்தின் அனுசரணையில் வட இலங்கையின் பாரம்பரிய உணவு வகைகளுடன் கூடிய இரவு விருந்து வழங்கப்பட்டது.

இலங்கை உயர்ஸ்தானிகராலயம்

லண்டன்

2021 நவம்பர் 26

 

 

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close