நெதர்லாந்து தூதுவர் 'ஆரஞ்சு உலக' பதாகையை வெளிநாட்டு அமைச்சருக்கு கையளிப்பு

நெதர்லாந்து தூதுவர் ‘ஆரஞ்சு உலக’ பதாகையை வெளிநாட்டு அமைச்சருக்கு கையளிப்பு

வருடாந்த 'ஆரஞ்சு உலகம்: பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான செயற்பாட்டின் 16 நாட்கள்' சர்வதேசப் பிரச்சாரத்தைக்  குறிக்கும் வகையில், கொழும்பில் உள்ள நெதர்லாந்து இராச்சியத்தின் தூதுவர் தஞ்சா கோங்கிரிஜ் 'ஆரஞ்சு உலக' பதாகையை வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸிடம் 2021 நவம்பர் 26ஆந் திகதி வெளிநாட்டு அமைச்சில் வைத்து கையளித்தார்.

பதாகையை ஏற்றுக்கொண்ட பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், பாலின அடிப்படையிலான வன்முறைகளை எதிர்த்துப் போராடுவதற்கான  இலங்கையின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியதுடன், இந்தப் பகுதியில் இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ள முயற்சிகள் குறித்து விளக்கினார். பாலின சமத்துவத்தை அடைவதற்கும், அனைத்து மகளிர் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்குமான நிலையான இலக்கை அடைவதில் பாலின வன்முறையைத் தடுப்பதும், நிவர்த்தி செய்வதும் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகும் என்பதை அவர் அங்கீகரித்தார். அரசாங்கத்தின் தேசியக் கொள்கைக் கட்டமைப்பான 'நாட்டைக் கட்டியெழுப்பும் செழிப்பான பார்வை' பாலின சமத்துவம், பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறையைக் குறைத்தல் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

'ஆரஞ்சு உலகம்: பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான செயற்பாட்டின் 16 நாட்கள்' செயற்பாட்டின் சர்வதேசப் பிரச்சாரம் 1991 இல் தொடங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் இந்நிகழ்வு பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினமான  நவம்பர் 25ஆந் திகதி தொடங்கி மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10ஆந் திகதி முடிவடைகின்றது. ஆரஞ்சு நிறம் பிரகாசமான எதிர்காலத்தையும், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறை இல்லாத உலகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாகும்.

ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, உலகளவில் 736 மில்லியன் பெண்கள், கிட்டத்தட்ட மூன்றில் ஒருவர் நெருங்கிய கூட்டாளியால்  வன்முறை, கூட்டாளி அல்லாதவரால் பாலியல் வன்முறை அல்லது இருவராலுமான வன்முறைக்கு தமது வாழ்நாளில் ஒரு முறையாவது உட்படுத்தப்படுகின்றனர். கோவிட்-19 தொற்றுநோய் பெண்களுக்கு எதிரான வன்முறைக்கான ஆபத்துக் காரணிகளை அதிகப்படுத்தியுள்ளது.

பெண்கள் மற்றும் சிறுவர்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா (பாராளுமன்ற உறுப்பினர்) மற்றும் இராஜாங்க அமைச்சின் செயலாளர் குமாரி ஜயசேகர ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

வெளிநாட்டு அமைச்சு,

கொழும்பு

2021 நவம்பர் 27

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close