கென்யாவிற்கான இலங்கையின் முதலாவது கொக்கோ பீட் ஏற்றுமதி ஆரம்பம்

கென்யாவிற்கான இலங்கையின் முதலாவது கொக்கோ பீட் ஏற்றுமதி ஆரம்பம்

இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர், அபிவிருத்தி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சர் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் கென்யா விஜயத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கான இலங்கை மற்றும் கென்யாவின் முயற்சிகள் மேலும் வேகம் பெற்றன. 2021 அக்டோபரில், இருதரப்பு உறவுகள் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நட்பு மற்றும் ஒத்துழைப்பை எட்டியிருந்தாலும், வர்த்தக உறவுகள் அதன் உண்மையான திறனை உணரவில்லை. அதனைக் கருத்தில் கொண்டு, கென்யாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கான எதிர்கால புதிய தயாரிப்புக் கூடையை உருவாக்குவது குறித்து அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கவனம் செலுத்தினார். இது இலங்கையிலிருந்து கென்யாவிற்கு முதன்முதலில் கொக்கோ பீட் ஏற்றுமதி ஒப்பந்தத்தை இலங்கை பெற்றுக்கொள்வதில் உச்சத்தை எட்டியுள்ளது. கென்யாவிற்கு அனுப்பப்பட்ட முதலாவது கொக்கோ பீட் 2022 ஜனவரி 04ஆந் திகதி கொழும்பு துறைமுகத்தில் வைத்து அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் அடையாளமாக கொடியசைத்து அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிகழ்வு கென்யாவை இலங்கைக்கான புதிய வர்த்தக இடமாக முன்னிறுத்தியது.

அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் விஜயத்தின் தொடர்ச்சியாக, உயர்ஸ்தானிகர் கென்யாவில் உள்ள பல கொக்கோ பீட் இறக்குமதியாளர்களை அணுகி, இலங்கையிலிருந்து முதலாவது கொக்கோ பீட் சரக்குகளை இறக்குமதி செய்வதற்கு மயிலீன் கென்யா லிமிடட் நிறுவனத்துடன் ஏற்பாடு செய்வதில் வெற்றி பெற்றார்.

கிழக்கு ஆபிரிக்காவின் பொருளாதார, நிதி மற்றும் போக்குவரத்து மையமாக இருக்கும் கென்யா, வர்த்தகம், முதலீடு, சுற்றுலா மற்றும் பல பொருளாதார நடவடிக்கைகளுக்கான இலாபகரமான நிலைமைகளை உலகிற்கு வழங்குகின்றது. இருந்தபோதிலும், கென்யாவுக்கான இலங்கையின் ஏற்றுமதியின் பெறுமதி பல ஆண்டுகளாக சீரற்ற போக்கைக் காட்டியது. 2019ஆம் ஆண்டில் இலங்கையின் ஏற்றுமதிப் பெறுமதி 24 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்ததுடன், அவை பின்னப்பட்ட ஆடைகள், அட்டைப்பெட்டிகள், பெட்டிகள், பொதியிடல் பொருட்கள், பிரதான இழைகள் போன்ற சில பொருட்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கைக்கும் கென்யாவுக்கும் இடையில் வர்த்தக விரிவாக்கத்திற்கான பாரிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவதானித்துள்ளார். கென்யாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் வேலுப்பிள்ளை கனநாதன் அவர்களும் கலந்து கொண்டு இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளில் புதிய மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான செயற்திட்டமொன்றை உருவாக்குவதற்குப் பங்களித்தார்.

கென்யாவில் நன்கு அபிவிருத்தியடைந்துள்ள விவசாயத் துறையில் மண்ணைத் தயாரிப்பதற்காக கொக்கோ பீட் பயன்படுத்தப்படுகின்றது. இலங்கை கொக்கோ பீட் உற்பத்தியாளர்கள் கென்யப் பயனாளர்களின் வேண்டுகோளின்படி ஒரு தனித்துவமான தயாரிப்பு முறைமையைப் பயன்படுத்தியுள்ளதுடன், இதனை அவர்கள் தற்போது பயன்படுத்துவதுடன் ஒப்பிடுகையில் இலங்கைத் தயாரிப்பு உயர் தரம் வாய்ந்தது என அவர்களை நம்பவைத்தது. கென்யாவின் மொத்த வருடாந்த கொக்கோ பீட் இறக்குமதித் திறன் 10,000 மெட்ரிக் டொன் ஆவதுடன், இது இலங்கையிலிருந்து கென்யாவிற்கான இந்த உற்பத்தியின் நிலையான ஏற்றுமதிப் போக்குக்கு உத்தரவாதம் அளிக்கின்றது

உயர்ஸ்தானிகர் கனநாதனும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுடன் கொழும்புத் துறைமுகத்தில் கென்யாவிற்கான கொக்கோ பீட் ஏற்றுமதிச் சரக்குகளின் முதல் கப்பலை கொடியசைத்து ஆரம்பித்து வைத்தார். இலங்கையில் இருந்தபோது, கென்யாவிற்கு ஏற்றுமதி செய்யக்கூடிய சாத்தியமான புதிய பொருட்களின் சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக உயர்ஸ்தானிகர் கனநாதன் பல ஏற்றுமதியாளர்களைச் சந்தித்தார்.

இலங்கை உயர்ஸ்தானிகராலயம்,

நைரோபி

2022 ஜனவரி 05

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close