காத்மண்டுவிலுள்ள புதிய கோவிலுக்கு சமாதி புத்தர் சிலையை நன்கொடையாக வழங்கிய  இலங்கைத் தூதரகம்

 காத்மண்டுவிலுள்ள புதிய கோவிலுக்கு சமாதி புத்தர் சிலையை நன்கொடையாக வழங்கிய  இலங்கைத் தூதரகம்

2021 அக்டோபர் 12 ஆம் திகதி இடம்பெற்ற சிறப்பு நிகழ்வு ஒன்றில், லலித்பூரில் புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட ஸ்ரீ ஆஷ்டா சத்தர்மயாதன் விஹாரின் வணக்கத்திற்குரிய மஹா சங்கத்தினருக்கு, இலங்கை தூதரகத்தினால் சமாதி புத்தர் சிலையின் ஐந்து அடி உயர உருவப்பிரதி ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. இச்சிலையானது, பிரித் ஓதும் வைபவத்திற்குப் பின்னர் இலங்கைத் தூதுவர் ஹிமாலி அருணதிலக மற்றும் தூதரக அலுவலர்களால் மஹா சங்கத்தினரிடம் கையளிக்கப்பட்டது. பௌத்த பிக்குமார், பிக்குணிகள், தூதரக அலுவலர்கள், தெரிவுசெய்யப்பட்ட உள்நாட்டுப் பிரதிநிதிகள், அதிகாரிகள் மற்றும் பெருந்தொகையான பக்தர்கள் அகியோரை உள்ளடக்கிய வண்ணமயமான ‘பாதயாத்திரை’ அல்லது ஊர்வலத்தில் பக்தர்களால் பாடப்பட்ட ‘கியான் மாலா’ அல்லது பௌத்த பக்திப்பாடல்களுக்கு மத்தியில் இச்சிலையானது சடங்கு சம்பிரதாயங்களுடன் பாதுகாப்பாக கோவிலுக்கு எடுத்துச்செல்லப்பட்டது.   ஸ்ரீ ஆஷ்டா சத்தர்மயாதன் விஹார், நேபாளத்தின் மூன்றாவது பெரிய நகரும், காத்மண்டு பள்ளத்தாக்கிலுள்ள மூன்று மாவட்டங்களின் ஒன்றுமான பாரம்பரிய கலாச்சாரத்திற்குப் பெயர்போன லலித்பூரில் உள்ளது.

இக்கோவிலில் இடம்பெற்ற சாதாரணமான ஒரு நிகழ்வில், கூடியிருந்தவர்களுக்கு மத்தியில் பேசிய வணக்கத்திற்குரிய தேரர், புத்த சிலையை நன்கொடையளிப்பதன் நன்மைகளையும் வழிபடுபவர்களுக்கு அமைதியான சிந்தனையையும் தெய்வீக எண்ணங்களையும் ஊக்குவிக்கும் சமாதி சிலையின் உருவப்பிரதியின் முக்கியத்துவத்தையும் விளக்கினார். இலங்கை அனுராதபுரத்திலுள்ள மஹாவெனாவ பூங்காவிலுள்ள மூல சமாதி சிலையைச் சென்று தரிசிக்குமாறு நேபாள பக்தர்களிடம் வணக்கத்துக்குரிய தேரர் மேலும் கேட்டுக்கொண்டார். இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவின் அடித்தளத்தை உருவாக்கும், நேபாளத்துடனான ஆழமான வேரூன்றிய சமய, கலாச்சார உறவுகளை வலுப்படுத்த இலங்கை எப்போதும் பாடுபடும் என தூதுவர் அருணதிலக கூறினார்.

2020 ஆம் ஆண்டின் இறுதியில் ஸ்ரீ ஆஷ்டா சதர்மயாதன் விஹாரின் தலைமைப் பொறுப்பாளர் வணக்கத்துக்குரிய நேபாளயே பன்னசார தேரரால் புத்தர் சிலைக்கான கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் பின்னர் தூதரகம், இலங்கை இரத்மலானையிலுள்ள பரம தம்ம சேதிய பிரிவெனவுடன் இணைந்து, சமாதி நிலையிலுள்ள ஐந்து அடி உயரமான புத்தர் சிலையை உருவாக்குவதற்கான ஒழுங்குகளை மேற்கொண்டது. பெப்ரவரி 2021 இல் இச்சிலையை காத்மண்டுவிற்குக் கொண்டு செல்வதற்கான ஏற்பாட்டியல் ஒழுங்குகளை இலங்கை வெளிநாட்டமைச்சு மேற்கொண்டது. இச்சிலையைப் பிரதிஷ்டை செய்வதற்கான வழிபாட்டு அறையை உரிய நேரத்தில் பூர்த்திசெய்ய முடியாமல் நோய்ப்பரவல் சூழ்நிலை தடுத்ததன் காரணமாக, சிலையைக் கையளிப்பது தாமதமானது.

லும்பினி பௌத்த பல்கலைக்கழகத்தின் வண. பேராசிரியர் நேபாளியே சங்கிச்ச தேரோ, வண. நேபாளியே பன்னசார தேரோ, ஸ்ரீ ஆஷ்டா சத்தர்மயாதன் விஹாரின் பிரதான பொறுப்பாளர், ஸ்ரீ சுமங்கல் விஹாரின் நேபாளியே பன்னரத்ன தேரோ மற்றும் பெரும் எண்ணிக்கையிலான பௌத்த துறவிகளும் பிக்குணிகளும் இப்புண்ணிய நிகழ்வில் கலந்துகொண்டனர். உள்ளூராட்சி சபைகளின் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள், இளம் பௌத்த சபை உறுப்பினர்கள் உட்பட்ட பௌத்த சபைகளின் உறுப்பினர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த 300 பௌத்த பக்தர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இலங்கை தூதரகம்

காத்மண்டு

15 அக்டோபர் 2021

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close