கல்வி மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் துறைகளில் இலங்கை மற்றும் மலேசியாவின்  மேம்படுத்தப்பட்ட கூட்டுறவு

கல்வி மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் துறைகளில் இலங்கை மற்றும் மலேசியாவின்  மேம்படுத்தப்பட்ட கூட்டுறவு

14 அக்டோபர் 2021 அன்று, கொழும்பிலுள்ள மலேசிய உயர்ஸ்தானிகர் டான் யாங் தாய் அவர்கள்,  வெளிநாட்டமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் அவர்களை மரியாதை நிமித்தமாக வெளிநாட்டமைச்சில் சந்தித்தார். இலங்கைக்கும் மலேசியாவிற்கும் இடையிலான நெருங்கிய மற்றும் நட்புடனான இருதரப்பு உறவுகளை நினைவுகூர்ந்த வெளிநாட்டமைச்சரும் உயர்ஸ்தானிகரும், கொவிட்-19 இற்குப் பிந்திய காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டுறவினை மேலும் விரிவாக்குவதற்கான வழிவகைகள் பற்றிக் கலந்தாலோசித்தனர்.

1957 இல் மலேசியா சுதந்திரம் பெற்றமையை முதன் முதலாக ஏற்றுக்கொண்ட நாடுகளில் ஒன்றாக இலங்கை இருந்ததையும், 2017 இல் இரு நாடுகளுக்கும் இடையிலான 60 ஆவது இராஜதந்திர உறவுகளின் ஆண்டு நிறைவு கொண்டாட்டங்களையும் பற்றிக் குறிப்பிட்ட உயர்ஸ்தானிகர், விமான இணைப்புகளை முழு அளவில் புதுப்பித்தல் மற்றும் இரு நாட்டு மக்களுக்கும் இடையிலான வலுவான ஊடாடல்களை ஏற்படுத்தல்  உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கூட்டுப்பங்காண்மைகளை மீள அமைப்பதற்கான தனது வலுவான ஆர்வத்தை வெளிப்படுத்தினார்.

வெளிநாட்டமைச்சர் பீரிஸ் அவர்கள், இரு நாடுகளுக்கும் நன்மைகளைத் தரக்கூடிய துறைகளில் மேற்கொண்டு ஒருங்கிணைப்புக்களைக் கட்டியெழுப்பவேண்டிய தேவையை வலியுறுத்தி, இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான இருதரப்பு  கூட்டுப்பங்காண்மையையும் அடிக்கோடிட்டுக்  காட்டினார்.

டிஜிட்டல் மயமாக்கல் துறையில் மலேசியாவில் பாரிய முன்னேற்றம் குறித்து அமைச்சர் பீரிஸ் வெகுவாகப் பாராட்டினார். அரச துறையில் நிருவாகம், நீதிமன்ற வழக்குகள், கல்வி, சுகாதாரம்  உள்ளிட்ட பல்வேறு பிரதான துறைகளில் வேகமான முன்னேற்றத்தை அடைவதற்குரிய ஒரு பகுதியாக டிஜிட்டல் மயமாக்கலை அவர் இனங்காட்டினார். இத்துறையின் மீதான  மலேசியாவின் அனுபவங்களை அறிந்துகொள்ளும் இலங்கையின் விருப்பத்தை வெளிப்படுத்திய அமைச்சர், இந்நாட்டின் தேவைகளுக்கேற்ப அதிலுள்ள சில அம்சங்களைத் தழுவிக்கொள்ளவேண்டும் என்றும் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலின்போது; மலேசிய பல்கலைக்கழகங்கள் தமது மாணவர்கள் வெளிநாட்டுக்குப் புலம்பெயராமலேயே உயர்கல்வியைத் தொடரும் வண்ணம் புகழ்பெற்ற வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் ஒருங்கிணைந்து பல்வேறு கற்கை நெறிகளை வழங்கும் மலேசியாவின் கல்வி முறையை அமைச்சர் பீரிஸ் பாராட்டினார். இலங்கையின் உயர்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வியில்  போதுமான உட்கட்டுமானங்கள் இல்லாமையைக் கோடிட்டுக் காட்டிய அமைச்சர் பீரிஸ், தொழிற்பயிற்சியின் விரிவாக்கம், இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டுறவில் மேம்பாட்டை எட்டக்கூடிய துறையாக அடையாளம் காட்டினார்.

இச்சந்திப்பில், வெளிநாட்டமைச்சு மற்றும் கொழும்பிலுள்ள மலேசிய உயர்ஸ்தானிகரகத்தைச்  சேர்ந்த சிரேஷ்ட அதிகாரிகளும்  கலந்துகொண்டனர்.

வெளிநாட்டு அமைச்சு

கொழும்பு

15 அக்டோபர் 2021

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close