'இலங்கையின் வெப்பமண்டல தீவு சொர்க்கத்தைக் கண்டுபிடித்தல்' -  அமெரிக்காவின் வொஷிங்டன் டி.சி.யில் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு

 ‘இலங்கையின் வெப்பமண்டல தீவு சொர்க்கத்தைக் கண்டுபிடித்தல்’ –  அமெரிக்காவின் வொஷிங்டன் டி.சி.யில் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு

வடக்கு அரைக்கோளத்தில் குளிர்காலத்தில் அமெரிக்க பிரஜைகள் மத்தியில் இலங்கையை ஒரு முக்கிய சுற்றுலா தலமாக ஊக்குவிக்கும் முகமாக, இன்டரநெஷனல் கிளப் ஒஃப் டி.சி.யுடன் இணைந்து, அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதரகம் 2022 செப்டம்பர் 30ஆந் திகதி வொஷிங்டன் டி.சி.யில் உள்ள அதன் வளாகத்தில் மாலை வரவேற்பு நிகழ்ச்சியை நடாத்தியது.

முக்கிய அமெரிக்க அரசாங்க நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட அதிகாரிகளுடன் இன்டரநெஷனல் கிளப் ஒஃப் டி.சி. யின் உறுப்பினர்களை உள்ளடக்கிய 80 க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

தூதுவர் மஹிந்த சமரசிங்க உரையாற்றுகையில், உலகின் சில சிறந்த கடற்கரைகள், பழங்கால இடிபாடுகள் மற்றும் 2500 ஆண்டுகளுக்கு முந்தைய பௌத்த கலாச்சாரத் தலங்கள், விளையாட்டு மற்றும் சாகசங்கள் வரை பயணிகளுக்கு நாடு வழங்கும் பல்வேறு சுற்றுலா இடங்கள் குறித்து விளக்கியதுடன், பங்கேற்பாளர்களை இலங்கைக்கு வருகை தந்து அதன் சிறப்பைக் கண்டறியுமாறு அழைப்பு விடுத்தார்.

இலங்கைக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் தெரசிட்டா ஷ்காஃபர், தனது கருத்துக்களில், நாட்டில் உள்ள தனித்துவமான சுற்றுலா வாய்ப்புக்கள் குறித்து பார்வையாளர்களுக்கு விளக்கியதுடன், தனது சொந்த அனுபவத்தை நினைவு கூர்ந்த அதே வேளை, தீவின் நேர்மறையான சமூகக் கலாச்சார முன்னேற்றத்தைப் பாராட்டினார்.

பிரத்யேகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட சுற்றுலா சார்ந்த வீடியோக்களை இயக்குவதன் மூலம் இலங்கையின் சுற்றுலாவை ஊக்குவிப்பதற்காக தூதரகம் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டது.

'அசங்க டொமாஸ்க்' மற்றும் 'செரண்டிப்' நடனக் குழுவின் மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் கலாசார நிகழ்ச்சி நடைபெற்றது. இலங்கையின் வளமான பாரம்பரிய மற்றும் நாட்டுப்புற நடனப் பாரம்பரியத்தை சித்தரிக்கும் வௌ;வேறு பாணிகளில் அவர்கள் நடனங்களை நிகழ்த்தினர். 'சிலோன் பேரா' குழுவினரின் திறமைகள் வாத்திய இசையுடன் இலங்கையின் தாளங்களுடன் விருந்தினர்களைக் கவர்ந்தன. நெத்மி வீரசிங்கவினால் நாட்டின் வடக்குப் பகுதியின் கலாச்சாரத்தை சித்தரிக்கும் பரதநாட்டிய நடனம், பல்வேறு வகைகளைச் சேர்த்து, நாட்டின் பல கலாச்சாரத் தன்மையை வெளிப்படுத்தியது. இலங்கையின் சமகால இசையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிங்களப் பாடல்களின் நேரடி ஒலிபரப்பு நிகழ்வு முழுவதும் விருந்தினர்களை மகிழ்வித்தது.

குறிப்பாக இலங்கை சமையல்காரரால் தயாரிக்கப்பட்ட சிலோன் சுவையூட்டிப் பொருட்களால் ருசிக்கப்பட்ட ஆடம்பரமான உண்மையான இலங்கை உணவுகளை பங்கேற்பாளர்கள் அனுபவிக்க முடிந்தது. புதிய அப்பங்கள், கொத்து ரொட்டி மற்றும் ஏனைய விஷேட உணவுகளை வழங்கும் நேரடி நிலையங்கள் மிகவும் பரபரப்பாக இயங்கின. தேநீர் நிலையத்தில், தூய சிலோன் கறுப்புத் தேநீருக்கு மேலதிகமாக, சுவையான சூடான தேநீர் வழங்கப்பட்டது.

நியூயோர்க்கில் உள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஜி.எஸ்.ஏ. இன் அனுசரணையுடன் வெற்றியாளர்களுக்கு பரிசுகள் மற்றும் தீம் ரிசார்ட்ஸ் அன்ட் ஸ்பாஸ், சினமன் ஹோட்டல்ஸ் அன்ட் ரிசோர்ட்ஸ் மற்றும் ஜெட்விங் ஹோட்டல்ஸ் போன்ற இலங்கையில் உள்ள  புகழ்பெற்ற ஹோட்டல்களில் தங்குவதற்கான ஹோட்டல் பொதிகளை வழங்கும் ரேஃபிள் குலுக்கலுடன் நிகழ்வு நிறைவு பெற்றது.

தனது நன்றியுரையில், சர்வதேச கழகத்தின் தலைவர் சஞ்சய ஹெட்டிஹேவா, தமது நிறுவனத்துடன் கைகோர்த்த தூதுவர் மற்றும் ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்தார். இன்டரநெஷனல் கிளப் ஒஃப் டி.சி. கலை, இசை, நடனம் மற்றும் நாடகம் உள்ளிட்ட  சர்வதேச கலாச்சார அனுபவங்களை வழங்குவதுடன், 90 நாடுகளுக்கு மேல் பிரதிநிதித்துவப்படுத்தும் 47,000 க்கும் மேற்பட்ட தொழில் வல்லுநர்கள் மற்றும் வொஷிங்டன் டி.சி. இல் உள்ள 80 க்கும்  மேற்பட்ட தூதரகங்களுடன் இணைந்து கச்சேரிகள், திருவிழாக்கள், கோலாகலங்கள் மற்றும்  வரவேற்பு நிகழ்ச்சிகளை வழங்குவதற்காக உலகெங்கிலும் உள்ள சுவையான உணவுகளை சுவைக்கும் வாய்ப்பையும் வழங்குகின்றது.

இலங்கைத் தூதரகம்,

வொஷிங்டன் டிசி.

2022 அக்டோபர் 07

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close