அவுஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளை மீண்டும் ஒருமுறை இலங்கைக்கு வகை தருமாறு அழைப்பு விடுத்த இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்தின் தலைவர் கிமர்லி பெர்னாண்டோ, அவுஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் மத்தியில் இலங்கையை ஊக்குவிக்குமாறு விக்டோரியா, தெற்கு அவுஸ்திரேலியா மற்றும் தஸ்மேனியா ஆகிய இடங்களிலுள்ள சுற்றுலா நடத்துனர்களை நேற்று நடைபெற்ற வெபினாரின் போது வலியுறுத்தினார். முழுமையாக தடுப்பூசிகளை செலுத்திக் கொண்ட பயணிகள் தளர்வான கோவிட்-19 விதிமுறைகளுடன் இலங்கைக்கு விஜயம் செய்வது தற்போது மிகவும் இலகுவானது என அவர் குறிப்பிட்டார். முழுமையாக தடுப்பூசிகளை செலுத்திக் கொண்ட சுற்றுலாப் பயணிகள் விஜயம் செய்யும் போது அவர்கள் வருகையின் போதான பி.சி.ஆர். பரிசோதனை அல்லது தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் தமது பிரயாணத்திட்டத்தின்படி விமான நிலையத்தை விட்டு வெளியேறி நாட்டின் எந்தப் பகுதிக்கும் சுதந்திரமாகச் செல்ல முடியும். வருங்கால சுற்றுலாப் பயணிகள் https://www.srilanka.travel/helloagain/ என்ற இணையத்தளத்தின் ஊடாக அனைத்து தகவல்களையும் ஒரே இடத்திலிருந்து பெற்றுக்கொள்வதை இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகம் எளிதாக்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கையில் உள்ள பிரத்தியேகமான மற்றும் பலதரப்பட்ட சுற்றுலா தயாரிப்புக்களை இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்தின் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் துஷான் விக்ரமசூரிய பங்கேற்பாளர்களுக்காக வழங்கினார்.
இலங்கைக்கான பயண ஆலோசனைகளைக் குறைத்து, அவுஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு விஜயம் செய்வதற்கான தடையை அவுஸ்திரேலியா நீக்கியுள்ள நிலையில், அவுஸ்திரேலிய சந்தையில் இலங்கையை ஊக்குவிப்பதற்கு சுற்றுலா நடத்துபவர்களுக்கு இதுவே சிறந்த தருணமாகும் என துணைத் தூதுவர் கபில பொன்சேகா தெரிவித்தார். ஏற்கனவே, அவுஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் தொண்ணூறு நாட்களுக்கான சுற்றுலா வீசாக்களைப் பெற்றுக் கொள்வதற்காக துணைத் தூதரகத்தின் வாயிலாக விண்ணப்பிக்கத் தொடங்கியுள்ளனர். www.eta.gov.lk என்ற இணையவழி மின்னணு பயண அங்கீகார அமைப்பின் மூலம் சுற்றுலாப் பயணிகள் முப்பது நாள் வீசாக்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
அவுஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கான இலங்கை விமான சேவையின் தயாரிப்புக்களை மெல்பேர்னின் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸின் முகாமையாளர் எஸ்.பி. மொஹான் வழங்கினார். கொழும்பில் இருந்து மெல்போர்னுக்கும் கொழும்பிலிருந்து சிட்னிக்கும் செல்லும் நேரடி விமானங்களின் பயண எண்ணிக்கை ஏற்கனவே ஒவ்வொரு இடத்திற்கும் வாரத்திற்கு 3 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையுடன் பயண எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கை ஹோட்டல்களில் கோவிட் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உரையாற்றிய இலங்கை சுற்றுலா ஹோட்டல் சங்கத்தின் தலைவர் சனத் உக்வத்தே, நன்கு பயிற்சி பெற்ற ஊழியர்களுடன் ஹோட்டல்கள் பாதுகாப்பான சேவைகளை வழங்கும் என உறுதியளித்தார். இலங்கைக்கு உள்வரும் சுற்றுலா செயற்பாட்டாளர்களின் செயற்குழு உறுப்பினர் சரித் டி அல்விஸ் மற்றும் சுற்றுலாத்துறையில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் ரொஹான் அபேவிக்ரம ஆகியோரும் இந்த வெபினாரில் உரையாற்றினர்.
அவுஸ்திரேலியாவின் விக்டோரியா, தெற்கு அவுஸ்திரேலியா மற்றும் தஸ்மேனியா மாகாணங்களிலுள்ள சுற்றுலா நடத்துனவர்கள், இலங்கை சமூக ஊடக சகோதரத்துவம் மற்றும் இலங்கை அவுஸ்திரேலியா வர்த்தக சபையின் தலைவர் டில்கி பெரேரா மற்றும் அதன் உறுப்பினர்களும் இந்த வெபினாரில் கலந்துகொண்டனர். இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகம், ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் மெல்போர்ன் அலுவலகம் மற்றும் ஸ்ரீ லங்கா அவுஸ்திரேலியா வர்த்தக சபை ஆகியவற்றின் ஒத்துழைப்புடன், மெல்போர்ணில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகத்தினால் இந்த வெபினார் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இலங்கையின் துணைத் தூதரகம்,
மெல்போர்ன்
2021 நவம்பர் 19