தூதுவர் என்.எல். கொட்ஃப்ரே குரே தனது நற்சான்றிதழ்களை ஐஸ்லாந்து ஜனாதிபதியிடம் கையளிப்பு

 தூதுவர் என்.எல். கொட்ஃப்ரே குரே தனது நற்சான்றிதழ்களை ஐஸ்லாந்து ஜனாதிபதியிடம் கையளிப்பு

ஐஸ்லாந்து குடியரசிற்கான இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் முழு  அதிகாரமுடைய மற்றும் சிறப்புத் தூதுவராக நியமிக்கப்படும் தனது நற்சான்றிதழ் கடிதத்தை ஐஸ்லாந்தின ஜனாதிபதியான குய்னி த. ஜொஹானஸன் அவர்களிடம் 2021 நவம்பர் 10 ஆந் திகதி ரெய்காவிக் நகரில் உள்ள ஐஸ்லாந்து ஜனாதிபதியின் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் வைத்து தூதுவர் என்.எல். கொட்ஃப்ரே குரே கையளித்தார். தூதுவர் தனது நற்சான்றிதழ்களை சமர்ப்பிக்கும் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் வாழ்த்துக்களை ஐஸ்லாந்து ஜனாதிபதிக்குத் தெரிவித்தார்.

நற்சான்றிதழ்களைக் கையளிக்கும் நிகழ்வைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே  குறிப்பாக நீலப் பொருளாதாரம் மற்றும் மீன்பிடித் துறையின் அனைத்துப் பகுதிகளிலுமான சாத்தியமான இருதரப்பு ஒத்துழைபு குறித்து தூதுவர் குரே மற்றும் ஜனாதிபதி ஜொஹானஸன் ஆகிய இருவரும் கலந்துரையாடினர். இலங்கையில் தொற்றுநோயின் நிலை மற்றும் அதனைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. காலநிலை மாற்றம் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல், மனித உரிமைகள் மற்றும் பாலின சமத்துவம் குறித்த ஐஸ்லாந்தின் கருத்துக்களும் குறிப்பிடப்பட்டன.

நிரந்தர இராஜாங்க செயலாளர் திரு. மார்ட்டின் ஐஜோல்ஃப்சன், இலங்கையின் கௌரவத்  தூதுவர், கடல் மற்றும் நன்னீர் ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் மீன்வளப் பயிற்சித் திட்டத்திற்கான ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழகத்தின் பீடாதிபதி, ஐஸ்லாண்டிக் சமுத்திரக் கொத்தணி சபையின் தலைவர், ஐக்கிய நாடுகள் புவிவெப்ப பயிற்சியின் பீடாதிபதி, யுனெஸ்கோ பாலின சமத்துவ ஆய்வுகள் மற்றும் பயிற்சித் திட்டத்தின் பீடாதிபதி மற்றும் ஐஸ்லாந்திலுள்ள பயண முகவர்களுடன் தூதுவர் இருதரப்பு சந்திப்புக்களில் ஈடுபட்டார்.

இலங்கைத் தூதரகம்,

ஒஸ்லோ

2021 நவம்பர் 19

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close