வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி, தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் டொனால்ட் லூவுடன் அமெரிக்க - இலங்கை இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடல்

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி, தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் டொனால்ட் லூவுடன் அமெரிக்க – இலங்கை இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடல்

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி 2022 அக்டோபர் 19ஆந் திகதி தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் தூதுவர்  டொனால்ட் லூவை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார்.

2022 ஆகஸ்ட் 04ஆந் திகதி கம்போடியாவில் நடைபெற்ற 29வது ஆசியான் பிராந்திய மன்றத்தின் பக்க அம்சமாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அன்டனி பிளிங்கனுடன் இடம்பெற்ற சந்திப்பு மற்றும் தற்போதைய பொருளாதார சவால்களை எதிர்கொள்வதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்காக அண்மைக் காலங்களில் அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு மேற்கொள்ளப்பட்ட பல உயர்மட்ட விஜயங்கள் குறித்து குறிப்பிட்ட வெளிநாட்டு  அலுவல்கள் அமைச்சர், அந்தச் சவால்களை முறியடிப்பதற்காக அமெரிக்கா தொடர்ந்தும் நல்கி வருகின்ற ஆதரவை வரவேற்றார்.

சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் சர்வதேச நாணய நிதிய கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள் உள்ளடங்கலாக, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் சப்ரி மற்றும் தூதுவர் லு ஆகியோர் அமெரிக்க - இலங்கை இருதரப்பு உறவுகளின் பன்முக அம்சங்கள் குறித்து கலந்துரையாடினர்.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் மற்றும் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் சிரேஷ்ட அதிகாரிகளும் தூதுவர் லுவுடன் இணைந்திருந்தனர். இந்த சந்திப்பில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருடன் வெளியுறவுச் செயலாளர் அருணி விஜேவர்தன மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

தூதுவர் லு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும், பாதுகாப்புச் செயலாளர் (ஓய்வுபெற்ற) ஜெனரல் கமல் குணரத்னவையும் சந்தித்தார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

2022 அக்டோபர் 20

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close