இலங்கைத் தூதுவரின் நற்சான்றிதழ்களை ஓமானின் அதிமேதகு சுல்தான் கையேற்பு

 இலங்கைத் தூதுவரின் நற்சான்றிதழ்களை ஓமானின் அதிமேதகு சுல்தான் கையேற்பு

 

ஓமன் சுல்தானேற்றுக்கான இலங்கையின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ஏ.எல்.  சபருல்லா கான் தனது நற்சான்றிதழ் கடிதத்தை 2022 அக்டோபர் 18ஆந் திகதி அல் பராக்கா அரண்மனையில் வைத்து, ஓமான் சுல்தானேற்றின் அதிமேதகு சுல்தான் ஹைதம் பின் தாரிக்கிடம் கையளித்தார்.

நற்சான்றிதழ் கடிதம் கையளிக்கப்பட்டவுடன், அதிமேதகு சுல்தானுடனான சந்திப்பின் போது,  தூதுவர் இலங்கை ஜனாதிபதியின் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இலங்கைக்கும் ஓமானுக்கும் இடையிலான நல்லுறவு தொடர்பில் குறிப்பிடுகையில், அண்மையில் இலங்கைக்கு வழங்கப்பட்ட மருத்துவப் பொருட்கள் உட்பட ஓமான் அரசாங்கத்தின் தொடர்ச்சியான ஆதரவிற்கு தனது நன்றியைத் தெரிவித்த தூதுவர், இரு நாடுகளினதும் கூட்டு நலன்களுக்கு சேவை செய்யும் விதத்தில் பல களங்களில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதில் தனது அதிகபட்ச முயற்சிகளை மேற்கொள்வதை உறுதிப்படுத்தினார்.

இலங்கை ஜனாதிபதியின் வாழ்த்துக்களுக்கு தனது நன்றிகளைத் தெரிவித்த அதிமேதகு  சுல்தான், தூதுவரை வரவேற்றார்.

அரச நீதிமன்ற திவான் அமைச்சர், வெளியுறவு அமைச்சர், அரச நெறிமுறைத் தலைவர், ஓமான்  அரச நீதிமன்ற தளபதி மற்றும் அதிமேதகு சுல்தானின் இராணுவ உதவியாளர்கள் இவ் வைபவத்தில் கலந்து கொண்டனர். தூதுவருடன் தூதரகத்தின் ஆலோசகர் திலினி அபேசேகர மற்றும் அவரது மகளும் கலந்து கொண்டனர்.

தூதுவர் சபருல்லா கான் 1994 இல் இலங்கை வெளிநாட்டு சேவையில் இணைந்த ஒரு தொழில்  இராஜதந்திரி ஆவார். அவர் இதற்கு முன்னர் அம்மான், பேங்கொக், புதுடெல்லி, ரியாத், ஜித்தா, அபுதாபி, சென்னை மற்றும் நியூயோர்க்கில் உள்ள இலங்கைத் தூதரகங்களில் பல்வேறு பதவிகளில் பணியாற்றினார். அவர் கடைசியாக நைஜீரியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக பணியாற்றினார். வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில், கொன்சியூலர், உபசரணை, பொருளாதார விவகாரங்கள் மற்றும் அரசியல் விவகார அரங்குகளில் பணியாற்றியுள்ள அவர், இறுதியாக மேலதிக செயலாளராக பதவி வகித்தார்.

இலங்கைத் தூதரகம்,

மஸ்கட்

2022 அக்டோபர் 20

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close