ரஷ்யக் கூட்டமைப்பின் வெளிவிவகார அமைச்சர் கௌரவ செர்ஜி லாவ்ரோவ் அவர்களுடனான இணைந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன அவர்களின் ஊடக அறிக்கை - 14 ஜனவரி 2020 - வெளிநாட்டு அமைச்சு - கொழும்பு

ரஷ்யக் கூட்டமைப்பின் வெளிவிவகார அமைச்சர் கௌரவ செர்ஜி லாவ்ரோவ் அவர்களுடனான இணைந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன அவர்களின் ஊடக அறிக்கை – 14 ஜனவரி 2020 – வெளிநாட்டு அமைச்சு – கொழும்பு

 

ரஷ்யக் கூட்டமைப்பின் வெளிவிவகார அமைச்சர் கௌரவ செர்ஜி லாவ்ரோவ் அவர்களே,

வெளிநாட்டு உறவுகள் அமைச்சின் இராஜாங்க செயலாளர் அவர்களே,

ரஷ்யத் தூதுக்குழுவின் பிரதிநிதிகளே, உறுப்பினர்களே, மற்றும் இலங்கை மற்றும் ரஷ்ய ஊடகங்களின் உறுப்பினர்களே

கௌரவம் மிகுந்தவரே, தங்களை இலங்கைக்கு வரவேற்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.

ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அவர்களின் தொலைநோக்கு மிகுந்த தலைமைத்துவத்தின் கீழ் ஏற்பட்டுள்ள மகத்தான முன்னேற்றம் மற்றும் அபிவிருத்திகளுக்காக ரஷ்யக் கூட்டமைப்பிற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். விவசாய உற்பத்தித் திறனிலான முக்கியமான சாதனைகள் குறிப்பாக பாராட்டத்தக்கவையாகும். ஜனாதிபதி புட்டின் அவர்களின் தலைமையில் இலங்கை - ரஷ்ய இருதரப்பு உறவுகள் ஒரு புதிய மற்றும் ஆக்கபூர்வமான கட்டத்திற்குள் நுழைந்துள்ளன.

எமது இரு நாடுகளும் 1840 களில் இருந்தே ஒரு நிலையான மற்றும் நீண்டகால நட்பை அனுபவித்து வருகின்றன. இலங்கையின் இலக்கிய மற்றும் அரசியல் மரபுகள் ரஷ்ய இலக்கியம் மற்றும் அரசியல் இயக்கங்களால் வளப்படுத்தப்பட்டுள்ளன. எமது இரு நாடுகளும் மிகவும் உயர்வான வரலாறுகள் மற்றும் கலாச்சார மரபுகளின் வாரிசுகளாகும். எமது சமூகங்களும் பன்முகக் கலாச்சாரங்கள் மிகுந்தவை.

1972 ஆம் ஆண்டில் கொழும்பில் உள்ள சோவியத் தூதரகத்தில் தனது இராஜதந்திர வாழ்க்கையை ஆரம்பித்தது முதல், எமது நாட்டோடு நெருங்கிய தொடர்புகளைப் பேணி வரும் இலங்கையின் புகழ்பெற்ற மற்றும் நேர்மையான நண்பரை வரவேற்பதில் தனித்துவமான மகிழ்ச்சி மற்றும் கௌரவமடைகின்றேன்.

திரு. லாவ்ரோவ் இலங்கையில் தனது இராஜதந்திர வாழ்க்கையை ஆரம்பித்தமை மாத்திரமன்றி, சிங்கள மொழி சார்ந்த அறிவையும் அந்தப் பணிகளின் போது பெற்றுக் கொண்டடிருந்தார் என்பதில் நாங்கள் இரட்டிப்பாக பெருமிதம் கொள்கின்றோம்.

2009 இலிருந்து பத்து ஆண்டுகளுக்குப் பின்னரான வெளிவிவகார அமைச்சர் லாவ்ரோவ் அவர்களின் இலங்கைக்கான இந்த உத்தியோகபூர்வ விஜயம், எமது இருதரப்பு ஈடுபாடுகளை மேலும் புதுப்பிக்க உதவியுள்ளது.

உங்கள் அனைவருக்கும் தெரிந்தபடி, 2019 நவம்பர் மாதத்தில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் மற்றும் இலங்கையில் புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து ரஷ்யக் கூட்டமைப்பினால் மேற்கொள்ளப்படும் முதலாவது உத்தியோகபூர்வ மட்டத்திலான விஜயம் இதுவாகும்.

இலங்கையின் நிலையான அபிவிருத்திப் பங்காளியாக முன்னாள் சோவியத் யூனியன் இருந்ததுடன், எமது நாட்டில் உற்பத்தித் துறைக்கு (உதாரணம்: உருக்கு, டயர் மற்றும் மா அரைத்தல்) முன்னோடியாக இருக்கும் வகையில் மதிப்புமிக்க தொழில்நுட்ப உதவிகளை வழங்கியது. ஆரம்பகால பொது வீட்டுவசதி (நாராஹேன்பிட) மற்றும் நீர்ப்பாசனத் திட்டங்கள் (மகாவலி மற்றும் உடவலவவின் பகுதிகள்) முன்னாள் சோவியத் ஒன்றியத்தால் நிதியளிக்கப்பட்டன.

கடந்த மூன்று தசாப்தங்களில், எமது நாடுகளில் நிலவிய இரக்கமற்ற பயங்கரவாதத்திற்கு எதிராக நாங்கள் போராடியுள்ளோம். பல்தரப்பு அரங்குகளில் நாம் பல சவால்களை எதிர்கொள்வதுடன், அது தொடர்பில் தொடர்ந்தும் ஒருவருக்கொருவர் ஆதரவளித்தும் வருகின்றோம். இலங்கையின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான தெளிவான ஆதரவிற்காக ரஷ்யக் கூட்டமைப்பின் அரசாங்கத்திற்கு இலங்கையின் ஆழ்ந்த பாராட்டுக்களை தெரிவிப்பதற்காக இந்த சந்தர்ப்பத்தை நான் பயன்படுத்துகின்றேன். எனவே, புரிந்துணர்வு, ஒற்றுமை மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றின் வலுவான உணர்வு இலங்கை - ரஷ்ய இருதரப்பு ஈடுபாட்டை உறுதிப்படுத்துகின்றது.

முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் அரசியல் இயக்கங்கள் மற்றும் சமூக நீதிக்கான கருத்துகளால் எனது அரசியல் சித்தாந்தம் வளர்க்கப்பட்டிருப்பதால், ரஷ்யக் கூட்டமைப்பு மற்றும் முன்னாள் சோவியத் யூனியனுடன் எனக்கு ஒரு சிறப்பான தொடர்பு உள்ளது.

எமது இருதரப்பு ஒத்துழைப்பை முடிவுகள் சார்ந்த மற்றும் பரஸ்பரம் நன்மை பயக்கும் கூட்டாண்மையின் அடிப்படையில் மேலும் பலப்படுத்துவதற்கும் மாற்றுவதற்குமான எமது உறுதிப்பாட்டை புதுப்பித்துள்ள வகையில், ஒரு சிறந்த சந்திப்பை நாங்கள் இன்று மேற்கொண்டுள்ளோம். அரசியல் உரையாடலைத் தொடர்தல் மற்றும் ரஷ்யா - இலங்கை வர்த்தக, பொருளாதார, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பான உள்ளக அரசாங்க ஆணைக்குழுவிற்குள் இருதரப்பு பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் எமது கலந்துரையாடல்கள் கவனம் செலுத்தியுள்ளது.

ஒத்துழைப்புக்கான ஒப்புக்கொள்ளப்பட்ட பகுதிகளில் விவசாயம் மற்றும் உணவுப் பொருளாதாரம், மீன்வளம், நீர் முகாமைத்துவம், தொழில்நுட்பம் மற்றும் தொழிற்கல்வி உள்ளிட்ட கல்வி, வர்த்தகம் மற்றும் முதலீடு, சுற்றுலா, காவல் மற்றும் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் எண்ணெய் ஆய்வு ஆகியவை உள்ளடங்கும்.

2017 ஆம் ஆண்டில் ரஷ்யாவிற்கான விஜயத்தின் போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் நிர்ணயிக்கப்பட்ட இருதரப்புப் பொருளாதார ஈடுபாட்டை மேலும் விரிவுபடுத்துவதற்கும், 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை அடையும் விதமாக இருதரப்பு வர்த்தகத்தை இலக்காகக் கொள்வதற்கும் இலங்கையும் ரஷ்யாவும் ஆர்வமாக உள்ளன. 2018 ஆம் ஆண்டில் எமது மொத்த இருதரப்பு வர்த்தக வருமானம் 388.98 அமெரிக்க டொலர்களாக இருந்தது. ரஷ்யா இலங்கையின் 15வது பெரிய ஏற்றுமதி இலக்கும், 24வது பெரிய இறக்குமதி மூல நாடுமாகும்.

தொழில்நுட்பம் சார்ந்த பொருளாதார முன்னேற்றத்தை மையமாகக் கொண்டு வளமான மற்றும் சமமான இலங்கைக்கான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் நோக்கு குறித்து வெளிவிவகார அமைச்சர் லாவ்ரோ அவர்களுக்கு விளக்கினேன். ஏற்றுமதி மற்றும் உற்பத்தியில் பெறுமதி உட்சேர்ப்பை அதிகரிப்பதற்காக புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலமும், திறமையான உழைப்பை ஊக்குவிப்பதன் மூலமும், விவசாயத்தை நவீனமயமாக்குவதன் மூலமும், தனியார் துறையின் சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறை அபிவிருத்தியை ஊக்குவிப்பதன் மூலமும், தனியார் துறை கூட்டுத் தொழில்களையும் அரச - தனியார் கூட்டாண்மைகளையும் அழைப்பதன் மூலமும் இலங்கையின் மகத்தான வளர்ச்சித் திறன் மேம்படுத்தப்பட்டது. ரப்பர் தயாரிப்புக்கள், தேங்காய் சார்ந்த பொருட்கள், மூலிகை பானங்கள், சுவையூட்டிப் பொருட்கள், புதிய அல்லது குளிர்ந்த மீன், ரத்தினம், நகைகள் மற்றும் மட்பாண்டங்கள் ஆகியவற்றிற்காக இலங்கை மற்றும் ரஷ்யாவில் உள்ள ஆர்வமுள்ள வணிக நிறுவனங்களுக்கு இடையில் இத்தகைய முயற்சிகள் ஊக்குவிக்கப்படும்.

இலங்கையில் அதிகரித்து வரும் ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் வருகையை நாங்கள் வரவேற்கின்றோம். 2018ஆம் ஆண்டில் 64,497 எண்ணிக்கையிலான வருகையுடன் ஒப்பிடும்போது 2019 இல் 86,549 ரஷ்ய வருகைகள் இடம்பெற்றுள்ளன. வாரத்திற்கு மூன்று விமானங்களை ஆரம்பித்துள்ள ஏரோஃப்ளாட் மூலமான நேரடி விமான இணைப்பானது, இருவழி சுற்றுலாவை கணிசமாக உருவாக்கி வருகின்றது. விருந்தோம்பல் துறையிலான அதிகமான ரஷ்ய முதலீடுகளுக்கான சாத்தியங்கள் குறித்தும் நாங்கள் கலந்துரையாடினோம்.

மருத்துவம், பொறியியல் மற்றும் ஏனைய தொழில்நுட்பத் துறைகளில் இலங்கை மாணவர்களின் தலைமுறையினருக்கு கல்வி கற்பிப்பதற்காக கடந்த ஆறு தசாப்தங்களாக வழங்கப்பட்ட ரஷ்ய அரசாங்கத்தின் தாராளமான உதவிகளுக்கு இலங்கையின் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இது சம்பந்தமாக, இலங்கை இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்காக இலங்கையில் பல்கலைக்கழக அளவிலான தொழில்நுட்பக் கல்வியை விரிவுபடுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் ஆர்வமாக இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் லாவ்ரோர் அவர்களுக்குத் தெரிவித்தேன்.

இலங்கையின் தொழில் மற்றும் தொழில்நுட்ப பயிற்சித் திட்டங்களின் தரத்தை மேம்படுத்துவதற்கு ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்களும் ஆர்வமாக உள்ளார். எனவே, இலங்கை மாணவர்களுக்கு மேம்பட்ட விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப கல்விக்கான ரஷ்ய பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்நுட்பப் பாடசாலைகளில் புதிய கல்வி வாய்ப்புக்களை ஆராய்வதற்கு ஒப்புக்கொண்டோம்.

இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பின் கீழ் திட்டங்கள் மற்றும் செயற்பாடுகளை நாம் மதிப்பாய்வு செய்தோம். மொஸ்கோவில் 2018 செப்டம்பர் மாதத்தில் கைச்சாத்திடப்பட்ட இருதரப்பு இராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் கீழ் எமது இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பானது தீவிரமாகவும் வலுவாகவும் உள்ளது.

தேசிய, பிராந்திய மற்றும் சர்வதேசப் பாதுகாப்பிற்கு பயங்கரவாதம், வன்முறைத் தீவிரவாதம், சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஏனைய நாடுகடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களினால் ஏற்படுத்தப்பட்டுள்ள அச்சுறுத்தல்களை இரு தரப்பினரும் அங்கீகரித்ததுடன், பகிரப்பட்ட தீர்வுகளைத் தொடர்வதற்கும், சிறந்த நடைமுறைகளைப் பரிமாறுவதற்கும் எமது ஒத்துழைப்பைத் தொடர்வதற்கு ஒப்புக்கொண்டன. இலங்கையும் ரஷ்யாவும் அந்தந்த நாடுகளில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இடையிலான பலமான தொடர்புகள் மூலம் பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தும்.

உலகளாவிய வர்த்தகம் மற்றும் வணிகத்திற்கு இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் அதிகரித்துவரும் முக்கியத்துவத்தைப் பற்றி நாங்கள் கலந்துரையாடியதுடன், பிராந்தியத்தின் எதிர்கால வளர்ச்சி மற்றும் செழிப்புக்கான ஸ்திரத்தன்மையையும், பாதுகாப்பையும் பராமரிப்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினோம்.

இந்த சூழலில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு போன்ற பிராந்திய அமைப்புக்களில் நாம் தீவிரமாக ஈடுபடுவதன் முக்கியத்துவம் குறித்து அவதானம் செலுத்தியதுடன், மாற்றமடையும் மற்றும் சிக்கலான பிராந்திய மற்றும் உலகளாவிய சூழலின் சவால்களை எதிர்கொள்வதற்கு, ஒத்துழைப்பும் மேம்பட்ட பிராந்திய ஒருங்கிணைப்பும் அவசியம் என்பதை ஒப்புக்கொண்டோம்.

ஜெனீவாவில் உள்ள மனித உரிமைகள் பேரவை உட்பட ஐக்கிய நாடுகள் சபையில் பகிரப்பட்ட நலன்களைப் பின்தொடர்வதற்காக எமது இரு நாடுகளும் ஒத்துழைப்பையும் உரையாடலையும் தொடரும்.

ரஷ்ய மக்களுக்கு எமது நல்லெண்ணத்தையும் அன்பான வாழ்த்துக்களையும் தெரிவிப்பதற்காக இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துகின்றேன்.

கௌரவம் மிகுந்தவரே, எமது பகிரப்பட்ட நலன்களைத் தொடர்வதற்கும், ஊக்குவிப்பதற்குமாக எமது ஒத்துழைப்பைத் தொடர்வதற்கு எதிர்பார்க்கின்றேன்.

நன்றி.

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close