(27- 29 ஏப்ரல் 2021 இல் கொழும்பில் நடைபெற்ற 'காலநிலை மற்றும் பசுமை மீட்புக்கான நைதரசன்' மீதான COP26க்கு முன்னரான மெய்நிகர் நிகழ்வுக்கானது)
மேன்மை தங்கியவர்ளே,
மரியாதைக்குரிய பங்கேற்பாளர்களே,
கனவான்களே மற்றும் கனவாட்டிகளே.
இந்த ஆயத்த உயர் மட்டப் பிராந்திய இலத்திரணியல் கூட்டத்தில் இன்று உங்களுக் மத்தியில் உரையாற்றுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கின்றது. இந்த ஆண்டு இறுதியில் ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான கட்டமைப்பின் மாநாட்டின் 26 வது மாநாட்டிற்கு முன்னதாக நைதரசன் நிர்வாகத்தின் முக்கியமான பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான ஒரு சாதகமான நடவடிக்கையை இந்த சந்திப்பு பிரதிபலிக்கின்றது.
நிலையான சுற்றுச்சூழல் கொள்கைகளுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு மட்டுமல்லாமல் சமூக மற்றும் பொருளாதார நடைமுறைகளை மேம்படுத்துவதும் தேவைப்படுகின்றது என்பதுடன், இதனால் நாடுகள் தமது மக்களையும் அவர்களின் இயற்கைச் சூழல்களையும் நீண்ட காலத்திற்குப் பராமரிக்க முடியும்.
அதன் பங்கிற்கு, எமது பிரஜைகளின் சமூகப் பொருளாதாரத் தேவைகளுடன் எமது பல்லுயிர் வகைமை, வனப்பகுதி, நீர்வழிகள் மற்றும் கடல் வளங்கள் ஆகியவற்றின் நீடித்த தன்மையை ஊக்குவிக்கும் சீரான கொள்கைகளை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்டது. எமது வருங்கால சந்ததியினரிடையே சுற்றுச்சூழல் உணர்திறன் மற்றும் பொறுப்புணர்வை ஏற்படுத்துவது விமர்சன ரீதியாக முக்கியமானதாவதுடன், இது எமது தற்போதைய கல்விச் சீர்திருத்தங்களிலும் சேர்க்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின் பல்லுயிர் வகைமை உச்சி மாநாட்டில், நைதரசனை சிறப்பாக நிர்வகிக்குமாறு உலகத் தலைவர்களிடம் வேண்டுகோள் விடுத்தேன். காலநிலை விஞ்ஞானிகள் பல தசாப்தங்களாக வளிமண்டலத்தில் அதிகரித்துள்ள கார்பன் டை ஒக்சைட் உமிழ்வுகளின் தாக்கத்தை ஆராய்ந்து வருகின்றனர். நைதரசன் கழிவுப் பிரச்சினையை இதேபோன்ற அவசர வழியில் எதிர்கொள்வதும், அதற்கேற்ப காலநிலை மாற்றம் குறித்த தற்போதைய கலந்துரையாடல்களை விரிவுபடுத்துவதும் முக்கியம் என நான் நம்புகின்றேன்.
எமது மக்கள் தொகையில் கணிசமான பகுதியினரின் வாழ்வாதாரத்திற்கான முதன்மை வழிமுறையை உள்ளடக்கிய விவசாயத்துடன், நைதரசன் முகாமைத்துவப் பிரச்சினை இலங்கைக்கு குறிப்பாக முக்கியமானது. உள்நாட்டில் பயன்படுத்தப்படும் நைதரசன் உரங்களில் சுமார் 80% வீணாகி, வளிமண்டலம், நிலம் மற்றும் நீர் ஆகியவற்றில் முடிவடைகின்றது என மதிப்பிடப்பட்டுள்ளது. போக்குவரத்து மற்றும் ஏனைய தொழில்களும் வாயு எதிர்வினை நைதரசனை வெளியிடுவதுடன், அது வெப்பத்தை ஈர்க்கும் அதே வேளை, விரைவான புவி வெப்பமடைதலுக்கு பங்களிக்கின்றது.
இதுபோன்ற பிரச்சினைகள் எமது பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கு பொதுவானவை என்பதையும், இந்த சிக்கல்களின் பாதகமான விளைவுகள் நடுத்தர மற்றும் நீண்ட காலத்திற்கு எமது அரசாங்கங்களுக்கு சவாலாக இருக்கும் என்பதையும் நான் அறிவேன். விரிவான ஆய்வு, அதிக விழிப்புணர்வை உருவாக்குதல் மற்றும் பொருளாதார செயற்பாடு மற்றும் சுற்றுச்சூழலைத் தக்கவைத்துக்கொள்வதற்கான இரட்டைக் கட்டாயங்களுக்கு சிறந்த தீர்வுகளை உருவாக்குவதன் மூலம் மேம்பட்ட நைதரசன் முகாமைத்துவம் முக்கியத்துவம் வாய்ந்தது. இத்தகைய நடவடிக்கைகள் தேசிய அளவில் மட்டுமல்ல, பிராந்திய ரீதியாகவும், உலகளாவிய ரீதியிலும் சரியான நேரத்தில் கொள்கை முடிவுகளால் வழிநடத்தப்படல் வேண்டும்.
இந்த மன்றத்தின் கலந்துரையாடல் தெற்காசியப் பிராந்திய அரசாங்கங்களை ஒன்றிணைத்து இந்த விடயத்தில் பொதுவான புரிதலை நோக்கி நகர்வதற்கு உதவும் என நான் நம்புகின்றேன். இந்த ஆண்டின் பிற்பகுதியில் காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பின் மாநாட்டின் தரப்பினர்களின் 26வது மாநாட்டின் போது மேற்கொண்ட தீர்மானங்களில் இது சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும். இறுதியாக, ஒரு வெற்றிகரமான மற்றும் உற்பத்திபூர்வமான மன்றமாக இது அமைவதற்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
நன்றி.