மனித உரிமைகள் பேரவையின் 45வது அமர்வு நிகழ்ச்சி நிரல் 3: உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் மீள நிகழாமைக்கான உத்தரவாதங்களை மேம்படுத்துதல் குறித்த சிறப்பு அறிக்கையாளருடனான ஊடாடும் உரையாடல்

மனித உரிமைகள் பேரவையின் 45வது அமர்வு நிகழ்ச்சி நிரல் 3: உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் மீள நிகழாமைக்கான உத்தரவாதங்களை மேம்படுத்துதல் குறித்த சிறப்பு அறிக்கையாளருடனான ஊடாடும் உரையாடல்

 

மனித உரிமைகள் பேரவையின் 45வது அமர்வு

நிகழ்ச்சி நிரல் 3:

உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் மீள நிகழாமைக்கான உத்தரவாதங்களை மேம்படுத்துதல் குறித்த சிறப்பு அறிக்கையாளருடனான ஊடாடும் உரையாடல்

 

17 செப்டம்பர் 2020

தலைவி அவர்களே,

இந்த சபை அறிந்திருப்பதைப் போல, 'உற்பத்திமயமான குடிமக்கள், திருப்தியான குடும்பம், ஒழுக்கமானதும், நியாயமானதுமான சமூகம் மற்றும் வளமானதொரு தேசம்' ஆகிய நான்கு விளைவுகளை அடைவதை நோக்கமாகக் கொண்டதொரு கொள்கைக் கட்டமைப்பைத் தொடர்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு இலங்கை மக்கள் கடந்த நவம்பரில் மகத்தானதொரு ஆணையை வழங்கினர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் நடைபெற்ற பொதுத் தேர்தலில் முன்னொருபோதுமில்லாத வகையில் 59.09% வாக்குகளினால் வரலாற்றில் முதல் முறையாக இலங்கை மக்கள் இரண்டாவது ஆணையை வழங்கினர். எந்தவொரு சக்திக்கும் அடிபணியாமல், மக்களையும், நாட்டின் இறையாண்மையையும் பாதுகாக்கும் அதே வேளையில், செழிப்பை நோக்கி முன்னோக்கிச் செல்வதற்காக இலங்கை மக்கள் அளித்துள்ள ஆதரவின் தெளிவான சமிக்ஞை இதுவாகும்.

கோவிட்-19 தொற்றுநோயின் காரணமாக உலகின் மிகவும் வளர்முக நாடுகளும் கூட கணிசமான சவால்களுக்கு முகங்கொடுத்த நேரத்தில், அதன் பரவலைக் கட்டுப்படுத்தியதன் மூலம் அந்த சவாலை வெற்றிகரமாக இலங்கை எதிர்கொண்டது. ஒரு வலுவான உள்நாட்டு சுகாதார அமைப்பின் உதவியுடனான தேசிய அளவிலான தடுப்பு நடவடிக்கைகளின் ஒருங்கிணைந்த பொறிமுறைக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

தலைவி அவர்களே,

கோவிட்-19 முன்வைத்த சவால்களைக் குறைப்பதற்காக, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள், ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், நாள் வருமானம் ஈட்டுபவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு நிதியுதவிகளை வழங்குதல், இலங்கையர்களை நாட்டிற்கு மீள அழைத்து வருவதனை ஒருங்கிணைந்த முறையில் நிர்வகித்தல், தற்போதுள்ள தொழில்களை ஆதரிக்கும் அதே வேளையில் புதிய பொருளாதாரப் போக்குகளை உருவாக்குவதற்கான வணிக வழிகளை ஆராய்தல் மற்றும் விவசாயிகள், நுகர்வோர் மற்றும் விநியோகஸ்த்தர்களை இணைத்தல், அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குதல் மற்றும் தொலைநோக்குக் கல்வி உள்ளிட்ட டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் போன்றன உள்ளடங்கலான பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டது.

மிதமான வழிமுறைகளினாலாயினும் கூட, முறையாக நிறுவப்பட்ட பொது சுகாதார அமைப்புக்களையுடைய அதிகம் வளமுள்ள நாடுகளை விடவும் திறம்பட கோவிட்-19 ஐ கட்டுப்படுத்த இலங்கை மேற்கொண்ட முயற்சிகளை உலக சுகாதார தாபனம் பாராட்டியுள்ளது. தொற்று நோய் அபாய நிலைமைக்கு மத்தியில், சுகாதார வழிமுறைகளுக்கு அமைவாக கடந்த மாத ஆரம்பத்தில் 71% வாக்களிப்புடன் பாராளுமன்றத் தேர்தலை வெற்றிகரமாக நடாத்திய தெற்காசியாவின் முதலாவது நாடு நாமாவதுடன், யுனிசெஃப் பாராட்டியபடி பாடசாலைகளைத் திறந்து குழந்தைகளை பாதுகாப்பான வழியில் மீள வெளிக்கொணர்ந்த தெற்காசியாவின் முதல் நாடுகளில் இலங்கையுவும் ஒன்றாகும். மேலும், உலக பிரயாண மற்றும் சுற்றுலா சபை சமீபத்தில் இலங்கையை சுற்றுலாப் பயணிகளுக்கான பாதுகாப்பான புகலிடமாக அங்கீகரித்துள்ளது.

தலைவி அவர்களே,

கடந்த ஆண்டு அரசாங்கம் பதவியேற்றபோது, 2019ல் நிகழ்ந்த ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல்களால் நாட்டின் பாதுகாப்பு குறித்த மக்களின் நம்பிக்கை கடுமையாக நலிவுற்றிருந்தது. 'எந்தவொரு குடிமகனினதும், அவரது குடும்பங்களினதும் பாதுகாப்பிற்காக எந்த அச்சமும் இல்லாமல் சுதந்திரமாக வாழக்கூடிய சூழலை' உருவாக்கும் நோக்கத்துடனான தேசிய பாதுகாப்பே இந்த அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும் என புதிய நாடாளுமன்றத்தின் ஆரம்ப அமர்வின் போது தனது கொள்கை அறிக்கையில் ஆகஸ்ட் 20 ஆந் திகதி ஜனாதிபதி வலியுறுத்தினார்.

அரசாங்கத்தின் கொள்கைக் கட்டமைப்பு எதிர்காலத்திற்கான அதன் நோக்கின் மூன்று முக்கிய தூண்களான தேசிய பாதுகாப்பு, நட்புமயமான சீரமைக்கப்படாத வெளியுறவுக் கொள்கை மற்றும் மக்களை மையமாகக் கொண்ட பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.

மேற்கண்ட நோக்குக்கு அமைய, கிராமப்புற பொருளாதாரங்களை மேம்படுத்துவதற்கும், சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகளை அடிமட்டத்திலிருந்து நிவர்த்தி செய்வதற்கும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் போதைப்பொருள் அச்சுறுத்தல் போன்ற சமூகத் தீங்குகளுக்கு எதிராக மக்களைப் பாதுகாப்பது உட்பட பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன:

o    புதுமையான முன்முயற்சிகளின் அடிப்படையில் ஒரு தனித்துவமான பொருளாதாரக் கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம் உற்பத்திப் பொருளாதாரத்தை உருவாக்குவதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்களை வழிநடத்துதல், உள்நாட்டுத் தொழிலதிபர்கள் மற்றும் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் ஒரு மக்கள் மையப்படுத்தப்பட்ட பொருளாதாரத்தை நிறுவுவதற்கான கூட்டு நடவடிக்கைகளை செயற்படுத்துதல் மற்றும் அனைத்து நிறுவனங்களுடனும் தொடர்புகொண்டு தயாரிப்புக்களை விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதுடன், சுகாதார மற்றும் கல்விப் பணிக்குழுக்கள் பொதுமக்களின் வாழ்க்கையின் இயல்புநிலையை நிலைநிறுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்குப் பொறுப்பான ஜனாதிபதி செயலணி நிறுவப்பட்டது.

o    தேசிய பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பதற்காகவும், சட்டத்தின் ஆட்சியை மதிக்கும் ஒரு நல்ல, ஒழுக்கமான மற்றும் சட்டபூர்வமான சமுதாயத்தை உருவாக்குவதற்காகவும், அரசாங்கத்தின் மிக முக்கியமான பொறுப்புக்கு ஏற்ப அபிவிருத்தியை நோக்காகக் கொண்ட நாட்டின் பொருளாதார உத்திகளை நிறுவுவதில் நாட்டின் பாதுகாப்பு ஒரு முக்கிய காரணியாக இருப்பதை அங்கீகரிக்கும் சட்டத்தின் சமமான பாதுகாப்பை வலியுறுத்துதற்காகவும் பாதுகாப்பானதொரு நாடு, ஒழுக்கமான, நல்லொழுக்கம் மற்றும் சட்டபூர்வமான சமுதாயத்தை உருவாக்குவதற்கான ஜனாதிபதி செயலணி நிறுவப்பட்டது.

தலைவி அவர்களே,

-          வறுமை மற்றும் சமத்துவமின்மையை நிவர்த்தி செய்வதற்கான மிக உயர்ந்த முன்னுரிமையின்படி, அனைத்து சமூகங்களிலிருந்தும் நாட்டில் மிகவும் வறிய குடும்பங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 100,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளது. அதேசமயம், 60,000 பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புக்களை வழங்கவும், சேவைகளை அவர்கள் திறம்பட வழங்குவதற்காக அவர்களுக்கு பயிற்சிகளை அளிக்கவும் திட்டங்கள் செயற்படுத்தப்படுகின்றன.

-          பொருளாதார மறுமலர்ச்சிக்கு மக்களை மையமாகக் கொண்ட பொருளாதாரம் அவசியமாகும் என்ற நோக்கத்துடன், அமைச்சுக்களை உருவாக்கும் போது, நாட்டின் பெரும்பாலான மக்களை பாதிக்கும் விவசாயம், பெருந்தோட்டம், மீன்வளம், பாரம்பரிய தொழில்கள் மற்றும் சுயதொழில் வேலை வாய்ப்புக்களை மேம்படுத்துதல் போன்ற துறைகளை உள்ளடக்குவதற்கு சிறப்பான கவனம் செலுத்தப்பட்டது.

-          மனிதவள மேம்பாடு ஒரு முன்னுரிமையாக அடையாளம் காணப்பட்டுள்ளதால், கல்வி என்பது ஒரு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டு, நான்கு இராஜாங்க அமைச்சர்கள் வெவ்வேறு பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்டனர். முன்பள்ளி, கல்விச் சீர்திருத்தங்கள், திறன் அபிவிருத்தி மற்றும் தம்ம பாடசாலை மற்றும் பிக்கு கல்வி ஆகியவற்றின் முக்கியத்துவத்தின் காரணமாக அவற்றுக்கான தனி இராஜாங்க அமைச்சுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

-          பாராளுமன்றத்தின் மூலம் சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் ஒரு முழுமையான ஜனநாயக வழிமுறையைப் பின்பற்றி விவாதிக்கப்படவுள்ளதுடன், அங்கு அனைத்து பங்குதாரர்களும் தமது கருத்துக்களை முன்வைக்க வாய்ப்புக்கள் வழங்கப்படும்.

தலைவி அவர்களே,

முன்னாள் சிறப்பு அறிக்கையாளரான திரு. பப்லோ டி க்ரீப் அவர்களின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை இலங்கை கவனத்தில் கொள்வதுடன், மார்ச் மாதம் இடம்பெற்ற இந்த சபையின் 43 வது அமர்வில் முன்னிலைப்படுத்தப்பட்ட தீர்மானம் 30/1 இன் இணை அணுசரணையிலிருந்து விலகுவதாக அறிவித்த தனது நிலைப்பாட்டை இலங்கை மீண்டும் வலியுறுத்த விரும்பும் அதே வேளை, அரசாங்கத்தின் கொள்கைக் கட்டமைப்பிற்கு ஏற்ப உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட மற்றும் செயற்படுத்தப்பட்ட செயன்முறையின் மூலமாக, இலங்கை அரசியலமைப்பின் கட்டமைப்பிற்குள் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை அடைந்து கொள்வதற்கு உறுதியுடன் உள்ளது.

இன்று, இந்த சபை நடைமுறை யதார்த்தங்களை அங்கீகரித்து, இந்த சபையின் 43 வது அமர்வின் போது விளக்கப்பட்ட வகையில், நாட்டின் அரசியலமைப்பின் அளவுருக்களுக்கு உட்பட்ட வகையில், விதிகளுடனான அணுகுமுறையுடன் முன்னேறத் தேவையான வாய்ப்பை இலங்கை அரசாங்கத்திற்கு எளிதாக்கும் என்ற உண்மையான நம்பிக்கையுடன் இந்த ஆகஸ்ட் அமர்வின் ஆக்கபூர்வமான கலந்துரையாடலில் ஈடுபட இலங்கை விரும்புகின்றது. புதிய நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் ஆகஸ்ட் 5ஆந் திகதி பதவியேற்ற புதிய அரசாங்கம் இந்த ஆண்டு பெப்ரவரியில் இந்த சபைக்கு முன் வழங்கப்பட்ட உத்தரவாதங்கள் தொடர்பில் உறுதியாக உள்ளது என்பதை இலங்கை மேலும் குறிப்பிட விரும்புகின்றது.

நான்கரை ஆண்டுகளுக்கும் மேலாக உண்மையான நல்லிணக்கத்தை வழங்கத் தவறிய வெளிப்புறமாக இயக்கப்படும் ஒரு கட்டமைப்பைத் தொடர விரும்புவதற்குப் பதிலாக, இலங்கையின் நலனுக்காக, மக்கள் வழங்கிய ஆணைகளின் ஆதரவுடன் வழங்கக்கூடிய நல்லிணக்க நடவடிக்கைகளை அரசாங்கம் கவனிக்கும்.

தலைவி அவர்களே,

இந்த சபையின் 43 ஆவது அமர்வின் போது கௌரவ வெளிநாட்டு அமைச்சர் குறிப்பிட்டுள்ளபடி, இலங்கை மற்றும் அதன் மக்களின் நலன்களுக்கு இணங்க, அனைத்தையும் உள்ளடக்கிய, உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட மற்றும் செயற்படுத்தப்பட்ட நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் செயன்முறையின் மூலமாக நிலையான அமைதியை அடைவதற்கான அரசாங்கத்தின் அணுகுமுறையை சபை பாராட்டும் என நாங்கள் நம்புகின்றோம்.

தனிநபர் மற்றும் கூட்டு உரிமைகளை முன்னேற்றுவது, நீதி மற்றும் நல்லிணக்கத்தை உறுதிசெய்வது மற்றும் சமூகத்தின் பாதிக்கப்படக்கூடிய பிரிவுகளின் கவலைகளை உரிய ஜனநாயகம் மூலம் நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்ட 2030 நிலையான அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலின் கீழ் நிலுவையில் உள்ள விடயங்களை, தேவையான இடங்களில் நிறுவனச் சீர்திருத்தம் உள்ளிட்ட சட்ட செயன்முறைகளின் ஊடாக 2030 நிலையான அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலின் கீழ் நிவர்த்தி செய்வதற்காக அரசாங்கம் செயற்படும்.

தலைவி அவர்களே,

சிறப்பு அறிக்கையாளரின் விஜயத்தின் பின்னர் உண்மை, நீதி, இழப்பீடுகள் மற்றும் மீள நிகழாமைக்கான உத்தரவாதங்கள் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை இந்த அறிக்கை போதுமான வகையில் மற்றும் சாதகமாக சித்தரிக்கத் தவறியுள்ளதுடன், தற்போது இலங்கையில் நிலவும் சூழ்நிலைகளின் பிரதிபலிப்பாக இது அமையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சட்டத்தை வெளிப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் அனைத்து சமூகங்களுக்கும் உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் மீள நிகழாமைக்கான உத்தரவாதங்களை நிவர்த்தி செய்வதற்கு இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ள முற்போக்கான நடவடிக்கைகள் ஆகியவற்றை இந்த அறிக்கை கவனிக்கத் தவறிவிட்டது.

ஒரு சிவில் சட்ட எல்லைக்கு மாறாக ஒரு பொதுவான சட்ட அதிகார வரம்பில் சட்டமா அதிபரின் வகிபாகத்தைக் குறிப்பிடுவதற்கு இந்த அறிக்கை தவறியுள்ளதுடன், சட்டத்தின் அடிப்படையில் அரசியலமைப்பின் அளவுருக்கள் மற்றும் சட்டரீதியான ஆணை ஆகியவற்றுக்குள் அதிகாரங்கள், கடமைகள் மற்றும் செயற்பாடுகளை மேற்கொள்ள சட்டமா அதிபர் அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில், சட்டத்தின் தலைவராகவும், அரசின் மிகவும் உயர்ந்த சட்ட அதிகாரியாகவும் நீதிமன்றம், அரசு மற்றும் முற்றிலும் பிரிக்கப்பட வேண்டிய, முற்றிலும் சுயாதீனமாக இருக்க வேண்டிய மற்றும் உண்மையை நிறுவுவதற்கான ஒரே பொருளுடன் பாரபட்சமின்றி செயற்பட வேண்டிய கடமை இலங்கையின் சட்டமா அதிபருக்கு உள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

அதன்படி சட்டமா அதிபரின் வகிபாகம் பற்றிய குறிப்பு தவறாகக் கருதப்பட்டு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளதுடன், சட்டமா அதிபர் அலுவலகத்திற்கு அளித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள குறிப்புக்கள் எந்தவொரு நியாயமும் அல்லது சட்ட அடிப்படையும் அற்றதாக உள்ளன.

தலைவி அவர்களே,

குறிப்பிடப்படும் 'அச்சுறுத்தும் விஜயங்கள்', 'கண்காணிப்பு வடிவங்கள்', 'துன்புறுத்தல் முறைப்பாடுகள்' குறித்து, சட்ட நடைமுறைப்படுத்தல் அதிகாரிகளுக்கு அல்லது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அல்லது தேசிய பொலிஸ் ஆணைக்குழு போன்ற சுயாதீன தேசிய நிறுவனங்களுக்கு முறையான முறைப்பாடுகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு நாங்கள் அழைப்பு விடுப்பதாக மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றோம். இதனால் கூறப்படும் சம்பவங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும். அரசாங்கம் ஏற்கனவே இந்த குற்றச்சாட்டுக்களை பகிரங்கமாக மறுத்துள்ளதுடன், கருத்துச் சுதந்திரம் மற்றும் சிவில் சமூக இடைவெளியைப் பாதுகாப்பதற்கும் ஊக்குவிப்பதற்கும் மற்றும் ஊடகவியலாளர்கள், மனித உரிமைப் பாதுகாவலர்கள் மற்றும் சிவில் சமூகத்திற்கு எதிரான தாக்குதல்கள் குறித்த முறைப்பாடுகளை விசாரணை செய்து வழக்குத் தொடரப்படுவதை உறுதிசெய்வதற்கும்  உறுதிபூண்டுள்ளது.

அதே சமயம், பின்னர் திடமான ஆதாரங்களினால் வெற்றிகரமாக நிரூபிக்கப்படாத வகையிலான இலங்கை அரசாங்கத்தின் மிரட்டல் மற்றும் துன்புறுத்தல் பற்றிய தவறான கதைகளை உருவாக்க முயற்சிக்கும் சில பிரிவுகளைப் பற்றி இந்த சபையின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகின்றோம்.

தேசிய பாதுகாப்பு நலனுக்காக வழக்கமான பாதுகாப்பு வலையமைப்புக்களை செயற்படுத்துவதனைத் தவிர, குறிப்பாக ஈஸ்டர் ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பின்னர், பாதுகாப்புப் படைகள் மற்றும் புலனாய்வு அமைப்புக்கள் நாட்டில் எந்தவொரு குறிப்பிட்ட குழுவினரையும் கண்காணிப்பதில் ஈடுபடவில்லை என்பதையும் நாங்கள் மீண்டும் வலியுறுத்துகின்றோம். உலகெங்கிலுமுள்ள அடிப்படைவாத மற்றும் தீவிரமான கூறுகளின் நுட்பங்களுக்கிடையில் தேசிய பாதுகாப்பு நலன்களை இணங்கச் செய்யும் எந்தவொரு நாடும் வருந்தத்தக்க விளைவுகளை எதிர்கொள்ளும் என நாங்கள் நம்புகின்றோம். எனவே, இந்த சூழலில் அத்தகைய யதார்த்தத்தை கவனத்தில் கொள்ளுமாறு இலங்கை அரசாங்கம் அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொள்கின்றது.

இறுதியாக, இலங்கை அரசாங்கம் ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகம், ஐ.நா. மனித உரிமைப் பொறிமுறைகள், உள்நாட்டு முன்னுரிமைகள் மற்றும் கொள்கைகளுக்கு ஏற்ப சர்வதேச சமூகத்துடன் நெருக்கமான ஒத்துழைப்புடன் செயற்படும்.

நன்றி.

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close