ஐ.நா. பொதுச் சபையின் 75வது கூட்டத்தொடரின் பக்கவாட்டு நிகழ்வாக, நேற்று மாலை (2020 அக்டோபர் 14) இடம்பெற்ற 20வது மெய்நிகர் பொதுநலவாய வெளிவிவகார அமைச்சர்கள் கூட்டத்திற்கான இலங்கைத் தூதுக்குழுவிற்கு தலைமை தாங்கிய வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன, கோவிட்-19 தொற்றுநோயின் விளைவாக தோன்றியுள்ள பல்வேறு பரிமாணமான மற்றும் கிடைவெட்டான சவால்களை எதிர்கொள்வதற்கான புதுமையான சிந்தனை மற்றும் கூட்டான, ஒருங்கிணைந்த மூலோபாயங்களுக்கு அழைப்பு விடுத்தார்.
கோவிட்-19 க்கு பிந்தைய உலகில் உள்ள நாடுகளின் போட்டிகரமான எல்லையை இலத்திரணியல் வணிகம் மற்றும் இலத்திரணியல் ஆட்சி ஆகியன வரையறுக்கும் என்பதை எடுத்துரைத்த அமைச்சர் குணவர்தன, பொதுநலவாய உறுப்பு நாடுகளுக்குள் பொருளாதாரங்கள் மற்றும் சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான உதவிகளுக்கு அழைப்பு விடுத்தார். டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான சர்வதேசத் தரங்களை ஏற்றுக்கொண்ட தெற்காசியாவின் முதலாவது நாடாக அமையும் அதே நேரத்தில், டிஜிட்டல் தளம் வழியாக முதன்முதலாக தேயிலை மற்றும் ரப்பர் ஏலங்களை நடாத்திய இலங்கையின் அனுபவத்தை மேற்கோள் காட்டினார். கோவிட்-19 தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் ஆய்வுகளுக்காக பொதுநலவாய நாடுகளில் தற்போதுள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் அறிவு ஆகியவற்றைத் திரட்டுவதற்கும் அவர் முன்மொழிந்தார். அது தொடர்பில், கோவிட்-19 நோய்த்தொற்றுகளுக்கான நோயெதிர்ப்புப் பிரதிபலிப்புக்களை புரிந்துகொள்வதற்காக, தனிநபர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற டெங்கு நோய்த்தொற்றுக்கான நோயெதிர்ப்புப் பிரதிபலிப்புக்களில் பெறப்பட்ட நிபுணத்துவம் மற்றும் அறிவைப் பகிர்ந்து கொள்வதில், இலங்கையின் ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் மற்றும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கிடையிலான கூட்டுறவை வெளிநாட்டு அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
நாடுகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையால் தோன்றியுள்ள எதிர்பாராத மற்றும் பாதகமான பொருளாதார மற்றும் சமூகத் தாக்கத்தைக் குறிப்பிட்ட அமைச்சர் குணவர்தன, கடன் நிவாரணம், கடன்களைத் திருப்பிச் செலுத்தும் தடைக்காலம் மற்றும் தற்போதைய சிரமங்களைத் தணிப்பதற்கான நிதி ஊக்கிகள் ஆகியவற்றிற்கான அவசரத் தேவையை அடிக்கோடிட்டுக் காட்டினார்.
பரிஸ் காலநிலை மாற்ற ஒப்பந்தத்தின் செயற்றிட்டத்தின் கீழான இலங்கையின் கடமைகளில் கவனம் செலுத்திய அமைச்சர் குணவர்தன, 2030 ஆம் ஆண்டில் 30% பச்சைவீட்டு வாயு (GHG) உமிழ்வைக் குறைக்கவும், நீர், சூரியன் மற்றும் காற்று சார்ந்த சக்தி முறைமைக்கு மாறுவதன் மூலம் குறைந்த காபன் பொருளாதார வளர்ச்சியுடன், நெகிழ்திறன் மிக்கதும், தூய்மையானதுமான எதிர்காலத்தை நோக்கி இலங்கை திட்டங்களை வகுத்துள்ளதாகத் தெரிவித்தார். இலங்கை உள்ளிட்ட சிறு அரசுகளுக்கான காலநிலை நிதிகளை மேம்படுத்துவதற்கான தடைகள், அபாயங்கள் மற்றும் சாத்தியமான வாய்ப்புக்களை அடையாளம் காண வேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக் காட்டினார்.
பொதுநலவாயத்தின் தலைவர் என்ற வகையில், வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய விவகாரங்களுக்கான இராஜாங்க செயலாளரும், ஐக்கிய இராச்சியத்தின் முதல் இராஜாங்க செயலாளருமான கௌரவ டொமினிக் ராப் எம்.பி. இந்தக் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் பக்க நிகழ்வாக பாரம்பரியமாக நடைபெறும் CFAAM, இந்த வருடம் கோவிட்-19 தொற்றுநோய்க்கு மத்தியில் மெய்நிகர் முறைமையில் நடைபெற்றது.
இந்த மெய்நிகர் CFAAM க்கான இலங்கைத் தூதுக்குழுவானது, வெளிநாட்டு செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே, ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கையின் உயர் ஸ்தானிகர் சரோஜா சிறிசேன மற்றும் வெளிநாட்டு அமைச்சின் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பொதுநலவாயப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் தம்மிகா சேமசிங்க ஆகியோரை உள்ளடக்கியிருந்தது.
வெளிநாட்டு அமைச்சு
கொழும்பு
15 அக்டோபர் 2020