இந்துசமுத்திர வலய நாடுகள் சங்கத்தின் (IORA) 2023 - 2025 இற்கான  தலைமைப் பொறுப்பை ஏற்கவுள்ள இலங்கை

இந்துசமுத்திர வலய நாடுகள் சங்கத்தின் (IORA) 2023 – 2025 இற்கான  தலைமைப் பொறுப்பை ஏற்கவுள்ள இலங்கை

2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 11 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள, இந்துசமுத்திர வலய நாடுகள் சங்கத்தின் (IORA), 23 ஆவது அமைச்சர்கள் சபைக் கூட்டத்தில் 2023 முதல் 2025 வரையிலான காலப்பகுதிக்கான தலைமைப் பொறுப்பை இலங்கை ஏற்கவுள்ளது. அமைச்சர்கள் குழு கூட்டத்திற்கு முன்னதாக சிரேஷ்ட அதிகாரிகள் குழுவின் 25வது கூட்டம் நடைபெறும். ஏற்கனவே 2003-2004 காலப்பகுதியில் அயோராவில் தலைமை வகித்த இலங்கை, இரண்டாவதாகவும் தலைமைப்பொறுப்பை ஏற்கவுள்ளது.

இந்துசமுத்திர வலய நாடுகள் சங்கம் (IORA), என்பது இந்தியப் பெருங்கடலின் 23 கரையோர மாநிலங்களை ஒன்றிணைக்கும் அரசுகளுக்கிடையேயான ஒரே பிராந்திய மன்றமாகும். இச்சங்கத்தில் 11 உரையாடல் பங்குதாரர்கள் உள்ளனர். இலங்கை இச்சங்கத்தின் ஸ்தாபக உறுப்பினராகும். இந்துசமுத்திர வலய நாடுகள் சங்கம் (IORA),  2022 இல் அதன் 25 வது ஆண்டு நிறைவை பூர்த்திசெய்தது.

இந்துசமுத்திர வலய நாடுகள் சங்கத்தின் (IORA), முடிவெடுக்கும் மிக உயர்ந்த அமைப்பாக அமைச்சர்கள் குழு விளங்குவதுடன், இலங்கையின் தலைமைத்துவத்தின் போது வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி அமைச்சர்கள் மன்ற தலைவராக செயற்படுவார். வெளியுறவுச் செயலாளர் அருணி விஜேவர்தன, அமைச்சர்கள் சபைக்கு முன்னதாக நடைபெறும் IORA சிரேஷ்ட அதிகாரிகள் கூட்டத்திற்கு தலைமை தாங்குவார்.

இலங்கை தனது  IORA இன் தலைமைத்துவத்திற்கான கருப்பொருளாக,"பிராந்திய கட்டமைப்பை வலுப்படுத்தலும், இந்து சமுத்திரத்தின் அடையாளத்திற்கு வலுவூட்டலும்" என்பதைத் தேர்ந்தெடுத்துள்ளது. 2023 அக்டோபரில் கொழும்பில் நடைபெறவுள்ள, இந்துசமுத்திர வலய நாடுகள் சங்கம், அமைச்சர்கள் சபை மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் கூட்டம் ஆகியவற்றுக்கு,  23 அங்கத்துவ நாடுகளின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர்கள் மற்றும் 11 உரையாடல் பங்குதாரர்கள் அல்லது அவர்களின் பிரதிநிதிகள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், கொமொரோஸ், பிரான்ஸ், இந்தியா, இந்தோனேசியா, ஈரான், கென்யா, மடகஸ்கார், மலேசியா, மாலைத்தீவுகள், மொரிஷியஸ், மொசாம்பிக், ஓமான், சீஷெல்ஸ், சிங்கப்பூர், சோமாலியா, தென்னாப்பிரிக்கா, இலங்கை, தன்சானியா, தாய்லாந்து, ஐக்கிய அரபு  இராச்சியம் மற்றும் யேமன் ஆகியவை இந்துசமுத்திர வலய நாடுகள் சங்கத்தின் உறுப்பு நாடுகளாக விளங்குவதுடன், சீனா, எகிப்து, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், கொரிய குடியரசு, ரஷ்ய கூட்டமைப்பு, சவுதி அரேபியா, துருக்கி, ஐக்கிய இராச்சியம்  மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் உரையாடல் பங்குதாரர்களாக விளங்குகின்றன.

இந்துசமுத்திர வலய நாடுகள் சங்கத்தின் (IORA) முதன்மை நோக்கங்கள் பிராந்திய பொருளாதார ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல், வர்த்தகம் மற்றும் முதலீட்டை மேம்படுத்துதல், நிலையான வளர்ச்சியை எளிதாக்குதல், கடல்சார் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்துதல் என்பனவாகும். மேலும்  அயோராவானது, வர்த்தகம் மற்றும் முதலீட்டு வசதி மீன்வள மேலாண்மை, பேரிடர் அபாயத்தைக் குறைத்தல், கல்வி மற்றும் அறிவியல் ரீதியான ஒத்துழைப்பு, சுற்றுலா மற்றும் கலாச்சார பரிமாற்றங்கள் மற்றும் பெண்களின் பொருளாதார மேம்பாடு உள்ளிட்ட பல முன்னுரிமைப் பகுதிகளில் கவனம் செலுத்துகிறது.

IORA இற்கான இலங்கையின் தலைமைச் செயலகமானது, வெளிவிவகார அமைச்சின் கீழ், பங்களாதேஷிற்கான இலங்கையின் முன்னாள் உயர்ஸ்தானிகரும், நிறைவேற்றுப் பணிப்பாளர் நாயகமுமான பேராசிரியர் சுதர்சன் செனவிரத்னவின் தலைமையில் இயங்கும். செயலகத்தில் வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளுடன், தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவர் (NARA) மற்றும் இலங்கை கடற்படை  ஆகியவற்றின் அதிகாரிகளும்  இணைத்துக்கொள்ளப்படுவார்கள்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

06 செப்டம்பர் 2023

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close