பாங்கொக்கில் நடைபெறும் 6வது பிம்ஸ்டெக் உச்சி மாநாடு மற்றும் அது தொடர்பிலான கூட்டங்களில் இலங்கை பங்கேற்கிறது

பாங்கொக்கில் நடைபெறும் 6வது பிம்ஸ்டெக் உச்சி மாநாடு மற்றும் அது தொடர்பிலான கூட்டங்களில் இலங்கை பங்கேற்கிறது

 வங்காள விரிகுடாவின் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான முன்முயற்சியின் (BIMSTEC) 6வது உச்சி மாநாடு, 20வது அமைச்சர்கள் கூட்டம் மற்றும் 25வது சிரேஷ்ட அதிகாரிகள் கூட்டம் ஆகியவை, 2025 ஏப்ரல் 02 முதல் 04 வரை தாய்லாந்தின் பாங்கொக்கில், "வளமானதும், மீள்தகவுள்ளதுமான திறந்த பிம்ஸ்டெக்" என்ற தொனிப்பொருளில் நடைபெற்றது. இவ்வுச்சிமாநாட்டிற்கு தாய்லாந்து இராச்சியம் தலைமை தாங்கியது.

பிரதமர் பேராசிரியர் ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்ற இந்த உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட இலங்கையின் பிரதிநிதிகள் குழுவில், வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கான பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர மற்றும் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் அடங்குவர். வெற்றிகரமானதொரு உச்சிமாநாட்டை நிகழ்த்தியதற்காகவும், அவர்களின் அன்பான விருந்தோம்பலுக்காகவும் தாய்லாந்து அரசாங்கத்திற்கும், பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ராவிற்கும் பிரதமர் அமரசூரிய தனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்தார்.

மேலும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் (STI) போன்ற துறைகளில் முன்னணி நாட்டுடனான பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தையும், இக்கருத்தில் இலங்கையின் ஈடுபாட்டையும் பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார். கொழும்பில் பிம்ஸ்டெக் தொழில்நுட்ப பரிமாற்ற வசதியை செயற்படுத்துவதற்கான இலங்கையின் எதிர்பார்ப்பையும் அவர் எடுத்துரைத்தார்.

மேலும், எதிர்கால சவால்களுக்கு மக்களை முக்கியமான திறன்களுடன் தயார்ப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட மனிதவள அபிவிருத்தி குறித்த, புதிதாக இறுதி செய்யப்பட்ட செயற்திட்டத்தின் முக்கியத்துவத்தை பிரதமர் அடிக்கோடிட்டுக் காட்டினார். நீண்டகால வளர்ச்சி மற்றும் பிராந்தியச்செழுமை ஆகியவற்றை  மையமாகக்கொண்ட மனிதவள அபிவிருத்தியை வலியுறுத்தியதுடன், அதனை விரைவாகச் செயற்படுத்த வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.

வர்த்தகம், பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் இணைப்பு ஆகியவற்றில் பயன்படுத்தப்படாத ஆற்றலை பிரதமர் சுட்டிக்காட்டியதுடன், நீண்டகால பிரச்சினைகளுக்கான தீர்வுகளைக் காண்பதற்கான  திறந்த தன்மை மற்றும் அறிவுப் பகிர்வை வலியுறுத்தினார். பிம்ஸ்டெக்கின் பரந்தளவிலான ஒத்துழைப்பு இலக்குகளை விரைவுபடுத்துவதற்கு பௌதீக, டிஜிட்டல் மற்றும் எரிசக்தி தொடர்பிலான இணைப்பை மேம்படுத்துவதன் அவசியம் குறிப்பிடப்பட்டது.

20வது அமைச்சர்கள் கூட்டத்தில், இலங்கையின் சார்பாக பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர, மேம்பட்ட கடல்சார் ஒத்துழைப்பை நோக்கிய ஒரு படியாக கடல்சார் ஒத்துழைப்புக்கான பிம்ஸ்டெக் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார். இந்தியப் பெருங்கடல் விளிம்பு நாடுகள் சங்கம் (IORA) மற்றும் ஐக்கிய நாடுகளுக்கான போதைப்பொருள் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளுக்கான அலுவலகம் (UNODC) ஆகியவற்றுடன் மேலதிக புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டமையானது, பிம்ஸ்டெக்கின் சர்வதேச கூட்டாண்மைகளை வலுப்படுத்துவதாய் அமைந்தது.

6வது பிம்ஸ்டெக் பிரகடனம், பிம்ஸ்டெக்கிற்கான பாங்கொக்கின் தொலைநோக்கு 2030, பிம்ஸ்டெக் பொறிமுறையின் வழிமுறைகளுக்கான நடைமுறை விதிகள், பிம்ஸ்டெக் எதிர்கால நடவடிக்கைகள் குறித்த நிபுணர் குழுவின் அறிக்கை மற்றும் 2025 மார்ச் 28 அன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மியான்மர் மற்றும் தாய்லாந்துடன் ஒற்றுமையை வெளிப்படுத்தும் தலைவர்களின் கூட்டு அறிக்கை உள்ளிட்ட பல முக்கிய ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து உச்சிமாநாடு நிறைவடைந்தது.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு

கொழும்பு

2025 ஏப்ரல் 09

 

Please follow and like us:

Close