ஆபிரிக்காவுடன் இலங்கையின் ஈடுபாட்டை வழிநடத்துவதற்கான 'புத்துயிர் பெற்ற ஆபிரிக்கா கொள்கை'

ஆபிரிக்காவுடன் இலங்கையின் ஈடுபாட்டை வழிநடத்துவதற்கான ‘புத்துயிர் பெற்ற ஆபிரிக்கா கொள்கை’

Pic1

 

ஊடக வெளியீடு

 ஆபிரிக்காவுடன் இலங்கையின் ஈடுபாட்டை வழிநடத்துவதற்கான 'புத்துயிர் பெற்ற ஆபிரிக்கா கொள்கை'

அண்மையில் உருவாக்கப்பட்ட புத்துயிர் பெற்ற ஆபிரிக்கா கொள்கையின் செயற்பாடானது, ஆபிரிக்கா முழுவதும் உள்ள அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சாரத் துறைகளில் இலங்கையின் ஒத்துழைப்பை மேம்படுத்த முற்படுவதாக வெளிவிவகார செயலாளர் ரவிநாத ஆரியசிங்க தெரிவித்துள்ளார். நெருக்கமான ஈடுபாட்டிற்கான திட்டமிடப்பட்ட நடவடிக்கைகளில், ஆபிரிக்காவில் இலங்கையின் இராஜதந்திர விரிவாக்கம், வலுவான மற்றும் பரஸ்பர உற்பத்திப் பொருளாதார ஒத்துழைப்பு, வரலாற்று ரீதியான மக்களுக்கு இடையிலான தொடர்புகளுக்கு புத்துயிர் அளித்தல் மற்றும் பல்தரப்பு அரங்குகள் மற்றும் பிராந்திய அமைப்புக்களில் நெருக்கமான ஒத்துழைப்பு ஆகியன உள்ளடங்கும். கொள்கை ஆவணமானது, இந்து சமுத்திரத்துக்கு அருகாமையில் இருத்தல், இலங்கையின் அமைவிடத்தின் மையம் மற்றும் 2014 இல் இலங்கை பார்வையாளர் அந்தஸ்த்தைப் பெற்ற 54 உறுப்பினர்களைக் கொண்ட ஆபிரிக்க ஒன்றியத்தின் (AU) மூலமான ஒத்துழைப்பு ஆகியவற்றின் மூலம் மூலோபாய இணைப்புக்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

திரு. ஆரியசிங்க புதன்கிழமை (டிசம்பர் 11) கெய்ரோவில் உள்ள எகிப்திய வெளிவிவகார சபையில், எகிப்திய வெளிவிவகார சபையின் தலைவர் தூதுவர் கௌரவ மொனிர் சஹ்ரான் அவர்களின் தலைமையில், 'இலங்கை - எகிப்து உறவுகள் மற்றும் ஆபிரிக்க கண்டத்துடனான இலங்கையின் உறவுகளை வலுப்படுத்துதல்' என்ற தொனிப்பொருளின் கீழ் இடம்பெற்ற அறிஞர்களின் பிரதிநிதிகள் குழுவொன்றில் உரையாற்றியபோது இந்த அவதானிப்புக்களைத் தெரிவித்தார். ஆபிரிக்கா முழுவதும் ஒளிபரப்பப்படும் கேபிள் வலையமைப்பான 'நைல் டிவி' இல் இடம்பெற்ற செயலாளர் பங்கேற்ற தொலைக்காட்சி விவாதத்தின் போதும் இந்தக் கருத்து சுட்டிக்காட்டப்பட்டது. இலங்கைக்கும் எகிப்துக்கும் இடையிலான இருதரப்பு அரசியல் ஆலோசனைகளின் தொடக்க அமர்வுக்காக வெளிவிவகார செயலாளர் கெய்ரோவில் தரித்திருந்தார்.

'புத்துயிர் பெற்ற ஆபிரிக்கா கொள்கை' என்பது, இலங்கை தொடர்புடைய முகவர்கள், கொழும்பைத் தளமாகக் கொண்ட ஆபிரிக்க இராஜதந்திரப் பிரதிநிதிகள் மற்றும் கௌரவ தூதுவர்கள், ஆபிரிக்காவில் உள்ள இலங்கைத் தூதரகங்கள் மற்றும் கௌரவ தூதுவர்கள் மற்றும் லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவனம் ஆகியவற்றுடன் கலந்தாலோசித்து வெளிநாட்டு உறவுகள் அமைச்சு தயாரித்த கொள்கை ஆவணமாகும். இந்த முயற்சிகள் ஆபிரிக்க பிராந்தியத்துடன் ஈடுபடுவதற்கான கட்டமைப்பொன்றை வழங்கி, பலமான இலங்கை - ஆபிரிக்க உறவை வளர்க்கும் பல கூட்டுறவு இணைப்புகளை உருவாக்குவதற்கு எதிர்பார்க்கும்.

தனது உரையில், வெளிவிவகார செயலாளர் ஆரியசிங்க, ஆபிரிக்கா மற்றும் அரபு உலகின் விடுதலைப் போராட்டங்களுக்கு இலங்கை அளித்த குறிப்பிடத்தக்க பங்களிப்பை அடிக்கோடிட்டுக் காட்டினார் - 1956 ஆம் ஆண்டு சுயஸ் நெருக்கடியின் போது வழங்கிய ஆதரவு முதல், 1960 - 1990 களில் கண்டம் முழுவதும் நிறவெறி மற்றும் இனவெறியை முறியடிப்பதனூடாக பலஸ்தீனிய போராட்டம் வரை தொடர்ச்சியாக இலங்கை ஆதரவுகளை வழங்கி வருகின்றது. 1976 செப்டம்பரில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 31 வது அமர்வில் அணி சேரா இயக்கத்தின் தலைவராக பிரதமர் சிரிமாவோ பண்டாரநாயக்க அவர்கள் தனது ஆதரவையும், ஆபிரிக்க மக்கள் போராட்டத்திற்கு அணிசேரா இயக்கத்தின் ஆதரவையும் மீண்டும் வலியுறுத்திய 'வரலாற்று நதி பின்னோக்கிப் பாய முடியாது என்பதனையும், இனவெறி ஆட்சிகள் இதனை உணர நீண்ட காலம் எடுக்குமாயின், அந்தக் கண்டத்திலும் ஏனைய இடங்களிலும் அமைதிக்கான விளைவுகள் மிகவும் கடுமையானதாக இருக்கும் என்பதனையுமே கொழும்பு ஆவணங்கள் தெரிவிக்க முற்படுகின்றன' என்ற வார்த்தைகளை அவர் நினைவு கூர்ந்தார்.

ஆபிரிக்காவைப் பற்றியும், இலங்கைக்குள் அதற்கான வளர்ந்து வரும் வாய்ப்புக்கள் பற்றியும், ஆபிரிக்க நாடுகளுக்குள் இலங்கைக்கான வாய்ப்புக்கள் பற்றியும் அதிக விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம், இலங்கை ஆபிரிக்க நண்பர்களுடன் இணைந்து அதிக முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் உற்பத்தி விளைவுகளை நோக்கிய எமது நீண்டகால தொடர்புகளை வளர்த்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை அவர் வெளிப்படுத்தினார். இந்த முயற்சிகள், ஆபிரிக்காவில் இலங்கை தனது சுவடுகளை விரிவுபடுத்தி, தற்போது ஒரு புதிய கட்டத்தில் இருக்கும் ஆபிரிக்க பிராந்தியத்துடன் இருதரப்பு வர்த்தகம், முதலீடு மற்றும் மக்களுக்கிடையிலான உறவுகள் மூலம் பரஸ்பரம் நன்மை பயக்கும் வகையில் பொருளாதார ஈடுபாட்டை அதிகரிக்கும். ஆபிரிக்கக் கண்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டவுடன், அது வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளுக்கு மேலும் தூண்டுதலாக அமையும் என வெளிவிவகார செயலாளர் குறிப்பிட்டார்.

வெளிநாட்டு உறவுகள் அமைச்சு
கொழும்பு
19 டிசம்பர் 2019
Pic2
Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close