2020 ஜனவரி 26 ஆந் திகதி நடைபெற்ற 71வது இந்தியக் குடியரசு தின நிகழ்வில் கௌரவ வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன அவர்களின் கருத்துக்கள்

2020 ஜனவரி 26 ஆந் திகதி நடைபெற்ற 71வது இந்தியக் குடியரசு தின நிகழ்வில் கௌரவ வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன அவர்களின் கருத்துக்கள்

 

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் மாண்புமிகு தரஞ்சித் சிங் சந்து அவர்களே,

கௌரவ அமைச்சர்களே,

மேன்மை தங்கியவர்களே,

கனவான்களே மற்றும் சீமாட்டிகளே,

இந்தியக் குடியரசு தினத்தைக் கொண்டாடும் இந்த சந்தர்ப்பத்தில், அதிமேதகு ஜனாதிபதி,  இலங்கை அரசாங்கம் மற்றும் அதன் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன்.

மேன்மை தங்கியவர்களே, கனவான்களே மற்றும் சீமாட்டிகளே,

வரலாறு, கலாச்சாரம் மற்றும் மதம் ஆகியவற்றுடன் நெருக்கமாக ஒன்றிணைந்த இலங்கையும் இந்தியாவும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நீடித்த உறவுகளை அனுபவித்து வருகின்றன. இந்தியா இலங்கையின் மிக நெருங்கிய அண்டை நாடாவதுடன், ஒருவருக்கொருவர் கலாச்சாரங்களையும் சமூக விழுமியங்களையும் வளர்த்துக் கொண்டு, இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த நெருக்கம் நாகரிகப் பாரம்பரியத்தை பரிமாறிக் கொள்வதற்கு பங்களிப்புச் செய்தது. எமது ஆளுகை நடத்தையில் ஒரு வலுவான அடித்தளமாக இருக்கின்ற இந்து மற்றும் பௌத்த மதங்களின் பண்டைய தத்துவங்களின் மூலம் இரு நாடுகளும் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் வெளியுறவுகளில் இலங்கைக்கு எப்போதும் ஒரு சிறப்பான இடம் கிடைத்தது. புராண இதிகாசங்களிலிருந்து தொடங்கி, மூன்றாம் நூற்றாண்டில் இருந்தே, மௌரிய சாம்ராஜ்யத்தின் பேரரசர் அசோக்க, புத்தரின் சமாதானச் செய்தியைப் பகிர்ந்து கொள்வதற்காக தனது குடும்பத்தை மதத் தூதுவர்களாக இலங்கைக்கு அனுப்புவதற்கு தனிப்பட்ட அக்கறையை கொண்டிருந்தார். காலப்போக்கில், இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்பு இலங்கையின் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் வடிவமைப்பதில் வெளிப்பட்டுள்ளதுடன், நமது நாட்டின் அடையாளத்தை உருவாக்குவதற்கும் பங்களித்தது.

காலனித்துவத்திற்குப் பிந்தைய காலத்தில், எமது பிராந்தியத்தில் பண்டைய விழுமியங்களையும் ஞானத்தையும் மீட்டெடுக்கும் சகாப்தத்தை ஒன்றாகக் கொண்டு வந்த மகாத்மா காந்தி, ஸ்ரீ ஜவஹர்லால் நேரு போன்ற சிறந்த தலைவர்களும், ரவீந்திரநாத் தாகூரின் திறனுள்ள கலாச்சார சின்னங்களும் எமது நாடுகளை வடிவமைத்தன. 1948 ஆம் ஆண்டில் முறையான இராஜதந்திர உறவுகளை ஸ்தாபிப்பதன் மூலம் எமது இரு நாடுகளும் பிரித்தானிய ஆட்சியிலிருந்து விடுபட்ட புதிய சுயாதீன நாடுகளாக வலுவான இருதரப்புப் பங்காளித்துவத்தை உருவாக்கின. அப்போதிருந்து எமது உறவுகள் மேலும் பல மடங்குகளில், ஜனநாயகம் மற்றும் சுதந்திரக் கொள்கைகளால் பிணைக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை உள்ளடக்கியுள்ளது.

மேன்மை தங்கியவர்களே, கனவான்களே மற்றும் சீமாட்டிகளே,

எமது உறவுகள் புதுப்பிக்கப்பட்ட பரஸ்பர மரியாதை மற்றும் மக்களுக்கான செழிப்புக்கான கடமைகள் மீள்வரையறை செய்யப்பட்டுள்ள நேரத்தில், 21ஆம் நூற்றாண்டின் இரண்டாவது தசாப்தத்தில் மிகுந்த அபிலாஷையுடன் உள் நுழைகின்றோம். 2019 நவம்பர் மாதத்தில் இலங்கையில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி. ஜெய்சங்கர் அவர்களே புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்து, மரியாதை செலுத்திய முதலாவது வெளிநாட்டுப் பிரமுகர் ஆவார்.

உண்மையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் பதவியேற்றதன் பின்னர், தனது முதலாவது வெளிநாட்டுப் பயணத்தை இந்தியாவுக்கு மேற்கொண்டதுடன், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஏனைய இந்தியத் தலைவர்களுடன் மிகவும் பயனுள்ள கலந்துரையாடல்களையும் நடத்தினார். இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளிநாட்டு அமைச்சர் என்ற வகையில் எனது முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டுப் பயணத்தை இந்தியாவிற்கு மேற்கொள்வதற்கு எனக்கு வாய்ப்புக் கிடைத்த அதே நேரத்தில், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் எதிர்வரும் வாரங்களில் இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இந்த உயர் மட்ட இருதரப்புப் பரிமாற்றங்கள் எமது பரஸ்பர உறவின் தனித்துவத்தையும் வலிமையையும் குறித்து நிற்கின்றன. ஆசிய எழுச்சியின் சகாப்தத்தில் எதிர்வரும் தசாப்தங்களில் எமது பொருளாதாரங்களை ஒன்றாக முன்னோக்கி நகர்த்துவதற்கு அயல் தேசங்களாகவும், நாடுகளாகவும் நாம் தயாராகவுள்ளோம். பொதுவான செழிப்பை அடைந்து கொள்வதற்குப் பலனளிப்பதற்காக எமக்கு முன்னிலையில் பணிகளையுள்ளடக்கியதொரு விரிவான நிகழ்ச்சி நிரல் உள்ளது.

மேன்மை தங்கியவர்களே, கனவான்களே மற்றும் சீமாட்டிகளே,

இலங்கை போன்ற நாடுகளின் பொருளாதாரங்கள் உலகளாவிய பொருளாதார நிறுவனமாக உயர்ந்து வரும் இந்தியாவின் பொருளாதார வெற்றிகளிலிருந்து மகத்தான பலன்களைப் பெற்றுக் கொள்ளலாம். 2050ஆம் ஆண்டளவில் இந்தியா இரண்டாவது பெரிய உலகப் பொருளாதாரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கையில் விமான இணைப்பு, பாதுகாப்பு ஒத்துழைப்பு, மேம்பட்ட முதலீடுகள், மக்கள் தொடர்புகள் மற்றும் கலாச்சாரப் பரிமாற்றங்கள் ஆகியவற்றை மேம்படுத்துவதன் மூலம் பன்மடங்கு நடவடிக்கைகளினால்இந்தியாவுடன் ஒரு வலுவான கூட்டாட்சியை உருவாக்குவதற்கு நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

இந்த சூழலில், இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமாக வட மாகாணத்தில் உள்ள பலாலி விமான நிலையத்தை உருவாக்குவதற்கான இந்திய அரசாங்கத்தின் உதவியை நாங்கள் பாராட்டுகின்றோம். சென்னை - யாழ்ப்பாண விமானங்கள் 40 ஆண்டுகளுக்குப் பின்னர் தொடங்கப்பட்டுள்ளதுடன், பெங்களூரு, கொச்சின், மும்பை மற்றும் ஹைதராபாத் நகரங்களை இணைக்கும் விமான சேவைகளையும் விரிவுபடுத்துவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், தற்போது ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் 14 இந்திய நகரங்களை உள்ளடக்கியிருப்பதுடன், மக்கள் இணைப்பிற்கு மிகவும் உறுதியான வழியில் உதவுகின்றது. இந்தியாவில் இருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதுடன், கடந்த ஆண்டு 355,000 பேர் வருகை தந்துள்ளனர்.

மேன்மை தங்கியவர்களே, கனவான்களே மற்றும் சீமாட்டிகளே,

பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு மற்றும் தேசியப் பாதுகாப்பு ஆகிய துறைகளில் இரு நாடுகளும் நெருக்கமான மற்றும் மூலோபாய ஒத்துழைப்பைக் கொண்டுள்ளன. காலி உரையாடல், இலங்கை - இந்தியா பாதுகாப்பு உரையாடல் மற்றும் முத்தரப்பு கடல்சார் பாதுகாப்பு வழிமுறைகள் உள்ளிட்ட வருடாந்த பாதுகாப்பு உரையாடல்கள், இரு நாடுகளும் தமது பாதுகாப்பு விடயங்கள் குறித்து பகிர்ந்து கொள்வதற்கு பயனளிக்கின்றன. பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்தின் எழுச்சியை நிவர்த்தி செய்வதில் உளவுத்துறையைப் பகிர்ந்து கொண்ட இந்திய அரசாங்கத்திற்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். இலங்கையின் புதிய தலைமையின் கீழ், பிராந்தியத்தில் நிலையான அமைதி மற்றும் பாதுகாப்பை நோக்கி ஒத்துழைப்பு மூலமாக இந்தியாவுடன் ஒத்துழைப்பதில் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றோம்.

மேன்மை தங்கியவர்களே, கனவான்களே மற்றும் சீமாட்டிகளே,

இந்தியா இலங்கையின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியாகவும், 3வது பெரிய ஏற்றுமதி இலக்காகவும், மிகப்பெரிய இறக்குமதி மூலமாகவும் உள்ளது. 2018/19 ஆம் ஆண்டில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான மொத்த இருதரப்பு வர்த்தகம் 6.2 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்ததுடன், இது 2017/18 உடன் ஒப்பிடும்போது 18% க்கும் அதிகமாகும்.

இலங்கையின் முக்கிய அபிவிருத்திப் பங்காளிகளில் இந்தியாவும் ஒன்றாகும். 2.5 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டிய கடன்கள், மானியங்கள், கடன் கோடுகள் மற்றும் தொழில்நுட்ப உதவிகள் போன்றவற்றில் இந்தியா தொடர்ந்தும் வழங்கி வரும் உதவிகளை நாங்கள் பாராட்டுகின்றோம்.

இந்திய அரசாங்கத்தின் உதவித் திட்டங்களை நாங்கள் பாராட்டுவதுடன், இன்று வரை நாடு முழுவதும் 60,000 வீடுகளில் 47,000 வீடுகள் நிறைவடைந்துள்ளன. இது வெளிநாடுகளில் இந்திய அரசாங்கம் மேற்கொண்ட மிகப்பெரிய திட்டங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது.

மேன்மை தங்கியவர்களே, கனவான்களே மற்றும் சீமாட்டிகளே,

இறுதியாக, எனினும் முடிவாக அன்றி, இரு நாடுகளுக்குமிடையில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான அவரது மகத்தான சேவை மற்றும் அர்ப்பணிப்புக்காக, மாண்புமிகு தரஞ்சித் சிங் சந்து அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். புதிய பொறுப்புக்களை ஏற்க நீங்கள் விரைவில் எமது தேசத்தை விட்டு வெளியேறுவதால், எனது அரசாங்கத்தின் சார்பாகவும், எனது சார்பாகவும், உங்களுக்கு ஒவ்வொரு வெற்றிகளும் கிட்டுவதற்கு விரும்புகின்றேன். மேலும், இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் ஊழியர்களின் தொடர்ச்சியான ஆதரவிற்கும் ஒத்துழைப்பிற்கும் நன்றி தெரிவிப்பதற்காக இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துகின்றேன்.

மேன்மை தங்கியவர்களே, கனவான்களே மற்றும் சீமாட்டிகளே,

- இந்தியக் குடியரசின் தலைவர், அதிமேதகு ஸ்ரீ ராம்நாத் கோவிந்த்,

- இந்தியக் குடியரசின் பிரதமர், அதிமேதகு ஸ்ரீநரேந்திர மோடி,

- இந்தியக் குடியரசின் மக்கள்,

ஆகியோரின் சிறந்த ஆரோக்கியம் மற்றும் நலனோம்புகைக்காகவும்,

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு மற்றும் இந்தியக் குடியரசுக்கு இடையிலான நீடித்த நட்புக்காகவும்

பிரமாணமொன்றை முன்மொழிவதற்காக இந்த மகிழ்ச்சியான சந்தர்ப்பத்தில் தயவுசெய்து என்னுடன் ஒன்றிணையுங்கள்.

நன்றி.

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close