வன்முறைத் தீவிரவாதத்தைத் தடுக்க இலங்கை உதவி கோருகின்றது

வன்முறைத் தீவிரவாதத்தைத் தடுக்க இலங்கை உதவி கோருகின்றது

Koser photo1

வன்முறைத் தீவிரவாதம் தேசிய பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ள ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதலுக்கு பின்னர், உலகளாவிய சமூக ஈடுபாடு மற்றும் மீண்டெழுதல் நிதியிலிருந்து வன்முறை தீவிரவாதத்தை தடுப்பதற்கான நிபுணத்துவத்தை இலங்கை கோரியுள்ளது. வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் அழைப்பின் பேரில், உலகளாவிய சமூக ஈடுபாடு மற்றும் மீண்டெழுதல் நிதியின் உதவிக்கான சாத்தியமான திட்டங்களை அறிந்து கொள்ளும் நோக்கில், உலகளாவிய சமூக ஈடுபாடு மற்றும் மீண்டெழுதல் நிதியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி. காலித் கோசர் ஆகஸ்ட் 27 முதல் 30 வரை இலங்கையில் தங்கியிருந்து, அரசியல் தலைவர்கள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் ஏனைய பங்குதாரர்களை சந்தித்தார்.

ஆகஸ்ட் 29 வியாழக்கிழமை கலாநிதி. கோசருடனான சந்திப்பின் போது, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன கலாநிதி. கோசர் அவர்கள் இலங்கையில் தங்கியிருப்பதை பாராட்டியதுடன், கொடூரமான ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளைக் கைது செய்வதில் பெரும்பாண்மையான முஸ்லிம் சமூகத்தினர் அரசாங்கத்திற்கு உதவியிருந்தனர் என்பதை கவனத்திற் கொண்டு இலங்கையில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று சுட்டிக்காட்டினார். தீவிரமயமாக்கலின் ஆரம்ப கட்டங்களில் தீவிரமான கூறுகள் அடையாளம் காணப்பட்டு கையாளப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார். சாதாரண இலங்கை மக்கள் தீவிரவாதிகள் அல்ல, ஆனால் தமது உள்நோக்கங்களை அடைந்து கொள்ள ஆர்வமுள்ள தரப்பினரால் முறையற்ற கூறுகள் உட்செலுத்தப்படலாம் என அவர் மேலும் வலியுறுத்தினார். பல நாடுகளால் எதிர்நோக்கப்படும் பிரச்சினையான மோதல் பிரதேசங்களிலிருந்து திரும்பும் தனிநபர்களை கையாள்வதில் உள்ள சிரமம் குறித்தும் அமைச்சர் கருத்துத் தெரிவித்தார்.

எந்தவொரு வன்முறைத் தீவிரவாதத்தை தடுப்பதற்கான திட்டத்திற்குமான தேசிய உரிமை, பயனுள்ள ஒருங்கிணைப்பு மற்றும் உள்ளூர் சூழல் ஆகியனவே உலகளாவிய சமூக ஈடுபாடு மற்றும் மீண்டெழுதல் நிதியின் உதவிக்கான மையம் ஆகும் என்பதை கலாநிதி. கோசர் கோடிட்டுக் காட்டினார். பங்களாதேஷ், தூனிசியா, மாலி, நைஜீரியா, கென்யா, பிலிப்பைன்ஸ் மற்றும் மியான்மார் ஆகிய நாடுகளில் இது போன்ற சூழ்நிலைகளில் உலகளாவிய சமூக ஈடுபாடு மற்றும் மீண்டெழுதல் நிதியின் ஈடுபாடு குறித்து அவர் மேலும் விளக்கினார்.

கலாநிதி. கோசர் சபாநாயகர் கரு ஜயசூரியவையும் சந்தித்ததுடன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் பாதிக்கப்படக்கூடிய விடயங்களில் அவர் மேற்கொண்ட பணிகள் குறித்து சபாநாயகர் விளக்கினார். தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, அமைதியான சகவாழ்வு மற்றும் சமூக நல்லிணக்கம் குறித்து பல்வேறு சமூகங்களுடன் அடிமட்ட நிலையில் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் நடாத்திய பணிகள் குறித்து விளக்கினார்.

பாதுகாப்பு செயலாளர் சாந்த கோட்டேகொட மற்றும் வெளிவிவகார செயலாளர் ரவிநாத ஆர்யசிங்க ஆகியோரின் இணைத் தலைமையில் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற சம்பந்தப்பட்ட அரசாங்க பங்குதாரர்களுடனான ஒரு ஊடாடும் உரையாடலில், பாதுகாப்புப் படையினரும் காவல்துறையினரும் 21/4 க்குப் பிறகு நிலைமையை விரைவாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன், இரண்டாவது கட்ட தாக்குதல்களை நடத்துவதற்கு ஏதுவான சந்தேக நபர்களை கைது செய்ததாகவும் பாதுகாப்பு செயலாளர் குறிப்பிட்டார். தீவிரமயமாக்கலைத் தடுப்பதற்காக தடுப்புக்காவலில் இருப்பவர்களுடன் ஒரு மிதவாத திட்டத்தை முன்வைத்து உரையாற்றுவதற்கான நேரம் இதுவாகும். மேலும் விடுதலைப் புலிகளின் மறுவாழ்வு மற்றும் மதத் தீவிரவாதத்தை கையாள்வதில் உள்ள சிக்கல்களின் தன்மை ஆகியவற்றுக்கு இடையேயான வித்தியாசத்தை அவர் கோடிட்டுக் காட்டியதுடன், மதத் தீவிரவாதத்தை கையாள்வதற்கு வித்தியாசமான உபாயங்கள் மற்றும் செயற்பாட்டுத் திட்டம் அவசியம் என குறிப்பிட்டார்.

சூழ்நிலைகள் நாட்டிற்கு நாடு வேறுபடுவதனால், எந்தவொரு வன்முறைத் தீவிரவாதத்தை தடுப்பதற்கான நடவடிக்கையும் உள்ளூர் சூழலுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட வேண்டும் என்பதுடன், முழு அரசாங்க அணுகுமுறையும் பின்பற்றப்பட வேண்டும் என செயலாளர் ஆர்யசிங்க தெரிவித்தார். இதனால்தான் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு சர்வதேச நிபுணத்துவத்தைப் பயன்படுத்துவதற்கும், அரசாங்கத்திற்குள் ஒரு பயனுள்ள வன்முறை தீவிரவாதத்தை தடுப்பதற்கான மூலோபாயத்தின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளது. அனைத்து உறுப்பு நாடுகளும் இணங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள, வன்முறைத் தீவிரவாதத்தை எதிர்ப்பதற்கான ஐ.நா. பாதுகாப்புச் சபையின் தீர்மானங்கள் குறித்து இலங்கை நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் நினைவுபடுத்தினார்.

அரசாங்க பங்குதாரர் கூட்டம் பாதுகாப்பு, வெளிநாட்டு அலுவல்கள், வெகுஜன ஊடகம், நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, கல்வி, உயர் கல்வி மற்றும் காவல்துறை அமைச்சுக்களின் அதிகாரிகளை ஒன்றிணைத்தது.

உலகளாவிய சமூக ஈடுபாடு மற்றும் மீண்டெழுதல் நிதி என்பது, வன்முறை தீவிரவாதத்திற்கு எதிராக மீண்டெழுவதனை வலுப்படுத்தும் நோக்கில் உள்ளூர், சமூக அளவிலான முன்முயற்சிகளை ஆதரிக்கும் ஜெனீவாவை தளமாகக் கொண்ட பொது தனியார் பங்காண்மை ஆகும்.

 

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

 

02 செப்டம்பர் 2019

koser photo2

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close