வரலாற்றுப் பிரதேசங்களை பாதுகாத்தல் மற்றும் யாத்திரீகர்களுக்கான வசதிகளை மேம்படுத்தல் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் லும்பினி பெருந்திட்டத்தினை நடைமுறைப்புடுத்துவதற்கு ஆதரவு வழங்குவதற்கான இலங்கையின் ஆயத்த நிலைமையினை அறிவித்தவராக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் தனது நேபாளத்திற்கான இரண்டு நாள் இரு தரப்பு விஜயத்தினை ஞாயிற்றுக்கிழமை (2018 செப்டெம்பர் 02ஆந் திகதி) பூர்த்தி செய்தார். 2018 ஆகஸ்ட் 30 - 31ஆந் திகதி நடைபெற்ற 4ஆவது பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி அவர்கள் நேபாளத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
செப்டம்பர் 01ஆந் திகதி சனிக்கிழமை ஷிடால் நிவாஸில் இடம்பெற்ற ஜனாதிபதி சிறிசேன அவர்களுக்கான உத்தியோகபூர்வ மரியாதை விருந்துபசாரத்தைத் தொடர்ந்து, நேபாள ஜனாதிபதி பிந்தியா தேவி பண்டாரி அவர்களுடன் இடம்பெற்ற இருதரப்பு கலந்துரையாடல்களின் போது அவர் இந்த அறிவிப்பை மேற்கொண்டார். குறித்த நாளின் ஆரம்பத்தில், ஜனாதிபதியும், அவரது தூதுக்குழுவினரும் இளவரசர் சித்தார்த்த கௌதம அவர்களின் பிறப்பிடமான புனித லும்பினிக்கு விஜயம் செய்திருந்தனர். வருடாந்தம் 50,000 இற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் லும்பினிக்கு யாத்திரை மேற்கொள்கின்றனர்.
அவர்களின் சந்திப்பின் போது, கடந்த சில வருடங்களில் இடம்பெற்ற இருதரப்பு பரிமாற்றங்களின் திருப்திகரமான விடயங்களை இரு தலைவர்களும் மீளாய்வு செய்து கொண்டனர். இலங்கை நேபாளத்தின் உண்மையான நட்பு நாடாக திகழ்வதற்காகவும், நாட்டை 2015இல் தாக்கிய நில அதிர்வுக்குப் பின்னர் குறிப்பாக கத்மண்டுவில் அமைந்துள்ள ஆனந்த் குதிர் விகாரை மற்றும் ராடோ மசிந்திரநாத் விகாரை ஆகியவற்றை மீள நிர்மாணிப்பதற்கு நல்கிய உதவிகளுக்குமாக நேபாள ஜனாதிபதி தனது பாராட்டுக்களை தெரிவித்தார். இரு நாடுகளுக்கு மத்தியில் சுற்றுலாத் துறையை மேம்படுத்திக்கொள்வதற்கும் பிராந்தியத்திற்கு அப்பாற்பட்ட பகுதியிலிருந்து சுற்றுலாத்துறையை வளர்த்துக் கொள்வதற்காகவும் “புத்த சுற்று” எனும் துவக்க முயற்சியை சந்தைப்படுத்துவதற்கான சாத்தியப்பாடுகள் தொடர்பிலும் இரு தலைவர்களும் மேலும் கலந்துரையாடினர்.
4ஆவது பிம்ஸ்டக் உச்சிமாநாட்டை வெற்றிகரமாக பூர்த்தி செய்தமைக்காக ஜனாதிபதி சிறிசேன அவர்கள் நேபாள அரசாங்கத்திற்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டதுடன், பிம்ஸ்டெக்கின் புதிய தலைமை என்ற ரீதியில், இலட்சியபூர்வமான கத்மண்டு பிரகடனத்தினை செயற்படுத்துவதற்காக நேபாளத்தின் ஒத்துழைப்பினையும் எதிர்பார்த்தார். நேபாளத்தின் பிரதமர் கே.பி. ஒலி அவர்களுடனான சந்திப்பின் போது, ஜனாதிபதி அவர்கள் இரண்டு நாடுகளுக்குமிடையிலான பொருளாதார உறவுகளை பலப்படுத்திக்கொள்வதன் முக்கியத்துவத்தினை வலியுறுத்தியதுடன், நேபாள பிரதமர் அவர்கள் கலந்துரையாடப்பட்ட கருத்துக்களை முன்னெடுப்பதற்காக இலங்கை-நேபாள இணைந்த ஆணைக்குழுவொன்று ஆரம்பத்தில் இடம்பெறும் என தெரிவித்தார்.
மேலும், நேபாளத்தின் மூலோபாய மற்றும் சமூக-பொருளாதார ஆய்வு நிறுவகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “வர்த்தகம், சுற்றுலா மற்றும் முதலீட்டு கலந்துரையாடல்” இனை ஆகஸ்ட் 31ஆந் திகதி வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் ஆரம்பித்து வைத்தார். சமுகமளித்திருந்திருந்தவர்களுக்கு உரையாற்றிய இராஜாங்க வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் வசந்த சேனாநாயக அவர்கள், இலங்கையிலுள்ள நிர்மாண, கல்வி, தகவல் தொழில்நுட்பம், சுகாதாரம், ஆடை மற்றும் உபசரணை கம்பனிகள் நேபாளத்தில் முதலீடு செய்வதற்கு வசதி வாய்ப்புக்கள் வழங்கப்படவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
விஜயத்தின் போது, இரண்டு புரிந்துணர்வு உடன்படிக்கைகள் இரண்டு அரசாங்கங்களுக்குமிடையில் கைச்சாத்திடப்பட்டன. முதலாவது, நேபாளத்தின் வெளிநாட்டு அலுவல்கள் நிறுவகம், மற்றும் இலங்கையின் பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவகம் ஆகியவற்றிக்கிடையில் கைச்சாத்திடப்பட்ட அதேவேளை, இரண்டாவது இளைஞர் அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு பற்றியதாகவும் அமைந்திருந்தது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் கத்மண்டுவில் தாபிக்கப்பட்டுள்ள சார்க் அமைப்பின் செயலகத்திற்கும் விஜயம் செய்தார். அங்கு அவர் சார்க்கின் செயலாளர் நாயகம், அம்ஜட் உசைன் பீ சியல் அவர்களாலும் சார்க்கின் பணிப்பாளர்களாலும் வரவேற்கப்பட்டார். சார்க் செயலகத்திற்கான அவரின் முதலாவது விஜயத்தை குறிக்கும் முகமாக, ஜனாதிபதி அவர்கள் மரக்கன்றொன்றை வளாகாத்தில் நாட்டினார். சார்க் செயலகத்தின் உத்தியோகத்தர்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி, இலங்கையானது ஆரம்ப உறுப்பு நாடென்ற வகையில் சார்க் செயற்பாட்டிற்கு வலுவான ஆதரவை வழங்குவதாகவும், அவரது விஜயமானது செயலாளர் நாயகம் மற்றும் செயலகத்தின் பணியாட்கள் செய்யும் முக்கியமான பணிகளை ஊக்குவிக்கும் வகையில் அமைந்ததாகவும் தெரிவித்தார்.
மேலும் அவர் ஆனந்த் குதிர் விகாரை மற்றும் ராடோ மசிந்திரநாத் விகாரை ஆகியவற்றை தரிசித்து விகாரைகளின் மீள்கட்டுமானப் பணிகள் குறித்து சாரம்சமொன்றினை பெற்றுக்கொண்டார். ஜனாதிபதி மற்றும் தூதுக்குழுவினர் கத்மண்டுவிலுள்ள பசுபதிநாத் விகாரையை தரிசித்து ஆசிர்வாதங்களையும் பெற்றுக் கொண்டனர்.
03 செப்படம்பர் 2018