ஐரோப்பிய ஒன்றியம் - இலங்கை கூட்டு ஆணைக்குழுவின் 25வது அமர்வு

ஐரோப்பிய ஒன்றியம் – இலங்கை கூட்டு ஆணைக்குழுவின் 25வது அமர்வு

இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான கூட்டு ஆணைக்குழுவின் 25ஆவது அமர்வு 2023 மே 09ஆந் திகதி கொழும்பில்  உள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் இடம்பெறவுள்ளது.

இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின்  ஐரோப்பிய வெளிவிவகாரச் சேவையின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் பாவோலா பாம்பலோனி ஆகியோர் கூட்டத்திற்கு இணைத் தலைமை தாங்கவுள்ளனர்.

இரு தரப்புக்கும் பரஸ்பர நலன்களைக் கொண்ட பரந்த அளவிலான இருதரப்பு மற்றும் பலதரப்பு விடயங்கள் குறித்து கூட்டு ஆணைக்குழுவில் கவனம் செலுத்தப்படவுள்ளதுடன், எதிர்கால ஒத்துழைப்புக்கான பகுதிகள் குறித்தும் கலந்துரையாடப்படும். ஆளுகை, சட்டத்தின்  ஆட்சி மற்றும் மனித உரிமைகள் மீதான பணிக்குழு, வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான பணிக்குழு மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்புக்கான பணிக்குழு ஆகிய கூட்டு ஆணைக்குழுவின் கீழ் நிறுவப்பட்ட மூன்று பணிக்குழுக்களின் முடிவுகள் குறித்தும் இந்த சந்திப்பின் போது விரிவாக கலந்துரையாடப்படும். 2024 - 2033ஆம் ஆண்டிற்கான ஐரோப்பிய ஒன்றிய ஜி.எஸ்.பி. ஒழுங்குமுறையின் புதிய சுழற்சியை ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் விளக்கவுள்ளதுடன், இது 2024 ஜனவரி 01 முதல் அடுத்த 10 ஆண்டுகளுக்கு நடைமுறையிலிருக்கும்.

இலங்கைப் பிரதிநிதிகள் குழுவில் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசியக் கொள்கைகள், நீதி, சிறை விவகாரங்கள்  மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள், வணிகம், வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு, கல்வி, சுற்றுச்சூழல், பாதுகாப்பு, மீன்பிடி, பொதுப் பாதுகாப்பு, நகர அபிவிருத்தி மற்றும் வீட்டுவசதி அமைச்சுக்கள் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதிகள் மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொள்ளவுளள்ளனர்.

கூட்டு ஆணைக்குழுவின் கூட்டத்தின் முந்தைய அமர்வு பிப்ரவரி 2022 இல் பிரஸ்ஸல்ஸில் நடைபெற்றது.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,

கொழும்பு

2023 மே 08

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close