- பங்களாதேஷ் மக்கள் குடியரசின் பிரதமர் மாண்புமிகு ஷேக் ஹசீனா அவர்களின் அழைப்பின் பேரில், பங்களாதேஷின் தேசபிதா பங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மானின் நூற்றாண்டு பிறந்த தினம் மற்றும் பங்களாதேஷின் சுதந்திரத்தின் பொன்விழாவைக் குறிக்கும் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக, இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, 2021 மார்ச் 19 - 20 வரையான காலப்பகுதிக்கு பங்களாதேஷுக்கான அரச விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
- 2020 ஆகஸ்டில் பிரதமராகப் பதவியேற்றதன் பின்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்ட முதலாவது வெளிநாட்டு விஜயம் இதுவாகும்.
- கல்வி அமைச்சர், பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர், பணம் மற்றும் மூலதனச் சந்தை மற்றும் நிறுவனச் சீர்திருத்தங்களுக்கான இராஜாங்க அமைச்சர், பத்திக், கைத்தறித் துணி மற்றும் உள்ளூர் ஆடைப் பொருட்களுக்கான இராஜாங்க அமைச்சர் மற்றும் கிராமப்புற வீட்டுவசதி மற்றும் கட்டுமான மற்றும் கட்டிடப் பொருள் தொழில்துறை இராஜாங்க அமைச்சர், பிரதமரின் செயலாளர், வெளியுறவுச் செயலாளர் மற்றும் இலங்கையின் சிரேஷ்ட அரச அதிகாரிகள் அடங்கிய உயர் மட்டக் குழுவினர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன் கலந்து கொண்டனர்.
- பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை வரவேற்ற பிரதமர் ஷேக் ஹசீனா, டாக்காவின் ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தில் சம்பிரதாயபூர்வமான வரவேற்பினை அளித்தார். பிரதமர் ராஜபக்ஷவிற்கு பங்களாதேஷ் பிரதமர் மார்ச் 19ஆந் திகதி அரச விருந்துபசாரமொன்றை வழங்கினார்.
- 1971 விடுதலைப் போரின் தியாகிகளின் நினைவாக பங்களாதேஷின் சவாரில் உள்ள தேசிய தியாகிகள் நினைவுச்சின்னத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அஞ்சலி செலுத்தினார். தேசிய தியாகிகள் நினைவு வளாகத்தில் மரக்கன்றொன்றையும் நட்டார். பங்களாதேஷ் தேசபிதா பங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மானின் நினைவாக டாக்காவின் பங்கபந்து நினைவு அருங்காட்சியகத்தில் அவர் அஞ்சலி செலுத்தினார்.
- பங்களாதேஷ் ஜனாதிபதி மாண்புமிகு முஹம்மத் அப்துல் ஹமீத் மற்றும் பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் மார்ச் 20ஆந் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இருதரப்புக் கலந்துரையாடல்களில் ஈடுபட்டார். பாராளுமன்ற உறுப்பினரும் பங்களாதேஷ் வெளிநாட்டு அமைச்சருமான கௌரவ கலாநிதி ஏ.கே. அப்துல் மொமன் பிரதமர் ராஜபக்ஷவை மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
- மார்ச் 19ஆந் திகதி டாக்காவின் தேசிய அணிவகுப்பு மைதானத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் ஷேக் ஹசீனா முன்னிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பங்கபந்து நினைவு சொற்பொழிவை 'கௌரவ விருந்தினராக' நிகழ்த்தினார். தேசபிதா பங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மானுக்கும், இறையாண்மை மற்றும் சுதந்திரம் மிகுந்த பங்களாதேஷின் தோற்றத்திற்கு வழிவகுத்த அவரது தொலைநோக்குத் தலைமைத்துவத்திற்கும் தனது உரையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மிகுந்த அஞ்சலி செலுத்தினார். 'சோனார் பங்களா', 'செழிப்பான தங்க வங்கம்' பற்றிய பங்கபந்துவின் கனவை நனவாக்கும் முகமாக, அவரது வளமான பாரம்பரியத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் சென்றமைக்காக பிரதமர் ஷேக் ஹசீனாவைப் பாராட்டினார்.
- தொற்றுநோயின் போதும் இந்த நிகழ்விற்கு வருகை தந்து கௌரவித்தமைக்காகவும், பங்களாதேஷ் மற்றும் அதன் மக்கள் மீது தனது ஒற்றுமையை வெளிப்படுத்தியமைக்காகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு தனது உரையில் பிரதமர் ஷேக் ஹசீனா நன்றிகளைத் தெரிவித்தார்.
- பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் 2021 மார்ச் 20ஆந் திகதி இருதரப்புக் கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர். இரு தலைவர்களும் பங்களாதேஷ் - இலங்கை உறவுகளின் அனைத்து அம்சங்கள் குறித்தும் கலந்துரையாடியதுடன், பொதுவான நலன்களின் சமகால சர்வதேச மற்றும் பிராந்தியப் பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடினர். இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாறு, பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் ஏனைய பொதுவான தன்மைகளின் பகிரப்பட்ட பிணைப்புக்களை அவர்கள் நினைவு கூர்ந்தனர். இரு நாடுகளினதும் மக்களின் பரஸ்பர நலனுக்காக இறையாண்மை, சமத்துவம், நட்பு, நம்பிக்கை மற்றும் புரிதல் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு நடைமுறை மற்றும் முதிர்ந்த அணுகுமுறையுடன் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான உறுதியான நம்பிக்கையை அவர்கள் மீண்டும் வலியுறுத்தினர்.
- பங்களாதேஷில் கோவிட்-19 தொற்றுநோய் நிலைமையை திறம்படக் கையாண்ட பிரதமர் ஷேக் ஹசீனாவின் தலைமைத்துவத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பாராட்டினார். 'சார்க் கோவிட்-19 அவசர நிதியத்தின்' கீழ் இலங்கைக்கு கோவிட்-19 தொடர்பான மருத்துவ உபகரணங்களை வழங்கியமைக்காக அவருக்கு நன்றிகளைத் தெரிவித்தார். இலங்கையில் கோவிட்-19 தொற்றுநோயை வெற்றிகரமாகக் கையாள்வதிலான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் முன்மாதிரியான தலைமைத்துவத்திற்காக பிரதமர் ஷேக் ஹசீனா பாராட்டுக்களைத் தெரிவித்தார். தொற்றுநோயின் போது இரு தரப்பினரும் இரு நாடுகளினதும் பிரஜைகளுக்கு வழங்கிய கொன்சியூலர் மற்றும் திருப்பி அனுப்பும் சேவைகளை இரு தலைவர்களும் பாராட்டினர்.
- பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மக்கள் சார்பு மிகுந்த தலைமைத்துவம், உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் மற்றும் இலங்கையின் சமமான சமூகப் பொருளாதார அபிவிருத்தியை நிறைவேற்றுவதற்கான பார்வை ஆகியவற்றை பிரதமர் ஷேக் ஹசீனா பாராட்டினார். தேசிய ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் மேம்பாட்டுக்கான அவரது அரசாங்கத்தின் முயற்சிகளையும் பாராட்டினார். இரு தலைவர்களும் அந்தந்த நாடுகளில் ஜனநாயகத்தின் நிறுவனமயமாக்கலைப் பாராட்டினர்.
- பிரதமர் ஷேக் ஹசீனாவின் தொலைநோக்கு மிகுந்த தலைமைத்துவத்தின் கீழ், கடந்த தசாப்தத்தில் பங்களாதேஷின் மகத்தான சமூகப் பொருளாதார அபிவிருத்தியையும், உணவுத் தன்னிறைவு, வறுமை ஒழிப்பு, எரிசக்தி உற்பத்தி, விவசாயம், கிராமப்புற மேம்பாடு, தொழில்மயமாக்கல், சேவைத் துறை, தகவல் தொடர்பாடல் தொழினுட்பம், டிஜிட்டல்மயமாக்கல், இடர் முகாமைத்துவம், பெண்கள் அதிகாரம், காலநிலை மாற்றத் தழுவல், உட்கட்டமைப்பு அபிவிருத்தி, கல்வி ஆகியவற்றிலான பங்களாதேஷின் சாதனைகளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பாராட்டினார். கோவிட்-19 தொற்றுநோய்க்கு மத்தியிலும் பங்களாதேஷின் ஈர்க்கக்கூடிய பொருளாதார அபிவிருத்தியை அவர் பாராட்டினார். உலகில் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதில் பங்களாதேஷின் உலகளாவிய தலைமையை அவர் அங்கீகரித்தார். உலகளாவிய தொற்றுநோயின் சவால்களுக்கு மத்தியிலும் எல்.டி.சி. யிலிருந்து அபிவிருத்தியடைந்து வரும் பொருளாதாரத்திற்கு நாட்டை வழிநடாத்திய பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு அவர் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
- இலங்கையில் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்காக தமது உறுதியான ஆதரவை நல்கிய பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் பங்களாதேஷ் அரசாங்கத்துக்கு, குறிப்பாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவை, ஐக்கிய நாடுகளின் அமைப்புக்கள் மற்றும் சர்வதேச அமைப்புக்களை உள்ளடக்கிய சர்வதேச அரங்குகளில் இலங்கைக்கு ஆதரவு வழங்கியமைக்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நன்றிகளைத் தெரிவித்தார். ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 46வது அமர்வில் பங்களாதேஷ் இலங்கைக்கு ஒற்றுமையுடன் தொடர்ந்தும் ஆதரவாக நிற்கும் என பிரதமர் மகிந்த ராஜபக்ஷ நம்பிக்கை தெரிவித்தார்.
- ராகைன் மாநிலத்திலிருந்து பலவந்தமாக இடம்பெயர்ந்த1 மில்லியன் ரோஹிங்கியாக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கான பங்களாதேஷ் பிரதமரின் தாராள மனப்பான்மையை இலங்கைப் பிரதமர் பாராட்டினார். தன்னார்வமயமாக, பாதுகாப்பான, விரைவான, கண்ணியமான மற்றும் நிலையான வகையில் ரோஹிங்கியாக்கள் தமது தாயகத்திற்கு திரும்புவதன் முக்கியத்துவத்தை இரு பிரதமர்களும் மீண்டும் வலியுறுத்தினர். அண்டை நாடுகளில் இடம்பெயர்ந்த மக்களுக்கு இலங்கை இருப்பிடங்களை வழங்கும் அதே வேளையில், அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஸ்தானிகருடன் ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கு இலங்கை உறுதிபூண்டுள்ளது. ரோஹிங்கியா நெருக்கடியைத் தீர்ப்பதில் பங்களாதேஷிற்கு ஆதரவளிக்குமாறு பங்களாதேஷ் பிரதமர் இலங்கைப் பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார்.
- பயங்கரவாதம், வன்முறைத் தீவிரவாதம் மற்றும் தீவிரமயமாக்கல் ஆகியவற்றிலிருந்து எழும் பன்மைத்துவ சமூகங்களுக்கான அச்சுறுத்தல்களை உணர்ந்த இரு தலைவர்களும், இரு நாடுகளிலும், பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் இதுபோன்ற சவால்களை எதிர்கொள்வதற்காக ஒன்றிணைந்து செயற்படுவதாக உறுதியளித்தனர். இந்த சிக்கலான, பகிரப்பட்ட பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்வதில் இருதரப்பு ஒத்துழைப்பை எளிதாக்குவதற்காக, அவர்கள் ஒரு கூட்டு நிறுவனப் பொறிமுறையை அமைப்பதில் பணியாற்றுவதற்கு ஒப்புக்கொண்டனர். பயங்கரவாதத்தையும் வன்முறைத் தீவிரவாதத்தையும் எதிர்கொள்வதில் பங்களாதேஷின் அனுபவத்தை 'முழுமையான சமூகம்' என்ற அணுகுமுறையின் மூலம் பகிர்ந்து கொள்வதற்கு பங்களாதேஷ் பிரதமர் முன்வந்தார்.
- பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டம் உட்பட மேம்பட்ட தொடர்புகள் மற்றும் உயர் மட்டப் பரிமாற்றங்களை அதிகரிப்பதற்கான அவசியத்தை இரு பிரதமர்களும் வலியுறுத்தினர். பங்களாதேஷ் - இலங்கை பாராளுமன்ற நட்பு சங்கம் அமைக்கப்பட்டதைக் குறிப்பிடுகையில், இரு தலைவர்களும் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சங்கத்தைப் புதுப்பிப்பதற்கு ஒப்புக் கொண்டதோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை ஆழப்படுத்துவதில் சட்டமன்ற உறுப்பினர்களின் வினையூக்கம் மிகுந்த வகிபாகத்தை ஊக்குவித்தனர்.
- ஒட்டுமொத்த இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்காக, வெளிநாட்டு அலுவலக ஆலோசனைகள், கூட்டுப் பொருளாதார ஆணைக்குழு, துறைசார் கூட்டுக் குழுக்கள், கூட்டுத் திட்டங்கள் / பணித் திட்டங்கள் உள்ளிட்ட இரு நாடுகளுக்கிடையில் தற்போதுள்ள நிறுவன வழிமுறைகளைப் புத்துயிர் பெறச் செய்வதற்கு இரு தலைவர்களும் வலியுறுத்தினர். இந்தச் சூழலில், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளைத் தொடர்ந்தும் கண்காணிக்கும் நோக்கில் இரு நாடுகளின் வெளிநாட்டு அமைச்சர்களினதும் தலைமையில் விரிவான ஒத்துழைப்புக்கான கூட்டு ஆலோசனை ஆணைக்குழுவை நிறுவுவதற்கு இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். இது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வரைவை பங்களாதேஷ் தரப்பு விரைவில் அனுப்பி வைக்கும்.
- இருதரப்பு சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை நோக்கி நகர்வதில் இரு நாடுகளுக்குமிடையில் கைச்சாத்திடப்பட்ட பொருளாதாரக் கூட்டாண்மை குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தைப் பற்றி குறிப்பிடுகையில், சாத்தியமான மற்றும் அரசியல் உறவுகளுடன் பொருந்தாத இருதரப்பு வர்த்தகத்தின் கிடைக்கக்கூடிய ஒத்துழைப்புக்களைப் பயன்படுத்துவதற்கான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் ஆரம்ப நிறைவுக்கான தமது உறுதிப்பாட்டை இரு தலைவர்களும் மீண்டும் வலியுறுத்தினர். இதன் விளைவாக, இரு தலைவர்களும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான கூட்டு சாத்தியப்பாடுகள் சார்ந்த ஆய்வை உடனடியாக நிறைவு செய்வதற்கு ஒப்புக்கொண்டனர். இதற்கிடையில், சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கான முதல் படியாக, உற்பத்திகளின் குறுகிய பட்டியலுடன் தொடங்கி எதிர்காலத்தில் விரிவாக்கப்பட்ட வர்த்தகம், முதலீடுகள் மற்றும் சுற்றுலாவுக்கான வாய்ப்புக்களைத் திறக்கும் இருதரப்பு முன்னுரிமை வர்த்தக ஒப்பந்தத்தில் பணியாற்றுவதற்கு அவர்கள் ஒப்புக் கொண்டனர். வர்த்தகம் தொடர்பான ஜே.டபிள்யூ.ஜி. யின் அடுத்த கூட்டத்தை ஆரம்பத் திகதியில் நடாத்துவதற்கு இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.
- கட்டண வசதிகளை அடையாளம் காணுதல் மற்றும் நீக்குதல் மற்றும் பரஸ்பரம் அங்கீகரிக்கப்பட்ட தரங்களை எளிமைப்படுத்துதல் மற்றும் ஒத்திசைத்தல் உள்ளிட்ட வர்த்தக வசதிகளுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர். வர்த்தகம் செய்யக்கூடிய பொருட்களின் வகைமையை பல்வகைப்படுத்தவும், வர்த்தக மற்றும் வணிக உறவுகளுக்கு புதிய உத்வேகத்தை சேர்ப்பதற்காக புதுமையான வழிகளைத் தேடுவதற்கும் இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர். இந்த சூழலில், ஒருவருக்கொருவர் எதிர்மறையான பட்டியல்களிலிருந்து சாஃப்டாவின் கீழ் உள்ள பொருட்களின் எண்ணிக்கையை மேலும் குறைக்க வேண்டியதன் அவசியத்தை இரு தரப்பினரும் அடிக்கோடிட்டுக் காட்டினர். இந்த சூழலில், பங்களாதேஷ் தரநிலைகள் மற்றும் சோதனை நிறுவனம் மற்றும் இலங்கைத் தர நிர்ணய நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையேயான தொழில்நுட்ப ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஆரம்பத் திகதியில் செயற்படுத்துவதற்கு வலியுறுத்தப்பட்டது.
- மருந்தகத் துறையில் பரஸ்பரம் நன்மை பயக்கும் ஒத்துழைப்பின் திறனைக் குறிப்பிட்டு, இரு பிரதமர்களும் பங்களாதேஷில் இருந்து அதிக அளவு தரமான மருந்துத் தயாரிப்புக்களை கொள்வனவு செய்வதற்கும், பங்களாதேஷ் மருந்துத் தயாரிப்புக்களுக்கான பதிவு செயன்முறையை எளிதாக்குவதற்கும், எளிமைப்படுத்துவதற்கும், விரைவுபடுத்துவதற்கும் ஒப்புக்கொண்டனர்.
- பரஸ்பரம் நன்மை பயக்கும் ஒத்துழைப்புக்கான சாத்தியமான முக்கிய பகுதிகளில் ஒன்றாக, மேம்பட்ட இணைப்பின் விளைவாக இரு நாடுகளுக்கும் அதற்கு அப்பாலும் இருதரப்பு வர்த்தகத்திற்கான மேலதிக வாய்ப்புக்களைத் திறக்கும் கப்பல்துறையை இரு தலைவர்களும் அடிக்கோடிட்டுக் காட்டினர். இது சட்டோகிராமிற்கும் கொழும்பிற்கும் இடையிலான ஊட்டி சேவைகள் குறித்த வரைவுக் கடலோரக் கப்பல் ஒப்பந்தம் மற்றும் வரைவுத் தரநிலை இயக்க நடைமுறை பற்றிய பேச்சுவார்த்தைகள் மேம்பட்ட கட்டத்தில் இருப்பதைக் கவனித்த அவர்கள், இதை முன்கூட்டியே நிறைவு செய்வதற்கு ஒப்புக்கொண்டனர். நிலுவையில் உள்ள சிக்கல்களைத் தீர்ப்பதற்காக ஜே.டப்ளிவ்.ஜீ. யின் அடுத்த கூட்டங்களை கப்பல்துறை மற்றும் கப்பல்துறை செயலாளர் மட்டப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பத் திகதியில் நடாத்துவதற்கும் அவர்கள் அறிவுறுத்தினர்.
- இரு தரப்பினரின் பரஸ்பரம் நன்மைக்காக பல இலங்கை வர்த்தக நிறுவனங்கள் பங்களாதேஷில் முதலீடு செய்துள்ளன என்பதை இரு தரப்பினரும் திருப்தியுடன் குறிப்பிட்டனர். ஆடை, பின்னலாடை, கைத்தறி, தோல், மருந்துகள், விவசாயம் சார்ந்த தொழில்கள், உருக்கு மற்றும் பொறியியல், தகவல் தொழில்நுட்பம், கல்வி, சுகாதாரம் மற்றும் விருந்தோம்பல் போன்ற துறைகளில் இலங்கை முதலீடு செய்வதை பங்களாதேஷ் வரவேற்றது. இலங்கையில் மருந்து, பெறுமதி சேர்க்கப்பட்ட ஆடை, உணவுப் பதப்படுத்துதல், தளவாடங்கள், சுற்றுலா மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளில் உள்ள புதிய வாய்ப்புக்களை கண்டறிவதற்காக, இலங்கைப் பிரதமர் பங்களாதேஷ் வர்த்தகத் துறையினருக்கு அழைப்பு விடுத்தார்.இருதரப்பு முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் ஆரம்ப நிறைவை இரு தலைவர்களும் ஊக்குவித்தனர்.
- இரு நாடுகளினதும் தனியார் துறைகளுக்கிடையில், குறிப்பாக உயர்தர ஆடை, தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் மற்றும் தொடர்புடைய அறிவுத் தொழில், சணல் மற்றும் சணல் உற்பத்திகள், மத மற்றும் சுற்றுச்சூழல் சுற்றுலா, இரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் மற்றும் விலைமதிப்பற்ற உலோகம், விவசாயம் மற்றும் விவசாய செயலாக்கம், மீன்வளம் - கால்நடை - பால் - தோட்டக்கலை, சுகாதார முகாமைத்துவம், உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் கட்டுமானம், மருந்துகள், ஆற்றல் மற்றும் சக்தி ஆகியவற்றுக்கு இடையேயான ஒத்துழைப்புக்கான திறனை இரு தலைவர்களும் அங்கீகரித்தனர். இரு நாடுகளிலிருந்தும் முதலீடுகள் அதிகரித்த கூட்டு முயற்சிகள், பொது - தனியார் கூட்டாண்மை மூலம் பயனடையலாம் என அவர்கள் கோடிட்டுக் காட்டினர். இரு நாடுகளினதும் துறைசார் தொழில்கள், தொழில் சங்கங்கள், சபைகள் போன்றவற்றை முதலீடுகள் உட்பட நன்மை பயக்கும் மற்றும் முடிவு சார்ந்த ஒத்துழைப்பை நோக்கி உரையாடலுக்காக அவர்கள் ஊக்குவித்தனர்.
- ஆடைத் தொழில்களில் இரு நாடுகளினதும் அனுபவங்களைக் கருத்தில் கொண்டு, இரு தலைவர்களும் சாட்டோகிராம் பி.ஜி.எம்.இ.ஏ. ஃபெஷன் மற்றும் தொழினுட்ப நிறுவகம் மற்றும் இலங்கை ஆடை மற்றும் அணிகலன் நிறுவகம் ஆகியவற்றுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து தொடர்ந்தும் வலியுறுத்தினர்.
- பிராந்தியத்தில் இலங்கைத் தொழில் வல்லுநர்களின் மிகப்பெரிய இருப்புகளில் ஒன்றாக விளங்கும் வகையில், இலங்கைத் தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளிலான தொழில் வல்லுநர்கள் கணிசமான அளவில் பங்களாதேஷூக்கு உள்வாங்கப்படுகின்றமைக்காக இலங்கைப் பிரதமர் பங்களாதேஷுக்கு நன்றிகளைத் தெரிவித்தார். இரு நாடுகளினதும் பிரஜைகளுக்கும் எளிதான இயக்கப்பாட்டை வழங்குவதற்கு இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.
- பரந்த பொருளாதாரக் கூட்டாட்சியின் பலன்களைப் பெறுவதற்காக, இரு நாடுகளுக்கும் இடையிலான சுங்க ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தத்தின் ஆரம்ப நிறைவுக்கு தலைவர்கள் அந்தந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினர்.
- பங்களாதேஷ் முதலீட்டு அபிவிருத்தி ஆணைக்குழு மற்றும் இலங்கை முதலீட்டு சபை ஆகியவற்றுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தைப் பயன்படுத்துவதன் மூலம் அந்தந்த சிறப்பான பொருளாதார வலயங்கள், தொழில்துறைப் பூங்காக்கள், ஹைடெக் பூங்காக்கள் போன்றவற்றில் பரஸ்பரம் நன்மை பயக்கும் முதலீடுகளுக்கு இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டனர்.
- முதலீடுகள், எஸ்.டப்ளிவ்.ஏ.பி. க்கள் மற்றும் தொழில்நுட்ப சிக்கல்களில் நெருக்கமாக ஒத்துழைப்பதற்காக அந்தந்த மத்திய வங்கிகள் மற்றும் ஏனைய நிதி நிறுவனங்களைக் கோருவதற்கு இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.
- உலகின் சிறந்த தகவல் தொழில்நுட்ப சேவைகளை வெளியக அடிப்படையில் மேற்கொள்ளும் இடங்களாக இரு நாடுகளினதும் சாதனைகள் குறித்து குறிப்பிடுகையில், இரு நாடுகளினதும் தொழில்களின் சந்தைப் போட்டித்தன்மையை மேலும் விரிவுபடுத்துவதற்காக அந்தந்த போட்டிகர நன்மைகள் மற்றும் துறைசார் நிபுணத்துவப் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கு இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். இரு நாடுகளின் சம்பந்தப்பட்ட பங்குதாரர்களிடையே அதிகமான ஒத்துழைப்பு மற்றும் கூட்டாண்மைக்கு வசதியாக தகவல் தொடர்பாடல் தொழினுட்பம் மற்றும் சம்பந்தப்பட்ட தொழில் தொடர்பான ஜே.டபிள்யூ.ஜி. கூட்டத்தை நடாத்துவதற்கும் ஒப்புக்கொள்ளப்பட்டது.
- இரு நாடுகளினதும் கடற்படைக் கப்பல்களின் பயிற்சிப் பரிமாற்றம் மற்றும் நல்லெண்ண விஜயங்கள் மூலம் பாதுகாப்புத் துறையில் தொடர்ந்தும் ஒத்துழைப்பதை இரு தரப்பினரும் திருப்தியுடன் குறிப்பிட்டனர்.
- உயர்கல்வியிலான ஒத்துழைப்பின் ஆற்றலை உணர்ந்து, இரு தலைவர்களும் பங்களாதேஷ் மற்றும் இலங்கைப் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுக்களுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து வலியுறுத்தினர். அதனைக் கட்டியெழுப்புவதற்காக, இரு தரப்பினரும் இலங்கை மற்றும் பங்களாதேஷ் உயர் கல்வி நிறுவனங்களுக்கிடையில் நெருக்கமான ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கு ஒப்புக்கொண்டனர்.
- அரச மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ மற்றும் பல் ஆய்வுகள் உட்பட உயர் கல்வியைத் தொடர்வதற்கு இலங்கை மாணவர்களுக்கு பங்களாதேஷ் வழங்கிய புலமைப்பரிசில் மற்றும் வசதிகளை இலங்கை பாராட்டியது. இலங்கை மாணவர்கள் இலங்கையில் தமது கல்வித் தகுதிகளைப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் மருத்துவ மற்றும் பல் கல்லூரிகளை அங்கீகரிப்பதற்கான பிரச்சினையை விரைவாகத் தீர்த்து வைக்குமாறு இரு தலைவர்களும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினர். பங்களாதேஷ் செவிலியர்கள் மற்றும் ஏனைய சுகாதார நிபுணர்களுக்குப் பயிற்சி அளிப்பதிலான இலங்கையின் ஆதரவை பங்களாதேஷ் பாராட்டியது.
- இரு பொருளாதாரங்களினதும் மக்கள்தொகை விவரங்கள் மற்றும் வடிவங்களை அங்கீகரித்த இரு தரப்பினரும், திறன்கள் மற்றும் மனித வளங்களை மேம்படுத்துவதில் ஒத்துழைப்பதற்கும், புதுமையான கூட்டாண்மைகளை ஊக்குவிப்பதற்கும் ஒப்புக்கொண்டனர். இந்த சூழலில், இளைஞர் அபிவிருத்தியை வலுப்படுத்துவதற்கான ஒத்துழைப்பு குறித்து இரு நாடுகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டமையை அவர்கள் வரவேற்றனர்.
- இரு நாடுகளுக்கிடையிலான கடல்சார் விவகாரங்கள் மற்றும் நீலப் பொருளாதாரத்தில் ஒத்துழைப்புக்கான சாத்தியத்தை உணர்ந்த இரு தலைவர்களும், வங்காள விரிகுடாவை அமைதி, அபிவிருத்தி மற்றும் செழிப்பு ஆகியவற்றின் ஒரு பிராந்தியமாக வளர்ப்பதற்கான வாய்ப்புகளைக் கண்டறிவதற்காக புதிய பகுதிகள் மற்றும் புதுமையான வழிகளை ஆராய்வத்காக ஒன்றாக இணைந்து பணியாற்றுவதற்கு ஒப்புக்கொண்டனர். ஆழ்கடல் மீன்பிடியில் இலங்கையின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்கு பங்களாதேஷ் தரப்பு ஆர்வம் காட்டியது. இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தில் இலங்கையின் தலைமை வகிபாகத்தை பங்களாதேஷ் பிரதமர் பாராட்டினார். 2021 - 2023 காலப்பகுதிக்கு இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பங்களாதேஷை இலங்கைப் பிரதமர் வாழ்த்தினார்.
- மக்களுக்கிடையிலான தொடர்பு, சுற்றுலா மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக மேம்படுத்தப்பட்ட விமான இணைப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்த இரு தரப்பினரும், இரு நாடுகளுக்கிடையில் அதிகரித்து வரும் விமானப் போக்குவரத்தின் தேவையை பூர்த்தி செய்வதற்காக கொழும்புக்கு பங்களாதேஷ் விமான சேவையை ஆரம்பத் திகதியில் தொடங்குவதற்கு ஒப்புக்கொண்டனர்.
- விவசாயத் துறை மற்றும் நன்னீர் மீன்வளத்தில் பங்களாதேஷின் முன்னேற்றத்தைப் பூர்த்திசெய்து பங்களாதேஷின் அனுபவத்திலிருந்து பயனடைவதற்கான ஆர்வத்தை இலங்கைப் பிரதமர் வெளிப்படுத்தினார். விவசாய செயலாக்கம், விவசாய வணிகம், தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு, இரு நாடுகளினதும் தனியார் துறையை உள்ளடக்கிய விநியோகச் சங்கிலி அபிவிருத்தி ஆகியவற்றின் மூலம் ஒத்துழைப்பின் வாயிலாக விவசாயத்தில் விரிவான ஒத்துழைப்பை வளர்ப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து அவர்கள் வலியுறுத்தினர். பங்களாதேஷில் விவசாய விரிவாக்கம், நடைமுறைகள், நெல் விவசாயத்தில் புதுமை மற்றும் பங்களாதேஷில் நன்னீர் மீன்வளம் ஆகியவற்றின் வெளிப்பாட்டு வருகை / பயிற்சிக்காக இலங்கையின் பிரதிநிதிகளைப் பெற்றுக் கொள்வதற்கு பங்களாதேஷ் முன்வந்தது. பங்களாதேஷ் விவசாய ஆராய்ச்சி சபை மற்றும் இலங்கை விவசாய ஆராய்ச்சி மற்றும் கொள்கைக்கான சபை ஆகியவற்றுக்கு இடையே 2011 இல் கைச்சாத்திடப்பட்ட பணித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து இரு தரப்பினரும் வலியுறுத்தினர். பங்களாதேஷ் விவசாய ஆராய்ச்சி சபை மற்றும் இலங்கை விவசாய ஆராய்ச்சி மற்றும் கொள்கைக்கான சபை ஆகியவற்றுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பதை இரு தரப்பினரும் வரவேற்றதுடன், அதை விரைவாக செயற்படுத்தவும் பின்தொடரவும் ஒப்புக் கொண்டனர்.
- காலநிலைப் பாதிப்புக்குள்ளான நாடுகளின் மன்றத்தின் தலைவராக காலநிலை மாற்றத்தின் சவால்களை எதிர்கொள்வதில் பங்களாதேஷின் தலைமை வகிபாகத்தை இலங்கைப் பிரதமர் பாராட்டியதோடு, 2019 அக்டோபரில் கொழும்பில் இறுதி செய்யப்பட்ட நிலையான நைதரசன் முகாமைத்துவம் குறித்த கொழும்புப் பிரகடனத்தில் சேருவதற்காக பங்களாதேஷூக்கு அழைப்பு விடுத்தார். இரு நாடுகளினதும் காலநிலைப் பாதிப்புக்களின் பொதுவான சவால்களை எதிர்கொள்வதற்காக இரு தலைவர்களும் காலநிலைப் பாதிப்புக்குள்ளான நாடுகளின் மன்றத்தில் இணைந்து பணியாற்றுவதற்கு ஒப்புக்கொண்டனர். இடர் முகாமைத்துவம் மற்றும் காலநிலை மாற்றத் தழுவல் திறன்களிலான தனது அறிவு, நிபுணத்துவம் மற்றும் அனுபவத்தை இலங்கையுடன் பகிர்ந்து கொள்வதற்கு பங்களாதேஷ் முன்வந்தது.
- இரு நாடுகளினதும் மக்களிடையே வளர்ந்து வரும் தொடர்புகளை ஒப்புக் கொண்ட இரு தலைவர்களும், குறிப்பாக கலாச்சாரப் பரிமாற்றத் திட்டத்தைப் பயன்படுத்துவதன் மூலம் மக்களுக்கிடையிலான தொடர்பு மற்றும் கலாச்சாரப் பரிமாற்றத்தை ஆழப்படுத்துவதற்கு ஒப்புக்கொண்டனர்.
- சுற்றுலாவில் குறிப்பாக பிராந்திய சுற்றுலாவின் குறிப்பிடத்தக்க ஆற்றலைக் குறிப்பிட்டு, இரு நாடுகளினதும் சுற்றுலா நடத்துநர்கள் மற்றும் ஏனைய தொடர்புடைய விருந்தோம்பல் துறைப் பங்குதாரர்களை உள்ளடக்கிய சுற்றுலாத்துறைக்கான ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், சுற்றுலா, சந்தைப்படுத்தல் மற்றும் விளம்பர நடவடிக்கைகள், பௌத்த சுற்று மற்றும் தனியார் துறைகள் ஆகியவற்றில் கூட்டு முதலீடு செய்வதில் சிறப்பான கவனம் செலுத்துவதற்கும் இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். இந்த சூழலில், இரு நாடுகளுக்கிடையில் சுற்றுலாவுக்கான கடலோர பயணக் கப்பல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு பங்களாதேஷ் முன்மொழிந்தது.
- பன்முகத்தன்மை மீதான தமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய இரு தரப்பினரும், ஐ.நா. மற்றும் ஏனைய பிராந்திய மற்றும் சர்வதேசத் தளங்களில் காலநிலை மாற்றம், இடர் முகாமைத்துவம், இடம்பெயர்வு, சுகாதாரம், அமைதி காத்தல், ஆட்கடத்தல் போன்ற சமகால பன்முகப் பிரச்சினைகள் குறித்து இரு நாடுகளுக்கிடையில் அதிகரித்த தொடர்பு மற்றும் ஒத்துழைப்பை ஒப்புக் கொண்டனர். நிலையான அபிவிருத்தி மற்றும் நிலையான அபிவிருத்தி இலக்குகளுக்கான நிகழ்ச்சி நிரல் 2030 ஐ திறம்பட உணர்வதற்காக அந்தந்த அறிவு, யோசனைகள், புதுமைகளைப் பகிர்ந்து கொள்வதற்கும் அவர்கள் மேலும் ஒப்புக்கொண்டனர்.
- இரு தலைவர்களும் வளமான, அமைதியான, நிலையான, அனைத்தையும் உள்ளடக்கிய மற்றும் நிலையான தெற்காசியப் பிராந்தியத்தின் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டினர். பிம்ஸ்டெக், சார்க் மற்றும் ஐயோரா போன்ற பல்வேறு துணைப் பிராந்திய மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு வழிமுறைகளில் கவனம் செலுத்திய மற்றும் முடிவு சார்ந்த பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பை நோக்கி செயற்படுவதற்கான ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கு அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
- டப்ளிவ்.எச்.ஓ. எஸ்.ஈ.ஏ.ஆர்.ஓ. இன் பிராந்தியப் பணிப்பாளர் பதவிக்காக, பங்களாதேஷின் வேட்பாளருக்கான இலங்கையின் ஆதரவை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
- பின்வரும் இருதரப்பு ஆவணங்களில் கைச்சாத்திடுதல் / புதுப்பித்தல் குறித்து இரு தலைவர்களும் ஆழ்ந்த திருப்தியை வெளிப்படுத்தினர்:
அ. இளைஞர் அபிவிருத்தியை வலுப்படுத்துவதற்கான ஒத்துழைப்பு குறித்து இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசாங்கத்திற்கும் பங்களாதேஷ் மக்கள் குடியரசின் அரசாங்கத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
ஆ. இலங்கையின் விவசாய ஆராய்ச்சிக் கொள்கைக்கான சபைக்கும் பங்களாதேஷ் விவசாய ஆராய்ச்சி சபைக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
இ. இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழு மற்றும் தொழில்சார் தகுதி குறித்த ஆவணப் பரிமாற்றம் குறித்த பங்களாதேஷ் மக்கள் குடியரசின் கல்வி அமைச்சின் தொழில்நுட்ப கல்விப் பணியகம ஆகியவற்றுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
ஈ. இலங்கையில் உள்ள பங்களாதேஷ் செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் பயிற்சியின் ஒத்துழைப்புக்காக இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசாங்கத்திற்கும் பங்களாதேஷ் மக்கள் குடியரசின் அரசாங்கத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
உ. லட்க்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச உறவுகள் மற்றும் மூலோபாய ஆய்வுகள் நிறுவனம் மற்றும் பங்களாதேஷ் சர்வதேச மற்றும் மூலோபாய ஆய்வுகள் நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையிலான ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
ஊ. 2021 - 2025 ஆண்டுகளுக்கான பங்களாதேஷ் மக்கள் குடியரசின் அரசாங்கத்திற்கும் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசாங்கத்திற்கும் இடையிலான கலாச்சாரப் பரிமாற்றத் திட்டம்.
- இரு நாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட அனைத்து இருதரப்பு ஆவணங்களையும் உரிய முறையில் நடைமுறைப்படுத்துவதற்கு உடனடி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக இரு தலைவர்களும் இரு நாடுகளினதும் சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு உத்தரவிட்டனர்.
- இந்த விஜயத்தின் போது தனக்கும், தனது பிரதிநிதிகள் குழுவினருக்கும் பங்களாதேஷ் அரசாங்கம் மற்றும் அதன் மக்களால் வழங்கப்பட்ட அன்பான விருந்தோம்பல் மற்றும் மரியாதையை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பாராட்டினார்.
- இலங்கை மற்றும் பங்களாதேஷுக்கு இடையில் இராஜதந்திர உறவுகளை ஸ்தாபித்த 50ஆவது ஆண்டு நிறைவையொட்டி 2022 ஆம் ஆண்டில் இலங்கைக்கு அரச விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட பிரதமர் ஷேக் ஹசீனா, நிலைமை அனுமதித்தால் கொண்டாட்டங்களில் இணைந்து கொள்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார்.
டாக்கா
2021 மார்ச் 20