சர்வதேச சமாதானத்திற்கான மெக்ஸ் பிளாங்க் அறக்கட்டளை மற்றும் சட்டத்தின் ஆட்சி மற்றும் இந்து சமுத்திர விளிம்பு சங்கம் (ஐயோரா) ஆகியவற்றுடன் இணைந்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு ஏற்பாடு செய்த 'கடல் பாதுகாப்புக்கான ஒத்துழைப்பு' குறித்த மூன்று நாள் பட்டறை மார்ச் 23ஆந் திகதி நிறைவடைந்தது.
உள்நாட்டுச் சட்டத்திற்கும் ஐக்கிய நாடுகளின் கடல் சட்டம் தொடர்பான சாசனத்திற்கும் இடையே உள்ள இடைவெளிகளைக் கண்டறிவதற்காக, ஐயோரா உறுப்பு நாடுகள் குறித்த நுண்ணறிவுப் பகுப்பாய்வை இந்தப் பட்டறை வழங்கியது. ஐயோரா உறுப்பு நாடுகளான அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், பிரான்ஸ், இந்தியா, இந்தோனேசியா, ஈரான், கென்யா, மடகாஸ்கர், மலேசியா, மாலைதீவு, மொரிஷியஸ், மொசாம்பிக், சீஷெல்ஸ், சோமாலியா, தென்னாபிரிக்கா, தன்சானியா, தாய்லாந்து, எமன் ஆகியவற்றின் கடல்சார் காவல் மற்றும் பாதுகாப்பின் மையப் புள்ளிகள் மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, இலங்கை கடற்படை மற்றும் இலங்கை கடலோர காவல்படை ஆகியவற்றின் அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். ஐயோரா, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் உரையாடல் கூட்டாளர்களின் பங்கேற்பாளர்களும் இந்தப் பட்டறையில் இணைய வழியில் இணைந்தனர்.
நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்தின் பேராசிரியரும், சர்வதேச சட்ட சங்கத்தின் அவுஸ்திரேலியக் கிளையின் தலைவருமான நடாலி க்ளீன், மெக்ஸ் பிளாங்க் அறக்கட்டளையின் சிரேஷ்ட ஆராய்ச்சிக் கூட்டாளர் அரோன் என். ஹொனிபோல், மெக்ஸ் பிளாங்க் அறக்கட்டளையின் ஆராய்ச்சிக் கூட்டாளர் எகோர் எஸ். ஃபெடோரோவ், போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் உலகளாவிய கடல்சார் குற்றத் திட்டத்தின் திட்ட உதவி அதிகாரி அஸ்யுர சலே மற்றும் இலங்கை கடற்படை மற்றும் இலங்கை கடலோரக் காவல்படையின் நிபுணர்கள் இந்த அமர்வை நடத்தினர்.
2023 மார்ச் 20ஆந் திகதி வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தனவினால் ஆரம்பிக்கப்பட்ட கடல்சார் காவல் மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஐயோரா செயற்குழுவின் 3வது கூட்டத்தின் பக்க அம்சமாக இந்த செயலமர்வு நடைபெற்றதுடன், இதில் கொழும்பில் உள்ள ஐயோரா உறுப்பு நாடுகள் மற்றும் உரையாடல் கூட்டாளர் நாடுகளின் தூதரகத் தலைவர்கள், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, மீன்பிடி அமைச்சு, இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படை, இலங்கை கடலோரக் காவல்படை, இலங்கை துறைமுக அதிகாரசபை, வணிகக் கப்பல் செயலகம், இடர் முகாமைத்துவ நிலையம், கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணைக்குழு, போதைப்பொருள் மற்றும் குற்றத்திற்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகம் ஆகியவற்றின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் மெக்ஸ் பிளாங்க் அறக்கட்டளையின் அதிகாரிகள் மற்றும் ஜி.ஐ.இசட். இன் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,
கொழும்பு
2023 மார்ச் 27