இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி. எஸ். ஜெய்ஷங்கர் தனது முதலாவது வெளிநாட்டு விஜயத்தை இலங்கைக்கு 2021 ஜனவரி 05 முதல் 07 வரை மேற்கொள்ளவுள்ளார்

இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி. எஸ். ஜெய்ஷங்கர் தனது முதலாவது வெளிநாட்டு விஜயத்தை இலங்கைக்கு 2021 ஜனவரி 05 முதல் 07 வரை மேற்கொள்ளவுள்ளார்

வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன அவர்களின் அழைப்பின் பேரில் இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி. எஸ். ஜெய்ஷங்கர் 2021 ஜனவரி 05 முதல் 07 வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். அமைச்சர் ஜெய்சங்கர் தனது விஜயத்தின் போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோருடன் இருதரப்பு சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளார்.

இந்த உத்தியோகபூர்வ விஜயமானது, 2021ஆம் ஆண்டில் இலங்கைக்கு மேற்கொள்ளப்படும் உயர்மட்ட வெளிநாட்டுப் பிரமுகர் ஒருவரின் முதலாவது விஜயத்தைக் குறிக்கும் அதே வேளையில், வெளிவிவகார அமைச்சர் கலாநிதி. ஜெய்சங்கர் புத்தாண்டில் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு விஜயமாகவும் திகழ்கின்றது. 2019 நவம்பரில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் இலங்கைக்கு விஜயம் செய்த முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டுப் பிரமுகரான வெளிவிவகார அமைச்சர் கலாநிதி. ஜெய்சங்கர், அப்போது வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது முதலாவது அரச விஜயத்தை இந்தியாவிற்கு மேற்கொள்வதற்கான பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பையும் தெரிவித்திருந்தார். உயர் மட்டப் பரிமாற்றங்களின் மூலம், ஒத்துழைப்பின் பல துறைகளில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கு இரு தரப்பினரும் எதிர்பார்த்துள்ளனர்.

இரு நாடுகளிலுமான கோவிட்-19 பயணக் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில், காற்றுக் குமிழி பாதுகாப்பு முறைமையில் இந்த விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வெளிநாட்டு அமைச்சு

கொழும்பு

2021 ஜனவரி 04

Please follow and like us:

Close