இலங்கை மற்றும் சுவிட்சர்லாந்தின் வெளிவிவகார அமைச்சர்கள் சுவிஸ் தூதரகத்தின் இலங்கை ஊழியரின் கைது குறித்து கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்

இலங்கை மற்றும் சுவிட்சர்லாந்தின் வெளிவிவகார அமைச்சர்கள் சுவிஸ் தூதரகத்தின் இலங்கை ஊழியரின் கைது குறித்து கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்

வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கு சுவிஸ் தூதரகத்தில் உள்ள இலங்கை ஊழியரான கார்னியர் பானிஸ்டர் பிரான்சிஸின் நிலை குறித்து இன்று (டிசம்பர் 18) மாலை சுவிட்சர்லாந்து வெளிவிவகார அமைச்சர் இக்னாசியோ காசிஸ் தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்டார். அவர் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் அரசாங்கத்திற்கு எதிரான அதிருப்தி மற்றும் நீதித்துறை நடவடிக்கைகளின் எந்தக் கட்டத்திலும் பயன்படுத்தப்படுவதற்கான தவறான ஆதாரங்களை இட்டுக்கட்டுதல் போன்ற குற்றச்சாட்டுக்களை நியாயப்படுத்தக்கூடிய தண்டனைச் சட்டக் கோவையின் 120 மற்றும் 190 ஆம் பிரிவுகளின் கீழ் குற்றங்களை மேற்கொண்டதாக நியாயமான சந்தேகத்தின் பேரில் அவர் தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான சிறந்த இருதரப்பு உறவுகளை கருத்தில் கொண்டு, இந்த செயன்முறையை விரைவுபடுத்துவதற்கு சாத்தியமான அனைத்து ஒத்துழைப்புக்களையும் விரிவுபடுத்துமாறு சுவிஸ் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

திருமதி. பிரான்சிஸ் ஒரு இலங்கைப் பிரஜை என்பதனையும், இந்த விடயம் தற்போது நீதிமன்றத்தில் இருப்பதனையும் சுட்டிக்காட்டிய அமைச்சர் குணவர்தன, நாட்டின் சட்டத்தின் பிரகாரம் மேற்கொள்ளக்கூடிய தன்னால் முடிந்த அனைத்தையும் இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் எனத் தெரிவித்தார். திருமதி. பிரான்சிஸுக்கு சாத்தியமான அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன என்றும் அவரின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் குணவர்தன மீண்டும் உறுதிப்படுத்தினார்.

கடந்த செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 17) சுவிஸ் வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்டிருந்த அறிக்கை தொடர்பில் குறிப்பிடுகையில், தேசிய சட்டம் மற்றும் சர்வதேச நீதித் தரங்களை இலங்கை முழுமையாகக் கடைப்பிடித்தது என்றும், அதற்குப் புறம்பான எந்தவொரு கூற்றும் உண்மையில் தவறானது என்றும் வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் குணவர்தன வலியுறுத்தினார். குறித்த சம்பவம் இடம்பெற்றதாகக் கூறப்படும் 13 நாட்களின் பின்னர் சுவிஸ் தூதரகம் திருமதி. பிரான்சிஸை குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு ஒப்படைத்ததனூடாக சம்பவம் குறித்து முதன்முதலாக முறைப்பாடு செய்யப்பட்டதிலிருந்து தற்போது வரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை அவர் விவரித்ததுடன், இரண்டு நாடுகளும் மதிப்பளிக்கும் சர்வதேச விதிமுறைகளுக்கு அமைவாக ஒவ்வொரு படிமுறையிலும் உரிய செயன்முறை கடைபிடிக்கப்பட்டுள்ளது என்பதை வலியுறுத்தினார்.

இருதரப்பு உறவுகளை பலப்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்திய அமைச்சர் குணவர்தன, இது தொடர்பாக வெளிநாட்டு உறவுகள் அமைச்சு கொழும்பில் உள்ள சுவிஸ் தூதுவருடன் தொடர்ச்சியாக கலந்துரையாடல்களில் ஈடுபடும் என ஒப்புக் கொண்டார்.

வெளிநாட்டு உறவுகள் அமைச்சு

கொழும்பு

18 டிசம்பர் 2019

 

Please follow and like us:

Close