ஸ்டொக்ஹோமில் நடைபெறும் 02வது இந்தோ-பசிபிக் அமைச்சர்கள் மட்டத்திலான மன்றத்தில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பங்கேற்கவுள்ளார்

ஸ்டொக்ஹோமில் நடைபெறும் 02வது இந்தோ-பசிபிக் அமைச்சர்கள் மட்டத்திலான மன்றத்தில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பங்கேற்கவுள்ளார்

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி 2023 மே 13ஆந் திகதி நடைபெறுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள 02வது இந்தோ-பசிபிக் அமைச்சர்கள் மட்டத்திலான மன்றத்தில் பங்கேற்பதற்காக இன்று காலை (11/5) சுவீடனின் ஸ்டொக்ஹோமுக்கு புறப்பட்டார்.  ஐரோப்பிய ஒன்றிய பேரவையின் சுவீடன் தலைமைத்துவத்தின் கீழ் ஐரோப்பிய வெளி நடவடிக்கை சேவையுடன் இணைந்து இந்த மன்றம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சுவீடனின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் டோபியாஸ் பில்ஸ்ட்ரோம் மற்றும் வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கைக்கான உயர் பிரதிநிதி மற்றும் ஐரோப்பிய ஆணைக்குழுவின் துணைத் தலைவர் ஜோசப் பொரெல் ஆகியோர் இந்த மன்றத்திற்கு இணைத் தலைமை தாங்கவுள்ளனர்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் சப்ரி, மன்றத்தின் மூன்று வட்ட மேசை அமர்வுகளில் ஒன்றான 'மேலும் நிலையான மற்றும் உள்ளடக்கிய செழுமையை ஒன்றாகக் கட்டியெழுப்புதல்' என்ற தொனிப்பொருளின் கீழான 01வது வட்ட மேசை அமர்வுக்கு இணைத் தலைமை தாங்குவார்.

ஒஸ்ட்ரியா, டென்மார்க், பின்லாந்து, லட்வியா, நெதர்லாந்து, ருமேனியா மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர்கள் உட்பட பங்கேற்கும் பல வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர்களுடன் அமைச்சர் சப்ரி இருதரப்புக் கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார். சுவீடனில் உள்ள வர்த்தக சமூகத்தை, குறிப்பாக தலைமை நிறைவேற்று அதிகாரிகள் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் சிரேஷ்ட அதிகாரிகளையும் அமைச்சர் சந்திக்கவுள்ளார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,

கொழும்பு

2023 மே 11

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close