ஐக்கிய இராச்சியத்துடனான இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை முடுக்கிவிடுவது குறித்து வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் குணவர்தன மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் சர்வதேச வர்த்தக அமைச்சர் கலந்துரையாடல்

ஐக்கிய இராச்சியத்துடனான இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை முடுக்கிவிடுவது குறித்து வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் குணவர்தன மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் சர்வதேச வர்த்தக அமைச்சர் கலந்துரையாடல்

 

இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டை முடுக்கிவிடுதல் மற்றும் ஒத்துழைப்புப் பகுதிகளை விரிவாக்குதல் குறித்து வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் கெளரவ தினேஷ் குணவர்தன மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் சர்வதேச வர்த்தக அமைச்சர் கெளரவ ரணில் ஜயவர்தன ஆகியோர் தொலைபேசி வாயிலான மாநாடொன்றின் மூலமாக நேற்று கலந்துரையாடினர். இரண்டு அமைச்சர்களுக்குமிடையிலான முதலாவது உத்தியோகபூர்வ தொடர்பாடல் இதுவாகும்.

 

அதிகரித்த வர்த்தகம், பாதுகாப்பு, ஆராய்ச்சி மற்றும் பயிற்சி, விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் கலாச்சார ஒத்துழைப்பு ஆகியவற்றின் மூலம் நீண்டகால இருதரப்பு ஈடுபாட்டை மேலும் பலப்படுத்துவதை இரு அமைச்சர்களும் வரவேற்றனர். குறிப்பாக, கோவிட்-19 தொற்றுநோயின் விளைவாக இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகியவற்றுக்கான சவால்களை எதிர்கொள்வதற்கான நெருக்கமான ஒத்துழைப்பின் தேவைப்பாடு குறித்து கெளரவ அமைச்சர்கள் குணவர்தன மற்றும் ஜயவர்தன ஆகியோர் ஒப்புக்கொண்டனர். விநியோகச் சங்கிலிகளை நகர்த்துவதற்கானதும், சிக்கலான பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக பிரயாண மற்றும் சுற்றுலாத் துறைகளைத் திறப்பதற்கானதுமான முக்கியத்துவத்தை இரு பிரமுகர்களும் கண்டறிந்தனர். இலங்கையிலிருந்து ஐக்கிய இராச்சியத்தின் சந்தைகளுக்கான புதிய ஏற்றுமதித் தயாரிப்புக்களின் வாய்ப்புக்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

 

பொதுநலவாய உறுப்பினர்கள் என்ற வகையில் இங்கிலாந்துக்கும் இலங்கைக்குமிடையிலான பகிரப்பட்ட மதிப்புக்கள் மற்றும் நலன்களை நினைவு கூர்ந்த கெளரவ அமைச்சர் குணவர்தன, இந்த அமைப்பில் தொடர்ந்தும் பங்கேற்பதற்கான இலங்கையின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

 

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு கெளரவ அமைச்சர் ரணில் ஜயவர்தனவுக்கு வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் கெளரவ குணவர்தன அழைப்பு விடுத்தார்.

 

 

வெளிநாட்டு உறவுகள் அமைச்சு

கொழும்பு

 

24 ஜூலை 2020

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close