இலங்கையும் அவுஸ்திரேலியாவும் முதலாவது கடல்சார் உரையாடல் மற்றும் மூன்றாம் சுற்று சிரேஷ்ட உத்தியோகத்தர்களின் பேச்சுவார்த்தைகளை கொழும்பில் நிறைவு செய்தன

இலங்கையும் அவுஸ்திரேலியாவும் முதலாவது கடல்சார் உரையாடல் மற்றும் மூன்றாம் சுற்று சிரேஷ்ட உத்தியோகத்தர்களின் பேச்சுவார்த்தைகளை கொழும்பில் நிறைவு செய்தன

01

இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான மூன்றாவது சுற்று சிரேஷ்ட உத்தியோகத்தர்களின் பேச்சுவார்த்தைகள் 2019 செப்டம்பர் 17 ஆந் திகதி கொழும்பிலுள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் இடம்பெற்றன.

இலங்கை தூதுக்குழுவிற்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் இருதரப்பு விவகாரங்கள் (கிழக்கு) பிரிவின் மேலதிக செயலாளர் பி. செல்வராஜ் தலைமை தாங்கியதுடன், அவுஸ்திரேலிய தூதுக்குழுவிற்கு வெளி விவகார மற்றும் அவுஸ்திரேலிய வர்த்தகத் திணைக்களத்தின் தென்மேற்கு ஆசியா பிரிவின் முதல் உதவிச் செயலாளர் கலாநிதி லாச்லன் ஸ்ட்ராஹான் தலைமை தாங்கினார்.

நாடுகடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம், பாதுகாப்பு, நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள், அபிவிருத்திப் பங்காண்மை, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் ஒத்துழைப்பு, பிராந்திய மற்றும் பலதரப்பு பிரச்சினைகள் உள்ளிட்ட உறவுகளின் பரந்த அளவிலான முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இரு நாடுகளும் விரிவான கலந்துரையாடல்களில் ஈடுபட்டன. இரு தரப்பினரும் உறவில் சிறந்த உத்வேகத்தைத் தக்க வைத்துக் கொள்ள ஒப்புக் கொண்டதுடன், விதியொன்றின் அடிப்படையிலான திறந்த மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய பிராந்திய ஒழுங்கிற்கும், இந்து சமுத்திர விளிம்பு சங்கம் மற்றும் இந்து சமுத்திர கடற்படைக் கருத்தரங்கு உள்ளிட்ட பிராந்திய கட்டமைப்புக்களை வலுப்படுத்துவதற்குமான தமது உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டினர்.

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு இடையே 2019 செப்டம்பர் 16 ஆந் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் இடம்பெற்ற மூலோபாய கடல்சார் உரையாடலின் ஆரம்ப அமர்வுக்கு முன்னதாக சிரேஷ்ட உத்தியோகத்தர்களின் பேச்சுவார்த்தைகளின் மூன்றாவது சுற்று நடைபெற்றது. இலங்கைத் தூதுக்குழுவிற்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பல்தரப்பு விவகாரங்களுக்கான மேலதிக செயலாளர் அகமத் ஏ. ஜவாத் தலைமை தாங்கியதுடன், அவுஸ்திரேலிய தூதுக்குழுவிற்கு முதல் உதவிச் செயலாளர் கலாநிதி லாச்லன் ஸ்ட்ராஹான் தலைமை தாங்கினார். இந்து சமுத்திர கடல்சார் பாதுகாப்பு குறித்து ஒன்றிணைந்து செயற்படுவதன் முக்கியத்துவம் மற்றும் நீலப் பொருளாதாரம் தொடர்பான முன்முயற்சிகளில் ஒத்துழைப்பதன் முக்கியத்துவம் ஆகியன குறித்து இந்த உரையாடலின் போது சுட்டிக்காட்டப்பட்டது.

இரு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு வர்த்தக மற்றும் முதலீட்டுக் கட்டமைப்பு ஏற்பாடு தொடர்பான இணைந்த ஆணைக்குழு (TIFA) 2019 செப்டம்பர் 17ஆந் திகதி நடைபெற்றது. அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சின் செயலாளர் எஸ்.டி. கொடிக்கார மற்றும் முதல் உதவிச் செயலாளர் கலாநிதி லாச்லன் ஸ்ட்ராஹான் ஆகியோரினால் இணைந்து தலைமை தாங்கப்பட்ட TIFA பேச்சுவார்த்தைகளின் போது, வலுவான வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை விருத்தி செய்வதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

1947 ஆம் ஆண்டில் இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டதிலிருந்து, இலங்கையும் அவுஸ்திரேலியாவும் ஏழு தசாப்தங்களாக அரசியல், பொருளாதாரம், அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு விடயங்கள் உட்பட பல்வேறு வகையான ஒத்துழைப்பு விடயங்களில் நீண்டகால இருதரப்பு உறவை அனுபவித்து வருகின்றன.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் சிரேஷ்ட உத்தியோகத்தர்களின் பேச்சுவார்த்தைகள், இரு நாடுகளின் கொள்கை முன்னுரிமைகளுக்கு ஏற்ப எதிர்கால ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிகளைப் பற்றி விவாதிப்பதற்கும், தற்போதுள்ள உறவுகளைப் பகிர்ந்து கொள்வதற்கும் இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவிற்கும் இடையிலான பிரதான தளமாக விளங்குகின்றது.

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் டேவிட் ஹோலி, பாதுகாப்புத் திணைக்களத்தின் உலகளாவிய நலன்கள் உதவிச் செயலாளர் ஜாரோட் ஹோவர்ட், புது தில்லியிலுள்ள அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயத்தின் உள்துறை விவகாரங்களுக்கான அமைச்சர் - ஆலோசகர் டாரா கவனாக், வெளிவிவகார மற்றும் வர்த்தகத் திணைக்களத்தின் இலங்கை / மாலைதீவு பிரிவிற்கான உதவிப் பணிப்பாளர் தனந்தி கலபிட்டகே மற்றும் கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயத்தின் உத்தியோகத்தர்கள் ஆகியோர் அவுஸ்திரேலிய தூதுக்குழுவில் இடம்பெற்றிருந்தனர். இலங்கை தூதுக்குழுவில், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு, சுற்றுலா, வனவிலங்கு மற்றும் கிறிஸ்தவ மத விவகாரங்கள் அமைச்சு, சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் சுதேச மருத்துவ அமைச்சு, வெளியக வளங்கள் திணைக்களம், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் மற்றும் சிறைச்சாலைத் தலைமையகம் ஆகியவற்றின் சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் இடம்பெற்றிருந்தனர்.

சிரேஷ்ட உத்தியோகத்தர்களின் பேச்சுவார்த்தைகளின் அடுத்த சுற்று 2021ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியாவின் கன்பெர்ரா நகரில் நடைபெறும்.

 

 

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,

கொழும்பு

 

19 செப்டம்பர் 2019

03

04

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close