பங்களாதேஷில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் பேராசிரியர் சுதர்சன் செனவிரத்ன மற்றும் முதல் செயலாளர் - வர்த்தகம் ஸ்ரீமாலி ஜயரத்ன ஆகியோர் டாக்கா வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் புதிதாக நியமிக்கப்பட்ட தலைவர் சமீர் சத்தாருடன் 2023 ஜனவரி 29ஆந் திகதி டாக்காவிலுள்ள டாக்கா வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளன அலுவலகத்தில் சந்தித்தனர்.
டாக்கா வர்த்தக மற்றும் தொழில்துறை தலைவர் சமீர் சத்தார், கடந்த ஐந்து ஆண்டுகளில் இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பின் நேர்மறையான அபிவிருத்தியைப் பாராட்டினார். துறைமுக முகாமைத்துவம், உட்கட்டமைப்பு ஆகிய துறைகளில் தொழில்நுட்ப அறிவைப் பரிமாறிக்கொள்வதன் முக்கியத்துவத்தை அவர் மேலும் வலியுறுத்தினார். பங்களாதேஷ் மற்றும் இலங்கைக்கு இடையில் பேச்சுவார்த்தையில் உள்ள முன்னுரிமை வர்த்தக உடன்படிக்கைக்கு டாக்கா வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் சாதகமான நம்பிக்கையைக் கொண்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே இருதரப்பு பொருளாதார உறவுகளை மேம்படுத்தும் வகையில் வணிகக் கூட்டங்கள் மற்றும் கருத்தரங்குகளை ஏற்பாடு செய்வதற்கும், தொடர்புடைய ஏனைய நடவடிக்கைகளை ஏற்பாடு செய்வதற்குமான தொடர்ச்சியான ஆதரவை டாக்கா வர்த்தக மற்றும் கைத்தொழில் தலைவர் உறுதியளித்தார்.
இரு நாடுகளுக்குமிடையில் நடைபெற்று வரும் முன்னுரிமை வர்த்தக உடன்படிக்கையை நிறைவு செய்தல், சுற்றுலாத்துறை ஒத்துழைப்பை ஊக்குவித்தல் மற்றும் பங்களாதேஷ் முதலீடுகளை இலங்கைக்கு ஈர்த்தல் ஆகியவை பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான முக்கிய முன்னுரிமைகள் என உயர்ஸ்தானிகர் தெரிவித்தார். தகவல் தொழில்நுட்பத் துறை, கப்பல் போக்குவரத்து, திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாதாபரி போன்ற ஆழ்கடல் துறைமுகங்களின் இணையான அபிவிருத்தி மற்றும் கல்வி, விவசாயம் மற்றும் மருந்துகள் துறைகளில் ஒத்துழைப்பை அவர் மேலும் முன்மொழிந்தார். கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தில் உள்ள முதலீட்டு வாய்ப்புக்களை ஆராய்வதற்கு டாக்கா வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்திற்கு அழைப்பு விடுத்தார். வங்காள விரிகுடாவின் மூலோபாய முக்கியத்துவம் மற்றும் நீலப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புக்களை உயர்ஸ்தானிகர் சுட்டிக் காட்டினார்.
டாக்கா வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்திற்கும் பங்களாதேஷில் பணிபுரியும் இலங்கையின் பிரதம நிறைவேற்று அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்வதற்கு உயர்ஸ்தானிகர் மற்றும் டாக்கா வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் இருவரும் ஒப்புக்கொண்டனர்.
இலங்கை உயர்ஸ்தானிகராலயம்,
டாக்கா
2023 ஜனவரி 31